1968ல் வந்த கல்கி தீபாவளி மலர் மூவாயிரம் ரூபாய் !

1968ல் வந்த கல்கி தீபாவளி மலர் மூவாயிரம் ரூபாய் !
Published on

கடைசிப் பக்கம்

சுஜாதா தேசிகன்

சில மாதங்கள் முன் பழைய புத்தகம் ஒன்றைத் தேடிய போது ஒருவர் 'பழைய புத்தகங்களுக்கு என்றே ஒரு வாட்ஸ் ஆப்' குழு இருக்கிறது, அதில் முயற்சி செய்யுங்களேன்" என்றார். பொதுவாக எனக்கு 'வாட்ஸ் ஆப் குருப்' கொஞ்சம் அலர்ஜி.

காலையில் வரும் 'குட்மார்னிங்' பூக்களும், இரவில் வரும் பஞ்சாகக் குறிப்புகளிடையே ஒரு நாள் அடங்கியுள்ளது. நடுவில்  'படித்ததில் பிடித்தது' என்ற புனைபெயரில் ஒருவர் அதிகம் எழுதுகிறார். யார் என்று தெரியவில்லை.

சில ஸ்ரீ வைஷ்ணவக் குழுக்களில் அஹோபில மடத்தைவிட  'ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ்' அதிகம். (கச்சம் கட்டிக்கொண்டுதான் படிக்கவேண்டும்!). ஐந்து அறிவு படைத்த ஜோசியம் பார்க்கும் கிளிக்கூட  இரண்டு மூன்று சாமி படங்களைத் தள்ளிவிட்டு நமக்கு ஏற்ற சாமி படத்தைத் தேர்ந்தெடுக்கிறது.  ஆனால், ஆறு அறிவு படைத்த மனிதன் எல்லா சாமி படங்களையும்  தேர்ந்தெடுத்து ஃபார்வேர்ட் செய்கிறான்.

அதர்வண வேதம் க்ருமி ஸ்ம்ஹார ஸுக்தமும் சுதர்சன அஷ்டகமும் நாளைக்குத் தர்ப்பணத்துடன் சேர்ந்து சொல்ல வேண்டிய மந்திரம் போன்றவை எனக்கு அவுட் ஆப் சிலபஸ். சாய்ஸில் விட்டுவிடுவேன்.

இவ்வளவு வாட்ஸ் ஆப் குழுக்கள் இருந்தாலும், ஒரே ஆறுதல் எந்தச் செய்தியாக இருந்தாலும் பதிலாக இந்த 🙏👏👍 👌 நான்கு இமோஜிக்களில் எதையாவது ஒன்றைப் போட்டுவிடலாம்.

நிற்க. விதி யாரை விட்டது. 'பழைய புத்தகங்கள்' குழுவில் இணைந்தேன்.

நந்தினி 440 வோல்ட்ஸ்,  2.தட்டுங்கள் திறக்காது,  3.ஒரு கப் ரத்தம் மூன்று நாவல்கள் அடங்கிய பைண்டிங் புத்தகம். நடு நடுவே பல அழகிய படங்களுடன் கூடிய சினிமா துணுக்குச் செய்திகள் 400+C போன்ற செய்திகள் வரத் தொடங்கியது.  ( C – கூரியர் )

நான் தேடிக்கொண்டிருந்த புத்தகம் பற்றி அதில் கேட்டேன். உடனே ஒருவர் "அடடா போன மாசம் தான் சார் நான் அதை ஒருவருக்குக் கொடுத்தேன். இப்ப என்னிடம் 'பெண் ஏன் அடிமையானாள்" என்ற புத்தகம் இருக்கிறது. அதை வாங்கினால், இலவசமாக 'ரத்தக் கண்ணீர்' திரைப்படத்தின் வசனம் மட்டும் அடங்கிய புத்தகம் அனுப்புகிறேன் என்றார்.

