தமிழ்நாட்டில் உங்களைக் கவர்ந்த சுற்றுலாத்தலம் எது? ஏன்?

தமிழ்நாட்டில் உங்களைக் கவர்ந்த சுற்றுலாத்தலம் எது? ஏன்?
Published on

சுற்றுலாத்தலம் குறித்த FB வாசகியரின் பதிவுகள்!

அன்பு பாலா
கொடிவேரி அணை. அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத நீர்வீழ்ச்சி. பயமின்றி குளிக்கலாம். கோபிசெட்டிபாளையத்திலிருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் வடக்கில் 3 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.

வேங்கடரமணன் சங்கரநாராயணன்
தமிழ்நாட்டில் என்னைக் கவர்ந்த சுற்றுலா தலம் ஒகேனக்கல் அருவி. இது காவிரி ஆற்றில் அமைந்துள்ளது. தர்மபுரியிலிருந்து 45 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இது, ஒற்றை அருவி அல்ல. பல அருவிகளின் தொகுப்பாகும். இந்நீர் மருத்துவ குணம் உடையது என்று கூறப்படுகிறது. உகுநீர்க்கல் என்ற தமிழ்ச் சொல்தான் மருவி ஒகேனக்கல் என்றானது என்பர். பரிசல் மூலம் நம்மை அருவிகளுக்கு அருகே அழைத்துச் செல்வார்கள். ஒரே சிலிர்ப்பாக இருக்கும். எண்ணைக் குளியல் இங்கு மிகவும் பிரபலம்.

ராதிகா ரவீந்திரன்
செட்டிநாடு என்னைக் கவர்ந்த சுற்றுலாத்தலம். மதுரை-தஞ்சாவூரிலிருந்து இரண்டு மணி நேரப் பயணத்தில் உள்ள செட்டிநாட்டு வீடுகள், கோயில்கள் கட்டடக்கலை, சிற்பக்கலைக்குப் பெயர் பெற்றவை. பிள்ளையார்பட்டி, சிவகங்கை கோயில்கள் சிறப்பு வாய்ந்தவை. செட்டிநாட்டு வீடுகள் ரசிக்கத் தகுந்தவை. செட்டிநாட்டு உணவு வகைகள் தனிச்சுவை கொண்டவை.

ஸ்ரீவித்யா பிரசாத்
கும்பகோணம் தாராசுரம் கோயில். கதை சொல்லும் சிற்பங்கள், படையெடுப்பு தடுக்கும் அகழி, சப்த ஸ்வரங்கள் எழுப்பும் படிக்கட்டுகள், சின்னஞ்சிறு பெண்ணாக அம்பிகை… காணவும், ரசிக்கவும் ஒரு நாள் போதாது.

மங்களா கெளரி
குற்றாலம்தான் இதுவரை நான் பார்த்த சுற்றுலாத்தலம். ஓ…வென தலையில் கொட்டும் நீர்வீழ்ச்சி சூப்பர். மறுபடி எப்பவோ…?!

ஜெயஸ்ரீ வெங்கடாசலம்
அருவியில் குளித்தால் பித்தம் போகும். குற்றாலம் அருமையான சுற்றுலா தலம்.

உஷா முத்துராமன்
கொடைக்கானல். குணா குகை, வெள்ளி அருவி என எத்தனை முறை சென்றாலும் சலிக்காமல் அப்போதுதான் பார்ப்பது போல சந்தோஷம் கொடுக்கும் மன நிறைவு தரும் சுற்றுலா தலம்.

தாரை செ.ஆசைத்தம்பி
தஞ்சை பெரிய கோயில்! ராஜராஜசோழனின் கலையார்வத்திற்கு தீனி கொடுத்த படைப்பு! 80டன் ஒரே கல்லை பல கி.மீ. தூரம் பாதை அமைத்து பெரிய கோயிலின் உச்சிக்கு யானைகள் உதவியுடன் கொண்டு சேர்த்த விதம் பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது என்றால், அந்த கோபுரத்தின் நிழல் பூமியில் விழாது என்ற தகவல் பேராச்சரியம்! ஒரே கல்லில் செதுக்கிய பிரம்மாண்டமான நந்தி, கோயிலின் உள்ளே நுழைந்ததும் வரும் ஜிலுஜிலுப்பான காற்று, அழகான புல்வெளி நடைப்பாதை, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நந்தி, பெரிய கோயிலில் பெரிய அளவில் உயரமாகக் காட்சியளிக்கும் பிரகதீஸ்வரர் என அத்தனையும் ஆச்சரியத்தை உண்டாக்குகிறது!

