
யந்திரத்தில் அருளும் அம்பாள்!
குஜராத்தில் கப்பார் மலையடிவாரத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அரசூரி எனுமிடத்திலுள்ள உள்ளது அம்பாஜி ஆலயம். இது ஒரு சக்தி மையம் என்பதால் இங்கே சக்தி தேவிக்கு உருவம் கிடையாது. ஆனால், கருவறைச் சுவரில் உள்ள பிறையில் 51 எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட புனிதமான, 'விஸஸ் ரீ' சக்தி யந்திரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. யந்திரம் பொறிக்கப்பட்ட பிறைக்கு அணிகலன்களும், கவசங்களும் அணிவிக்கப்பட்டு, சர்வாலங்காரங்களுடன் அன்னை அம்பாஜியாகவே தரிசனம் அளிக்கும் வகையில் உருவம் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டியக் கோல மஹாலஷக்ஷ்மி!
மைசூரிலுள்ள சென்னராயப்பட்டினத்திற்கு அருகில் நூக்கிஹல்லி ஆலயத்தில்
ஸ்ரீ மஹாலக்ஷ்மி எட்டு கைகளுடன் நாட்டியமாடும் கோலத்திலும், ஸ்ரீ சரஸ்வதியும்,
ஸ்ரீ சித்தி வினாயகரும் நர்த்தனமாடும் திருக்கோலங்களிலும் காட்சியளிப்பது வேறு எந்த ஆலயத்திலும் காண இயலாதக் காட்சியாகும்.
நடனமாடும் சரஸ்வதி!
ஹளபேடு, ஹொய்சாளேஸ்வரர் ஆலயத்தில் பெண்கள் இருபுறங்களிலும் இசைக் கருவிகளை இசைக்க, சரஸ்வதி தேவி நடனமாடும் திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். இங்கு தேவிக்கு வெண்கொற்றக் குடையும், திருவாசியும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டுள்ளது.
கலைமகளின் அம்சமான ஏரி!
ஜப்பான் நாட்டிலுள்ள ஒஸாகாவில் 255 அடி உயர சரஸ்வதி கோயில் கட்டப்பட்டுள்ளது. ஜப்பானின் மிகப் பெரிய நன்னீர் ஏரியான பிவா ஏரி, க்யோடோவின் சரஸ்வதி கோயில் அருகில்தான் உள்ளது. இந்த ஏரி வீணையின் வடிவில் இருப்பது சுவாரஸ்யமானது. சரஸ்வதி தேவியின் அம்சமாகவும் இந்த ஏரி கருதப்படுகிறது.
ஸ்ரீ பத்ம சக்ரரூபிணி!
வந்தவாசிக்கு அருகில், சௌந்தர்யபுரம் என்ற ஊரில் ஸ்ரீ அம்புஜவல்லி சமேத
ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் உள்ளது. வேறெங்கும் காண்பதற்கரிய அபூர்வமாக
ஸ்ரீ பத்ம சக்ர ரூபியாய் ஸ்ரீ அம்புஜவல்லித் தாயார் இங்கு அவதரித்துள்ளார். திருமகளின் பரிபூரண அருட்கடாட்சத்தை அள்ளித்தருவது ஸ்ரீ பத்ம சக்ரம். மத்தியில் மேரு பர்வதத்தைக் குறிக்கும் வகையில் ஒரு கர்ணிகையும், அதையொட்டினாற்போல் இரு வளையங்களும் திகழ, அதைச் சுற்றி அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தந்தருளும்
அஷ்ட லக்ஷ்மிகள் நித்ய வாசம் புரிய, அவர்களின் மத்தியில் அம்புஜவல்லியுடன் சேர்ந்து நவசக்தியாக நம்மைக் காத்தருள்கின்றனர்.
– எஸ்.ஸ்ருதி, சென்னை
மாட்டுப்பொங்கல் சிவ தரிசனம்!
திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலில் பிராகார நந்தி, அதிகார நந்தி, அஷ்ட நந்தி ஆகியோருக்கு மாட்டுப் பொங்கலன்று சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள், பூஜை நடைபெறும். அப்பொழுது சர்க்கரைப் பொங்கல், கரும்பு, பழங்கள், வேர்க்கடலை நைவேத்தியம் செய்யப்படும். அச்சமயம் நந்தி பகவானுக்கு முன்பு
ஸ்ரீ அண்ணாமலையார் எழுந்தருளி காட்சியளிப்பார். இன்று சிவபெருமான் தமது வாகனமான நந்தி பகவானுக்கு தரிசனம் தந்து ஆசி வழங்குவதாக ஐதீகம்.
பொங்கலில் நந்திகேஸ்வரர் வழிபாடு!
திருவாவடுதுறை ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் கோயில் நந்தி பகவான், 'படர்ந்த அரசு, உயர்ந்த ரிஷபம்' என்ற அடைமொழிகளால் போற்றப்படுகிறது. அம்பிகை இங்கு பசு வடிவம் தாங்கி ஈசனை வழிபட்டதன் காரணமாக நந்திகேஸ்வரர் தனிச் சிறப்புப் பெற்றுள்ளார். மாட்டுப் பொங்கலன்று நந்திகேஸ்வரரை வழிபட்டு பலன் பெறுவோம்.
– எஸ்.ராஜம் ஸ்ரீரங்கம்