
ஆசை
உன்னை ஒரு நாளாவது
பிரிந்திருக்க வேண்டும்;
'எப்படி இருக்கீங்க'
என்று நீ
நலம் விசாரிப்பதற்கு!
——————
காலம்
சிலையை வணங்குகிறார்கள்
கவனிப்பாரின்றி
கிடக்கிறது உளி!
– பி.சி.ரகு,
விழுப்புரம்
——————
பூட்டு
பூட்டைத் திறக்க முடியாமல்
திருடன் கதவை உடைக்கிறான்;
'களவு போனதற்கு
நான் பொறுப்பல்ல'
மீசையை முறுக்குகிறது
பூட்டு!
——————
இடி
வாராக்கடன்
தள்ளுபடி
யார் தலையிலோ
விழுகிறது
இடி!
– எஸ்.பவானி,
திருச்சி
——————
எப்படிச் சொல்வேனடி?
இலைக் கூந்தல்
நெளியும்
பூச்செடிகள்
நிறைந்த
உன் வீட்டு
மேல் தளத்தை
எப்படிச் சொல்வேன்
மொட்டை மாடியென்று?!
——————
பார்க்காதே
பூனை குறுக்கே போனதற்கு
பயப்பட நீ எலியல்ல…
பல்லி சத்தமிட்டதற்கு
பதற்றப்பட
நீ பூச்சியல்ல…
சகுனங்கள் பார்ப்பவரால்
பயணங்கள்
தொடர முடியாது!
ஜாதகக் கட்டங்களுக்குள்
சிக்கிக் கொண்டவர்களால்
சாதிக்க முடியாது!
——————
நேரம்
இன்று
யாருமே
ஜோதிடம் பார்க்க
வரவில்லை;
தனக்கு நேரம் (ராசி)
எப்படி இருக்கிறது?
தனது கிளியிடமே
சீட்டெடுக்கச்
சொல்கிறான்
கிளி ஜோதிடக்காரன்!
– நிலா, திருச்சி