
ஓவியம்: பிள்ளை
கதை: ச. மணிவண்ணன்
ராமமூர்த்தி ஈசி சேரில் படுத்துக் கொண்டு நியூஸ் பேப்பரை பார்த்துக் கொண்டிருந்தார்.
"சார் வணக்கம்!" என்ற குரல் கேட்டு நிமிர்ந்துப் பார்த்தார். சங்கர் நின்றிருந்தான். மாடி வீட்டில் குடியிருப்பவன். "சொல்லுப்பா என்ன விஷயம்?"
"சார் வாடகை" என நீட்டினான். எண்ணிப் பார்க்காமல் வாங்கிக்கொண்டார் ராமமூர்த்தி.
"சார் எண்ணிப் பாருங்க.."தயக்கத்துடன் சொன்னான். "எல்லாம் சரியாதான் இருக்கும். நீ கிளம்புப்பா, "சொன்னவுடன் சங்கர் நகர்ந்தான்.
"ஒரு நிமிஷம்பா, "ராமமூர்த்தி அழைத்தார்.
"சார் சொல்லுங்க"
"அடுத்த மாசத்துல இருந்து இருநாறு ரூபாய் சேர்த்து வாடகையில் கொடுங்க."
"சரி சார்!"சொல்லிவிட்டு புறப்பட்டு விட்டான்.
"என்னங்க இப்படி பண்ணிட்டீங்க?"மனைவி கமலா கேட்டுக்கொண்டே ராமமூர்த்தி அருகில் வந்து நின்றாள். "அந்த தம்பி நமக்கு உடம்பு முடியாதப்ப எவ்வளவு உதவி செஞ்சு இருக்கு! அப்படி இருக்க அவர் கிட்ட இருநூறு ரூபா வாடகை அதிகமா கேட்டு இருக்கீங்களே, நியாயமா?" குரலில் கோபம் தெரிந்தது.
"கமலா! நீ என்ன தப்பா புரிஞ்சுகிட்ட. அந்த தம்பி நம்ம வீட்டுக்கு குடி வந்து மூனு வருஷம் ஆகுது.
இதுவரைக்கும் நாம அந்த தம்பிக்கு வாடகையை உயர்த்தல. அந்தத் தம்பியே வருஷம்ஆனா 500 ரூபாய் சேர்த்து கொடுக்கிறார். இப்போ ஒரு வருஷம் ஆயிடுச்சு. அவரா ஏத்திக் கொடுப்பதற்கு பதிலா நாமலே 200 ரூபாய் ஏத்திட்டா அந்த தம்பிக்கு 300 ரூபா செலவு குறையும். அதான் செய்தேன்!"
ராமமூர்த்தியின் நியாயம் புரிந்தது கமலாவிற்கு.
*****************
கதை: பூங்கொடி ஆனந்தன்
ஆபீசில் மதிய லன்ச் டைம். திவ்யாவும், ப்ரீத்தியும் தாங்கள் கொண்டு வந்திருந்த லன்ச்சை சாப்பிட ஆரம்பிக்க, திவ்யா ப்ரீத்தியிடம் கோபமாக கேட்டாள். "லூசாடி நீ ப்ரீத்தி? நீ இப்படி பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லைடி."
அவள் சொல்ல உருளைக்கிழங்கு பொரியலை எடுத்து வாய்க்குள் போட போன ப்ரீத்தி அப்படியே நிறுத்தினாள்.
"என்னடி சொல்றே?… எதுக்கு இப்படி என் மேல இப்படி கோவப்படறே?…" நிஜமாவே புரியாமல் கேட்டாள்.
"புரியாத மாதிரி நடிக்காதடி. நம்ம ஆபீஸ் மேனேஜர் கணேஷூக்கு என்ன குறைச்சல்?. பார்க்க ஹீரோ மாதிரி அழகா இருக்கார். நல்ல பதவி.கை நிறைய சம்பளம்."
"ஆமா அதுக்கென்ன இப்ப? இதெல்லாம் இல்லைனு சொன்னேனா இப்ப?" ப்ரீத்தி கேட்க அவளை எரிச்சலாக பார்த்தாள் திவ்யா.
"நல்ல குடும்பம், சொந்த வீடு, எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல குணமான மனுஷன்."
"உண்மைதான்… யார் இல்லைன்னா?.."
