
டபுள் பீன்ஸ் பெரிய காராமணி தேன்குழல்
தேவையானவை : டபுள் பீன்ஸ், பெரிய காராமணி – தலா 100 கிராம், அரிசி – 500 கிராம், மிளகாய்த்தூள், வெள்ளை எள் – தலா 1டேபிள் ஸ்பூன், மஞ்சள் பொடி – அரை ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, வெண்ணெய் – 50 கிராம், எண்ணெய் – கால் லிட்டர்.
செய்முறை : அரிசி, காராமணி, டபுள் பீன்ஸ் இவற்றை மிஷினில் அரைக்கவும். மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய்த்தூள் இவற்றை வெண்ணெய் விட்டுக் குழைத்துக் கலந்து மாவுடன் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, எள்ளையும் சேர்த்துப் பிசைந்து, தேன்குழல் அச்சில் போட்டு எண்ணெயில் சிறு சிறு தேன்குழல்களாகப் பிழிந்து வேகவிட்டு எடுக்கவும். சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.
மல்டி கிரைன் ரிப்பன் பக்கேடா
தேவையானவை : அரிசி – 500 கிராம், சென்னா – 50 கிராம், கேசரிப் பருப்பு, உளுந்து, பயறு, சின்ன காராமணி, வெண்ணெய் – தலா 50 கிராம், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், எண்ணெய் – கால் கிலோ, உப்பு – தேவைக்கு.
செய்முறை : அரிசி, பயறு வகைகளை மாவு மிஷினில் அரைத்து சலிக்கவும். வெண்ணெயை உருக்கி உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் கலந்து மாவில் பிசிறி, நாலில் ஒரு பங்கு மாவை தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து ரிப்பன் பக்கோடா அச்சில் போட்டுப் பிழிந்து, எண்ணெயில் வேகவைத்து எடுக்கவும். மாவை முதலில் பிசிறி வைத்து கொஞ்சம் கொஞ்சமாகக் கலந்து பிழிய வேண்டும். இல்லாவிட்டால் மாவு நொதித்து விடும்.
– ஆர்.சாந்தா, சென்னை
டகா – டக் கர – கர!
தேவையானவை : சலித்த அரிசி மாவு – 1 கப், சலித்த கடலை மாவு – கால் கப், பேகிங் சோடா – 1 சிட்டிகை, எண்ணெய் – அரை லிட்டர், சாட் மசாலா – 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், பெருங்காயப் பொடி – அரை டீஸ்பூன், உப்பு – சிறிது,
தண்ணீர் – தேவையான அளவு, ரவை – 1 டேபிள் ஸ்பூன், ஓமம் – 1 டீஸ்பூன்.
செய்முறை : முதலில் அரிசி மாவு, கடலை மாவு, ரவை, பேக்கிங் சோடா இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்துகொள்ளவும். வாணலியில் ஒரு கப் தண்ணீர் விட்டு, சிறிது உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து அடுப்பின் மீது வைத்து கொதிக்க விட்டு, கலந்து வைத்திருக்கும் மாவைப் போட்டு, கட்டி தட்டாமல் நன்கு கிளறி இறக்கி வைக்கவும். ஆறிய பின் சிறிது எண்ணெயைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.
பிறகு எலுமிச்சை அளவில் உருண்டைகளாகப் பிடித்து, சப்பாத்தி மாதிரி மடித்து இட்டு சதுரம் சதுரமாக கட் பண்ணிக்கொள்ளவும். வாணலியில் ரீஃபைண்டு எண்ணெயை விட்டு சூடானதும் சதுர வடிவில் கட் பண்ணி வைத்திருப்பதை கொஞ்சம் கொஞ்சமாக அதில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். எல்லாவற்றையும் பொரித்தெடுத்த பின், சாட் மசாலா, மிளகாய்த் தூள், ஓமம் பெருங்காயப்பொடி, சிறிது உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கலந்து சாப்பிட, சுவையாக இருக்கும். இந்த டகா – டக் கர – கர வாயில் போட்டால் கரகரவெனக் கரையும்.