நா.புவனா நாகராஜன்
திருக்கடையூா் காலசம்ஹாரமூா்த்தி உடனுறை அபிராமி சன்னிதி மிகவும் சிறப்பு வாய்ந்த, உலகப் பிரசித்தி பெற்ற ஸ்தலம். மாா்கண்டேயா், அபிராமி பட்டா் வரலாறு சொல்லும் ஒரே கோயில். ஆயுஷ்ய ஹோமம், சஷ்டியப்த பூா்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் போன்ற பாிகாரங்கள் இங்கு மட்டும்தான் சிறப்பு.

சரஸ்வதி துரைசாமி
என்னைக் கவர்ந்த சுற்றுலா தலம் ஊட்டி. நீலகிரி மலையில் உள்ள அழகிய ஊர்தான் ஊட்டி. மலைகளின் ராணி என்றும் கூறலாம். பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் குறிஞ்சிபூ ஊட்டிக்குப் பெருமை.

நித்யகல்யாணி நித்யா
Ooty. Very cool and beautiful. Queen of the hills.

சாந்தி சீனிவாசன்
ஊட்டி, முதுமலை புலிகள் சரணாலயம், தனுஷ்கோடி இவை எல்லாம் பார்க்க வேண்டிய இடங்கள்.

வாணி கணபதி
மலைகளின் ராணி ஊட்டிதான் என்னை மிகவும் கவர்ந்த சுற்றுலாத் தலம். பச்சை பட்டாடை விரித்தது போன்று எங்கும் பசுமை நிறைந்த காட்சி. வானில் ஓடும் மேகங்கள் கைகளில் தவழ வருவதைப் போன்று தொட்ட பெட்டா சிகரத்தில் ஏறி நிற்கும்போது தோன்றும் களிப்பு, படகு சவாரி, பைக்காரா நீர் வீழ்ச்சியின் ஆர்ப்பரிப்பு என்று மனம் குளிரும் சேர்ந்து குதூகலிக்க வைக்கும். அரிய மூலிகை sedikalum அபூர்வ தாவரங்களும் பரந்து கிடக்கும் தாவரவியல் பூங்கா என இயற்கையின் கொடைக்கு அளவே இல்லை.

சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்
கொல்லிமலை. அருமையான, அமைதியான இடம். அருவியிலிருந்து விழும் தண்ணீா் ஆர்ப்பாட்டமில்லாது விழும். சலசலவென சத்தம், கேட்க அருமையாக இருக்கும். இயற்கைக் காட்சியை ரசித்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு.

ப்ரீதா ரெங்கசாமி
கொல்லிமலை. இயற்கை எழில் கொஞ்சும் மூலிகை தாவரங்கள் நிறைந்த இம்மலையின் காற்றை சுவாசிப்பதே மருந்து. சித்தர்கள் வாழ்ந்த பூமி இது. இன்றும் சித்தர்கள் நடமாடிக் கொண்டு, அவ்வூர் மக்களை ஆசிர்வதிக்கிறார்கள் என்பதே உண்மை.

ஜெயகாந்தி மஹாதேவன்
தமிழ்நாட்டில் என்னைக் கவர்ந்த சுற்றுலாத்தலம், நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரி. இங்கு அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இரண்டும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்திழுப்பவை. அதிகாலை சூரியோதயம் காண்பது இங்கு பிரசித்தம். வங்கக்கடல், அரபிக்கடல், இந்துமகா சமுத்திரம் இம்மூன்றும் இணையும் திரிவேணி சங்கமம் இங்குதான் உள்ளது. அழகிய கடல், கடலில் கிடைக்கும் சிப்பி போன்றவற்றைக் கொண்டு செய்யப்படும் கலைநயம் மிக்க பொருட்கள் விற்கும் கடைகள் என எல்லாமே கண்ணுக்கு விருந்து.