இந்தக் குழுவில் நொடிக்கு ஒரு விளம்பரம் (முற்கால சோழர் வரலாறு, 1950ல் அச்சடித்த அழகான கல்யாண பத்திரிக்கை… ) என்று வந்துகொண்டே இருக்க, படிக்க ஆரம்பித்தால் அனோகொண்டா வாயில் அகப்பட்டது போல. "இவ்வளவு புத்தகங்கள் இருக்கிறதா" என்ற மலைப்பு ஒருபுறம் இருக்க ராயர் மெஸில் வரும் சூடான வடை போல உடனே விற்பனையாகும் புத்தகங்கள் சில இருக்கிறது. அதில் முதலாவது கல்கி, அமுதசுரபி, கலைமகள் போன்ற பழைய தீபாவளி மலர்கள்.

கல்கி 82ஆம் ஆண்டில் கால் எடுத்து வைக்கும் இந்த சமயத்தில் 1968ல் வந்த கல்கி  தீபாவளி மலரை மூவாயிரம் ரூபாய் கொடுத்து போட்டிப் போட்டுக்கொண்டு ஜிபேயில் வாங்கத் தயாராக இருக்கிறார்கள்!

சில வாரங்களுக்கு முன் ஒரு புத்தகம் என் கண்ணில் பட்டது. அது சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் எழுதிய 'உலக நிலை' என்ற புத்தகம். தூத்துக்குடியில் ஏதோ ஒரு முனிசிபல் நூலகத்தில் E-332 என்ற எண்ணுடன், உப்பு கறையுடன் வந்து சேர்ந்தது. முதல் பதிப்பு ஜூன் 1944.

இன்று கணினி கொண்டு படம் காண்பிக்கிறார்கள். ஆனால், சுதந்திரம் வருவதற்கு முன்பே இந்தப் புத்தகத்தில்  ராஜாஜி அவர்கள் கைக்குழந்தைக்குச் சொல்லிக்கொடுப்பது போலச் சொல்லிக்கொடுக்கிறார்.

புத்தகத்துக்கு அவர் எழுதிய சுருக்கமான முன்னுரை

"இந்த புஸ்தகத்தில் உள்ள புள்ளி விவரங்கள் யுத்தத்துக்கு முன் எடுக்கப்பட்ட கணக்கு. யுத்த காலத்தில் உலக வியாபாரமெல்லாம் கலவரப்பட்ட நிலையில் இருக்கிறபடியால் யாதொரு புதுக் கணக்கும் தேர்ந்தெடுக்க முடியாது. எடுத்தாலும், கலவரப்பட்ட காலத்திய புள்ளி விவரங்களிலிருந்து பயன்தரக் கூடிய ஆராய்ச்சி ஏதும் செய்ய முடியாது. 

இந்த யுத்தத்துக்கு முன் இருந்த நிலைமையை உலகம் மறுபடியும் அடையாது. பல பெரிய மாறுதல்கள் கட்டாயம் ஏற்படும். ஆயினும் யுத்தத்துக்கு முன் இருந்த நிலைமையையும் புள்ளி விவரங்களையும் பார்த்து நன்றாக ஆராய்ந்தால், யுத்தம் முடிந்த பிறகு உண்டாகக்கூடிய நிலைமையைப் பற்றி ஓரளவு யூகிக்கலாம்"

ஒவ்வொரு நாட்டின் அரசியல் சமூக சரித்திர நிலைமைகளை மாத்திரம் அறிந்து கொண்டால் போதாது. அது அதன் செல்வத்தையும், இயற்கை வசதிகளையும் அறிந்து கொள்வது மிக அவசியமாகும். அந்த முறையில், விரிவான புள்ளி விவர ரீதியாக உலக நிலைமையை இந்த புத்தகத்தில் மிக அழகாக படத்துடன் விளக்குகிறார் ராஜாஜி. (மாதிரிக்கு சில தந்திருக்கிறேன்)

புத்தகத்தை ஆழ்ந்து படித்துக்கொண்டு இருந்த போது 'டிங்' என்று இன்னொரு பழைய புத்தகம் பற்றிய குறிப்பு வந்தது.

'பாம்பாட்டி சித்தரின் பாடல்கள் மூலம் தங்கம் செய்யலாம் வாங்க' ( ரூ.120/- பக்கங்கள் – 60+C)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com