– ஆர்.மீனலதா, மும்பை
திணை அரிசி மனோஹரம்
திணை அரிசி மாவு, அரிசி மாவு, உளுத்தம் பொடி, வெண்ணெய், உப்பு சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு பிசையவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு மிதமாக காய்ந்தவுடன் தேன்குழல் அச்சில் மாவு போட்டு பிழியவும். நன்கு வெந்ததும் எடுக்கவும். தேன்குழல் செய்து முடித்ததும் அழுத்தி உடைக்கவும். ஒரு கடாயில் வெல்லம் போட்டு தண்ணீர் விட்டு வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, பாகு காய்ச்சவும். கெட்டிப் பாகானதும் தேங்காய்க் கீற்று, ஏலம், சுக்குப்பொடி சேர்த்து, பின் எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். உடைத்து வைத்திருக்கும் தேன்குழலில் இந்தப் பாகை விட்டுக் கிளறி, நெய் தொட்டு உருண்டைகளாகப் பிடிக்கவும். சத்தான திணை அரிசி மனோஹரம் தயார்!
– ச.லெட்சுமி, செங்கோட்டை
காரம் கபூர்
தேவையானவை : பாசிப் பருப்பு – 1கப், கோதுமை மாவு – 2 கப், டால்டா – 2 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், மிளகாய் வற்றல் – 6, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய முருங்கை இலை – அரை கப், தேங்காய்த் துருவல் – 4 ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.
செய்முறை : பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி, மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்து அத்துடன் முருங்கை இலை கலந்து, இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைக்கவும். பிறகு அதை நன்கு உதிர்த்து, அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, சீரகம் தாளித்து உதிர்த்த கலவையைப் போட்டு சிறிது கிளறி, பிறகு தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். கோதுமை மாவுடன் சிறிது உப்பு, டால்டா சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து, எலுமிச்சை அளவு உருண்டைப் பிடித்து, அப்பளக் கல்லில் அப்பளமாக இட்டு, நடுவில் பாதியாக வெட்டி, அதை கோன் போல் செய்து அதன் நடுவே பாசிப் பருப்பு பூரணத்தை நிரப்பிப் பிறகு தண்ணீர் தொட்டு நன்கு ஒட்டி, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதுவே காரம் கபூர். இது மாலை நேர டிபனாக சாப்பிடலாம். மிகவும் சத்தானது.
குறிப்பு : இதற்குத் தொட்டுக்கொள்ள தக்காளிச் சட்னி, புதினா சட்னி ஏற்றதாக இருக்கும்.
சேமியா பழ அல்வா
தேவையானவை : சேமியா – 1 கப் , சர்க்கரை – முக்கால் கப், பால் – 2 கப், அன்னாசி அல்லது சாத்துக்குடி பழச்சாறு – 1 கப், ஏலப்பொடி – 1 ஸ்பூன், கேசரிப் பவுடர் – 2 சிட்டிகை, வாழைப் பழம் – 2 , அலங்காரத்துக்காக ஆப்பிள் அல்லது கறுப்பு திராட்சை.
செய்முறை : முதலில் சேமியாவை சுத்தம் செய்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரிரும் இரண்டு கப் பாலும் சேர்த்து அடுப்பில் வைத்து பால் கொதிக்கும்போது, சேமியாவை அதில் போட்டுக் கிளறவும். சேமியா முக்கால் பதம் வெந்ததும் வாழைப் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, மசித்து, சேமியாவில் சேர்த்து, அதில் சர்க்கரையைச் சேர்க்கவும். எல்லாம் வெந்துக் குழைந்து அல்வா பதத்தில் வந்ததும் ஏலப் பொடி, கேசரி பவுடர் கொஞ்சம் பாலில் கலந்து தூவி நன்றாகக் கிளறவும். பிறகு அதில் பழச்சாறை ஊற்றி கைவிடாமல் கிளற வேண்டும். அடுப்பு சிறு தீயாக இருக்க வேண்டும். ஒரு தட்டில் நெய் அல்லது டால்டா தடவி, சேமியா கலவையை பரவலாக தாம்பாளத்தில் கொட்டவும். ஆப்பிள் பழத்தை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி மேலே அலங்காரமாக வைக்கவும். இக்கலவையை ஃப்ரிஜ்ஜில் வைத்து, பிறகு துண்டுகளாகப் போட்டு பரிமாறலாம்.