கிருஷ்ணவேணி
தமிழ்நாட்டில் என்னை மிகவும் கவர்ந்த சுற்றுலாத்தலம் கன்னியாகுமரி. மிகவும் அழகான கடற்கரை, பகவதி அம்மன் கோயில், விவேகானந்தர் பாறை, பிரம்மாண்டமான திருவள்ளுவர் சிலை, ஆசியாவின் மிக உயரமானதும் (115அடி) நீளமானதுமான (1கி.மீ.) மாத்தூர் தொட்டிப் பாலம், திற்பரப்பு நீர்வீழ்ச்சி, பேச்சிப்பாறை அணைக்கட்டு ஆகியவை மிகவும் ரசித்து பார்க்க வேண்டிய இடங்கள். அதிகாலை சூரிய உதயம் காண்பதும், மூன்று கடல்களின் சங்கமமான திரிவேணி சங்கமம் காணவும் கண் கோடி வேண்டும்.

ஹேமலதா ஸ்ரீனிவாசன்
என்னை மட்டுமல்ல; என் குடும்பத்தையே கவர்ந்த சுற்றுலாத்தலம் ஏற்காடு. சென்னையிலிருந்து காரிலேயே ஐந்து மணி நேரத்தில் போய் விடலாம். மலை ஏறும் வழியில் உள்ள கொண்டை ஊசி வளைவுகள், இயற்கை எழில் கொஞ்சும் பசுமை இவற்றை அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஊசி போடும் அதிகக் குளிருமில்லாமல், வேர்க்கும் வெயிலுமில்லாமல் இதமான குளிர், பார்ப்பதற்கு நிறைய வியூ பாய்ண்ட்ஸ், ஏரியில் படகு சவாரி, சேர்வராயர் கோயில், கிளியூர் மற்றும் நல்லூர் அருவிகளில் ஆனந்தக் குளியல். புது வரவான பீக்கு பார்க் – அங்கு ஏகப்பட்ட கிளிகள் நம் தோள்களிலும், கைகளிலும் அமர்ந்து நம் கையிலிருந்து தானியங்களைக் கொத்தித் தின்னும்போது ஏற்படும் பரவசம் என்று எல்லாமே மனதை மயக்கும் இடங்கள். எங்கள் ஓட்டு ஏற்காட்டுக்கே.

கோமதி சிவாயம்
எங்க திருநெல்வேலிக்கு வாங்க… முதல் நாள் நவதிருப்பதி, திருச்செந்தூர்.
மறுநாள் நவகைலாயம். அடுத்த நாள் பஞ்ச குரு ஸ்தலங்கள். அடுத்து, ரிலாக்ஸாய் மணிமுத்தாறு அகஸ்தியர் அருவியில் ஆனந்தக் குளியல்.
கடைசியாய் நெல்லையப்பரை தரிசனம் பண்ணி, சாலைக்குமாரருக்கு கும்பிடு போட்டு, ஆரெம்கேவியில் பர்ச்சேஸ் பண்ணி, இருட்டுக்கடையில் அல்வா வாங்கி Bye சொல்லும்போது, தாமிரபரணி சொல்லும் Come again another day.

ஜெயா சம்பத்
கோயில் நகரம் மதுரைதான். மீனாட்சி அம்மன் கோயில், கள்ளழகர் கோயில், திருப்பரங்குன்றம், திருமோகூர் என்று ஒவ்வொரு கோயிலும் கொள்ளை அழகு. திருமலை நாயக்கர் மஹால், வண்டியூர் தெப்பக்குளம், காந்தி மியூசியம் என்று சுற்றிப் பார்த்து விட்டு, முருகன் இட்லிக் கடையில் சுடச் சுட இட்லியும், ஜில்லுனு ஜிகர்தண்டாவும் சாப்பிடலாம். மதுரை, 'பிரேமா விலாஸ்' அல்வாவும் காராசேவும் வாங்கிக்கொண்டு, புகைவண்டியில் ஊர் வந்து சேரலாம்.

மீனலதா
தென்காசியும் குற்றாலமும்தான். தரிசிக்க வேண்டிய புகழ் பெற்ற தென்காசி கோயில், ருசிக்க லாலா கடை அல்வா, குளு குளு குற்றால அருவிக் குளியல், குற்றாலீஸ்வரர் தரிசனம், சாப்பிடச் சுடச்சுட சுவையான மிளகாய் பஜ்ஜி, அனுபவிக்க பொதிகைத் தென்றல், அருகாமையில் செண்பகா தேவி, ஐந்தருவி மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் பல இடங்கள். என்ஜாய் என்ஜாமிதான்!!

