குறிஞ்சிக் கடவுளாம் குமரன்!

குறிஞ்சிக் கடவுளாம் குமரன்!
Published on
தொகுப்பு: எம்.கோதண்டபாணி

'ல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றி மூத்த குடி'
என்பது ஆன்றோர் வாக்கு.
அதன்படி மண் தோன்றுவதற்கு முன்பே முதலில் தோன்றியது கல்தான் என்பது புரியும். கல் என்பது மலைகளைக் குறிக்கும். ஐவகை நிலங்களில் முதலில் வரிசைப்படுவது குறிஞ்சியாகும்.

பிரளயத்துக்குப் பிறகு உலகில் எங்கும் தண்ணீர் நிரம்பி இருந்தது. நீர் கொஞ்சம் கொஞ்சமாக வற்றத் தொடங்கியதும் முதலில் தென்பட்டது மலைகள்தான். ஆக, நிலங்களின் வரிசையினால் மட்டுமல்ல, காலத்தினாலும் முதன்மையானது மலையும் மலை சார்ந்த இடமுமாகும். இந்த நிலப்பரப்பை மக்கள் குறிஞ்சி என அழைத்தனர்.

குறிஞ்சி நிலத்துக்குரிய தெய்வமாக வணங்கப்படுபவர் முருகப்பெருமான். அதனால் உலகத்தின் முதன்மையான தெய்வமாகவும் பழைமையான தெய்வமாகவும் இவர் வணங்கப்படுகிறார். இதிலிருந்து முருக வழிபாடு என்பது பழங்காலந்தொட்டு தமிழர்களின் வழக்கில் இருந்து வருகிறது என்பது புலனாகும்.

'சேயோன் மேய மைவரை உலகமும்' என்கிறது தொல்காப்பியம். 'சேயோன்' என்பதற்குச் சிவந்த நிறமுடையவன் என்று பொருள். முருகப்பெருமானின் மேனி மட்டுமல்ல, அவனது கண்களும் சிவந்த நிறமுடையவையாம். மலை கிராமங்களைச் சேர்ந்த மக்களின் கண்கள் எந்நேரமும் சிவந்து காணப்படுவதை இன்றும் நாம் காணலாம்.

குறிஞ்சி நிலத்தை தமது வாழ்விடமாகக் கொண்ட மக்கள், தாம் வணங்கும் தெய்வத்தை உயர்ந்த இடத்தில் வைத்து வணங்க வேண்டும் என்று எண்ணினர். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் மலையாகும். மரியாதைக்குரிய ஒருவர் நமது இல்லத்துக்கு வந்தால் அவருக்கு உயர்ந்த ஒரு ஆசனத்தைக் கொடுத்து அமரச் செய்வோம் அல்லவா? அதுபோல்தான் அவர்களின் மரியாதைக்குரிய தெய்வமாம் முருகப்பெருமானை உயர்ந்த இடமாகிய மலையின் மீது அமர்த்தி வழிபட்டனர்.

'விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ…' என்கிறது திருமுருகாற்றுப்படை. இதற்கு, 'வானை முட்டும் உயர்ந்த மலைகளையுடைய குறிஞ்சி நிலத்துக்கு உரியவனே' என்பது பொருள். நக்கீரர் கூட தமது பாடலின் இரண்டு இடங்களில் முருகனைக் கிழவன் என்று கூறிப்பிடுகிறார். இவ்விரு இடங்களிலும் கிழவன் என்பதற்கு, 'உரியவன்' என்றே நாம் பொருள் கொள்ள வேண்டும். இதனால்தான் குறமகள் வள்ளியை கரம்பற்ற, முருகப்பெருமான் கொண்ட மாயக் கோலமும் கிழ வடிவமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

முருகப்பெருமான் தாம் கோயில் கொண்ட அனைத்துத் தலங்களும் மலை வாசஸ்தலங்களாயிருக்க, சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர் மட்டும் வித்தியாசமாக கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலமாக அமைந்திருப்பது ஆச்சரியம்தான். பிறப்பிலேயே ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் கொடுத்தவன்தானே முருகப்பெருமான். ஐவகை நிலம் மட்டுமல்ல, அனைத்து லோகத்துக்கும் அருளையும் ஆசியையும் வழங்கும் குமரக் கடவுளை, சஷ்டி திருநாளாம் கந்த சஷ்டியன்று வழிபட்டு அருள் பெறுவோம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com