– என்.குப்பம்மாள், கிருஷ்ணகிரி
செவ்வாழை ஜாமூன்
தேவையானவை : செவ்வாழைப் பழம் – 2, பால் பவுடர் – 1 கப், மைதா மாவு – கால் கப், நெய் – சிறிது, பால் – 1 கப், சர்க்கரை – 1 கப், ஏலப்பொடி – சிறிது.
செய்முறை : பழத்தை மசிக்கவும். பின்னர் பால் பவுடர் சேர்த்து, மைதா மாவு, நெய் விட்டுப் பிசையவும். பால் விட்டு தெளித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும்.
சர்க்கரையை போட்டு அதே அளவிற்கு தண்ணீர் விட்டு, ஏலப்பொடி சேர்த்து பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து இறக்கி பொரித்த உருண்டைகளை அதில் போடவும். புதுமையான ஜாமூன் ரெடி.
மருத்துவப் பயன்கள் : இதில் இரும்புச் சத்து, கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் மூட்டுகளுக்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கெட்ட கொழுப்பை வெளியேற்றும். கண் பார்வை கோளாறு உள்ளவர்களுக்கு இப்பழம் நல்ல பலன் தரும். இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் கல் உருவாவதைத் தடுக்கலாம்.
– நிர்மலா தேவி, மதுரை
மரவள்ளிக்கிழங்கு தேன்குழல்
தேவையானவை : மரவள்ளிக்கிழங்கு பெரிதாக – 2, அரிசி மாவு – 1கப், ஜீரகம், உப்பு – சிறிதளவு, பொரித்து எடுக்க – எண்ணெய்.
செய்முறை : மரவள்ளிக்கிழங்கை சிறிதாக வெட்டி நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். பிறகு அதன் தோலை உரித்து விட்டு கையால் நன்றாகப் பிசைந்து கொள்ளவும். அதனுடன் அரிசி மாவையும் கலந்து உப்பு, சீரகம் இரண்டையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேன்குழல் அச்சில் எண்ணெயில் பிழிந்து பொரித்து எடுத்தால் சுவையான மரவள்ளிக்கிழங்கு தேன்குழல் தயார். வாய்க்கு ருசியாக இருப்பதுடன், உடலுக்கும் மிகவும் நல்லது.
– உஷா முத்துராமன், திருநகர்
சீப்பு சீடை
தேவையானவை : பதப்படுத்தப்பட்ட பச்சரிசி – 4கப், உளுந்து – 1கப், பொட்டுக்கடலை மாவு – 1கப், தேங்காய் பால் – 3கப், உப்பு – தேவைக்கு, நெய் – 2டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் – பொரிக்க.
செய்முறை : பதப்படுத்தப்பட்ட பச்சரிசி அரிசியை எடுத்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் உளுந்தை வறுத்து பிறகு மாவாக்கவும். இவற்றை நன்கு கலந்து கொண்டு இதனுடன் உப்பு, வெதுவெதுப்பான தேங்காய் பால், நெய், சர்க்கரை 2டீஸ்பூன் சேர்த்து நன்கு பிசையவும். சீப்புச் சீடை கட்டையில் மாவை சின்னச் சின்ன நீளங்களாக செய்துகொண்டு அதை இரண்டு முனைகளை ஒட்டவும். பிரியாதவாறு சற்று காய்ந்ததும் சூடான எண்ணையில் போட்டு பொரித்து கரகரப்பானதும் எடுக்கவும். ஆறியதும் டப்பாவில் வைக்கவும்.
– மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்
தூத் பேடா
தேவையானவை : பால் – ஒரு லிட்டர், சர்க்கரை – ஒன்றரை கப், சோள மாவு அல்லது மைதா மாவு – 2 டேபிள் ஸ்பூன் (சிறிதளவு நெய் விட்டு வறுத்துக்கொள்ளவும்), பொடித்த ஏலக்காய் – அரை டீஸ்பூன்.
செய்முறை : பாலை கொதிக்க வைத்து, சுண்ட காய்ச்சவும். பால் பாதி அளவாக ஆன பின் அதில் சர்க்கரை சேர்க்கவும். பிறகு, பொடித்த ஏலக்காய் சேர்த்து, சோள மாவு அல்லது மைதா மாவு சேர்த்துக் கிளறவும். கெட்டிப்பதம் வந்ததும், தேவையான வடிவத்தில் ஷேப் செய்து வெட்டிப் பரிமாறவும்.
ஹனி பால்ஸ்
தேவையானவை : பாதாம், முந்திரி, வேர்க்கடலை – தலா 10, பேரீச்சை – 4, தேன் – 2 டீஸ்பூன்.
செய்முறை : பாதாம், முந்திரி, வேர்க்கடலை ஆகியவற்றை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து ஆற விடவும். இவற்றுடன் கொட்டை நீக்கிய பேரீச்சை துண்டுகள் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த கலவையுடன் தேன் கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். தீபாவளி சமயத்தில் வரும் குட்டீஸ்களுக்குக் கொடுக்க ஏற்ற ஸ்வீட் இது.
– கவிதா சரவணன், திருச்சி
அவல் பூரண போளி
தேவையானவை : மைதா மாவு – கால் கிலோ, நல்லெண்ணெய் – ஒரு குழி கரண்டி, உப்பு – அரை டீஸ்பூன், சிவப்பு அவல் – 100 கிராம், தேங்காய் துருவல் – 100 கிராம், முந்திரி பருப்பு – 15, ஏலக்காய் பவுடர் – அரை டீஸ்பூன், தூளாக்கிய கருப்பட்டி- 150 கிராம், நெய் – தேவைக்கேற்ப.
செய்முறை : மைதா, உப்பு, நல்லெண்ணெய் மூன்றையும் கலந்து நீர் விட்டு பூரிக்கு செய்வதுபோல் பிசைந்து கொள்ளவும். அவல், தேங்காய், முந்திரி மூன்றையும் தனித்தனியாக சிறிது நெய்யில் வறுத்தெடுக்கவும். பின் மிக்ஸியில் எல்லாவற்றையும் போட்டு பொடித்தெடுக்கவும். அதில் ஏலப்பொடி, கருப்பட்டி, 1டீஸ்பூன் நெய் விட்டு நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாய் செய்துகொள்ளவும். மைதா மாவை தேவையான சைஸ் உருண்டைகளாக்கி, சப்பாத்தி கல்லில் உருட்டி நடுவில் பூரணத்தை வைத்து மூடி போளிகளாக்கி தோசை கல்லில் நெய் விட்டு மிதமான தீயில் சுட்டெடுக்கவும். ஆரோக்கியமான அவல் பூரண போளி தயார்.
– ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்
பால் கேக்
தேவையானவை : பால் – 4 கப், தேங்காய் துருவல் – 2 கப், சர்க்கரை – 3 கப், நெய் – 1 கப், முந்திரிப் பருப்பு – 10.
செய்முறை : தேங்காய்த்துருவலை மிக்ஸியில் அரைத்து வைக்கவும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் அரைத்த விழுது, சர்க்கரை, நெய், பால் அனைத்தையும் ஒன்றாகப் போட்டு மிதமான தீயில் வைத்து கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி சமன் செய்யவும். மேலே சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் முந்திரியை தூவவும். அருமையான சுவையான சுலபமாக செய்யக்கூடிய ஸ்வீட் ரெடி.
– வாணி கணபதி, பள்ளிக்கரனை
———————————
டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்
———————————