ராஜலக்ஷ்மி கெளரிசங்கர்
ஜெயா சம்பத் கூறியது போல, மதுரைவாசியான என்னைப் பொறுத்தவரை மதுரைதான். மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருப்பரங்குன்றம் முருகன், பிள்ளையார்பட்டி பிள்ளையார், அழகர் என்று ஒரு தெய்வ குடும்பத்தை ஒரே நாளில் தரிசிக்கலாமே. தவிர, உணவிற்கு பூண்டு கலக்காத மாடர்ன் ரெஸ்டாரெண்ட் உணவகம், குழந்தைகள் விரும்பும் ராஜஸ்தான் அண்ணபூர்ணா என்று மனதிற்கும் நாவிற்கும் திருப்தி அளிக்கும் சுற்றுலா இடமாச்சே.

பானு பெரியதம்பி
சேலம் வாங்க… சுவையான மாம்பழம், அழகான வெண்பட்டு, தரமான ஜவ்வரிசி, விதவிதமான வெள்ளிக்கொலுசு, இளம்பிள்ளை புடைவைகள் என ஷாப்பிங் கலக்கலாம். அத்தோடு, அருகே நாமக்கல் ஆஞ்சனேயர், தாரமங்கலம் கைலாசநாதர் என ஆன்மிக சுற்றுலா போகலாம். இயற்கையை ரசிக்க ஏற்காடு என வரிசைகட்டிக் கொண்டு இருக்கும் இடம் சேலமே எனக்குப் பிடித்த இடம். எப்போ வருகிறீர்கள் தோழிகளே…!

ஏ.பி.இருங்கோவேல்
என் அன்னை மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் உறையும் மாமதுரைதான்.

விஜி ஆர்.கிருஷ்ணன்
கொடைக்கானல்தான். ஒவ்வொரு இடமும் பார்க்க அழகு. குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் இருந்து இரவில் சுற்றிலும் பார்த்தால் வானத்து நட்சத்திரங்களை பூமியில் காணலாம்.

பொ.பாலாஜிகணேஷ்
திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி அருமையான மலை கிராமம். புராதனமான முருகன் கோயில் மனதுக்கு அமைதி தரும் இடம். ஆண்டுக்கு ஒரு முறையாவது சென்று வந்து விடுவேன்.

ஜானகி பரந்தாமன்
என்னை மிகவும் கவர்ந்த சுற்றுலாத்தலம் திருநெல்வேலி. குறிப்பாக, இங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில், கிருஷ்ணாபுரத்தில் உள்ள கிருஷ்ணன் ஆலயத்தின் கற்சிலைகள் வரலாற்று சிறப்பு மிக்கவை. குறிப்பாக, குறவன் இளவரசியை கடத்திச் செல்வது, ஒரு புறம் காளை முகம், மறுபுறம் யானை முகம் என ஒரே கல்லில் வடிவமைத்த சிலை ஆச்சரியப்பட வைக்கிறது. ஒரு கற்சிலையின் தலையில் ஒரு ஊசியை போட்டால், அது நேரடியாக கால் வழியே வெளியே வருவது பிரம்மிக்க வைக்கிறது. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு சிலையின் வேலைப்பாடும் அழகு. நம் நெல்லையில் இப்படி ஓர் இடமா? என்று வியப்படைய வைக்கிறது. குறிப்பாக, குழந்தைகள் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.

கலைமதி சிவகுரு
ராமநாதபுரத்தில் உள்ள உத்தரகோசமங்கை, புதுக்கோட்டையில் உள்ள திருப்பெருந்துறையூர் சிவன் கோயில்கள் உலகில் முதலில் தோன்றியவை. உத்தரகோசமங்கை கோயில் சிவன் ஐந்தரை அடி மரகத திருமேனி. ஒளிவெள்ளத்தில் இந்தச் சிலையை பார்க்க உயிருடன் இருப்பது போல் தோன்றுவதை உணர முடியும். திருப்பெருந்துறையூரில் பல வகையான சிற்பங்கள், வண்ண ஓவியங்கள், தீர்த்தங்கள், ஆறு சபைகள் ஆகியவை கண்டு களிக்க சிறந்த இடமாகும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com