உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் இது ஒரு புதிய மைல்கல்

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் இது ஒரு புதிய மைல்கல்
Published on

தலையங்கம்

ண்மையில் 'பெகசஸ்' வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.

வழக்கு நடந்துக்கொண்டிருந்தபோது நீதிபதிகள் கேட்ட கேள்விகள், அரசு தரப்பின் ஆழமில்லாத பதில்களின் போக்கைக் கவனித்தவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஆச்சரியமளித்திருக்காது.

ஆனால், தீர்ப்பில் நீதிமன்றம் பயன்படுத்தி இருக்கும் மொழிதான் ஆச்சரியமானது. தீர்ப்பு மத்திய அரசைக் கடுமையாகச் சாடி இருக்கிறது. 'தேசப் பாதுகாப்பு' என்ற பூச்சாண்டி காட்டி 'நீதிமன்றத்தின் வாயை மூடிவிட முடியாது,' என்று சொல்லி இருக்கிறது. 'கேட்ட கேள்விகள் எதற்கும் அரசிடமிருந்து நேரடி பதில்கள் வரவே இல்லை. பூசி மெழுகிய விளக்கங்களே கிடைத்துக் கொண்டிருந்தன,' என்றும் சொல்லியிருக்கிறது.

மேலும் அதைவிட முக்கியமாக, 'தனி மனித அந்தரங்கம்' என்பது அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோருக்கு மட்டும் உரித்தானதல்ல. இது அனைத்துக் குடிமக்களுக்கும் இருக்கும் அடிப்படை உரிமை. "அது ஒரு புனிதமான இடம் – அதற்குள் அலட்சியமாகப் புக முடியாது," என்றும் சொல்லி இருக்கிறது. (Individual privacy is a sacred space.)

இதுவரை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளில் அரசை இத்துணை மோசமாக விமர்சித்ததில்லை.

வருங்காலத்தில் வெவ்வேறு வழக்குகளில் வாதிடுவதற்கு வழக்கறிஞர்கள் இந்த வரிகளை மேற்கோள் காட்டப் போகிறார்கள். அந்த அளவுக்குத் தனி மனித அந்தரங்கத்தைப் பாதுகாப்பதில் இந்த வார்த்தைகள் குறிப்பிடத்தக்கப் பங்கை வகிக்கப் போகிறது.

தனி மனிதர்களை அரசியல் லாபத்துக்காக வேவு பார்க்க, அரசின் செலவில் வாங்கிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது குற்றம் மட்டுமல்ல; அது அவலமான ஒரு அணுகுமுறை. அரசு வாங்கிய மொபைல் செயலி தனி மனிதர்களை வேவு பார்க்கப் பயன்படுத்தப்பட்டதா என்பதைக் கண்டறிய, தானே ஒரு நிபுணர் குழுவை அமைத்திருக்கிறது. இந்தக் குழு ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் செயல்படும். இந்த நிபுணர் குழுவின் உறுப்பினர்களையும் தானே தேர்ந்தெடுத்திருக்கிறது. இதில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள், தொழில்நுட்ப நிபுணர்கள், சைபர் க்ரைம் நிபுணர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு உடனடியாகத் தங்கள் பணியைத் துவக்க வேண்டும். அவர்களுக்கு இரண்டு மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் தீர்ப்பின் மூலம் 'பெகசஸ்' குறித்த உண்மைகள் வெளிவருமா என்பது சந்தேகம்தான். இவ்வளவு திறமையாக வடிவமைக்கப்பட்ட செயலியில் தனது தடயங்களை முழுவதுமாக அழித்துக் கொள்வதற்கும் கண்டிப்பாக வழிமுறைகள் வைத்திருப்பார்கள். ஆனால், "சாமானியனின் கடைசி புகலிடமான  நீதிமன்றம் உயிர்ப்புடன் இருக்கிறது. அதன் பணியைச் செய்கிறது"  என்ற நம்பிக்கை மீண்டும்
ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com