"தெரியுதில்ல? எல்லாம் தெரிஞ்சும் உன்னை கல்யாணம் பண்ணிக்க உன் மேல ஆசைப்பட்டு கேட்டப்ப வேணாம்னு மறுத்திட்டியாமே ஏன்டி? இந்த மாதிரி மாப்பிள்ளை கிடைக்க அவ அவ தவம் இருக்கா தெரியுமா?"
"அவரை கல்யாணம் பண்ணிக்க எவ்வளவோ வரன் வந்திருக்கு. ஆனா அவர் எல்லாத்தையும் வேணாம்னுட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டிருக்கார். நீயானா பெரிய இவளாட்டம் பிகு பண்ணிக்கறே."
அவள் டென்ஷன் குறையாமலே கேட்டுக்கொண்டிருக்க, ப்ரீத்தி சாப்பிட்டுக் கொண்டே இருந்தாள்.
"ரெண்டு பேரும் ஒரே இடத்துல வேலை செய்யறீங்க… வர, போக சுலபமா இருக்கும். என்னடி நான் இவ்வளவு சொல்றேன் நீயோ எதையும் காதுல வாங்காத சாப்டுட்டே இருக்க."
திவ்யா கேட்க, குறுக்கிட்டாள் ப்ரீத்தி, "இப்ப நீ சொன்னியே ஒரே இடத்துல வேலை செய்யறோம்னு. இதான் நான் அவரை வேணாம்னு சொல்ல காரணம்."
"என்னடி சொல்றே? புரியலை" நெற்றி சுருக்கினாள் திவ்யா.
"ஆமாம்டி, நாங்க ரெண்டு பேரும் ஒரே இடத்துல வேலை செய்யறோம். கம்பெனி நிலைமை எப்பவும் ஒரே மாதிரி இருக்காது. நாளைக்கு என்ன வேணும்னா நடக்கலாம். ஸ்ட்ரைக்,லே ஆஃப், நஷ்டம்னு சொல்லி கம்பெனிய கூட மூடலாம். அப்ப ரெண்டு பேரும் வேலை இழக்க நேரிடும். வருமானம் இல்லாம போகும். இதுவே ரெண்டு பேரும் வெவ்வேற இடத்துல இருந்தா ஒரு வருமானம் இல்லாட்டி கூட இன்னொண்ணை வச்சு சமாளிச்சிக்கலாம்."
அவள் சொல்ல,"சூப்பர்டி. நீ எடுத்த முடிவுதான் சரி." ஆச்சரியமாக சொன்னாள் திவ்யா.
*****************
கதை: சசிமாலா சேகர்
மத்திய அரசு அலுவலகத்தில் வேலை செய்யும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர் தான் விஜி. வேலையில் சேரும்போது நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்தான். இன்று அப்படி இல்லை. முப்பது ஆண்டுகள் பணியில் இருந்தபோது தனது அனைத்து சுகங்களையும் விட்டு, சிக்கனமாய் குருவி போல் சேர்த்து சேர்த்து செல்லமாய் ஆசையாய் உயிரை பணையம் வைத்து வளர்த்த தன் ஒரே மகனுக்கு சொந்தமாய் பார்த்து பார்த்து பெரிய வீடு கட்டி , கார் மற்றும் என்னென்ன வசதிகள் வேண்டுமோ அவ்வளவும் தன் சொந்த சேமிப்பில் சேர்த்தாகிவிட்டது. இனி தன் மகனுக்கு பெண் பார்க்க வேண்டும். தன் மகனுக்கும் தனக்கும் பிடித்த அழகான பெண் கிடைப்பது என்பது அவ்வளவு சுலபமான வேலையல்ல என்பது விஜிக்குத் தெரியும். ஆனால் ஊரார் கண்பட அப்படி ஒரு பெண் கிடைத்தாள்.
வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. ஆனால் அவ்வப்போது விஜி மாமியாராவதும், வந்த மருமகள் அக்மார்க் மருமகளாக மாறுவதும் தவிர்க்க முடியாததாக இருக்க, வழக்கமான குடும்ப பிரச்சனைகள் வந்து வந்து போய்க்கொண்டு இருந்தன.
எதிர்பாராதவிதமாக, ஒருநாள் விஜியின் கால் அடிபட்டு, காலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகிவிட்டார். மருத்துவ மனைக்குச் செல்வதையும் மருந்து வாங்குவதையும் மகனும் கணவரும் செய்வார்கள். ஆனால் எழுந்து நடக்க, தனது தினசரி தேவைகளை கவனிக்க , காலைக் கடன் முடிக்க கணவனும் மகனும் என்ன செய்ய முடியும்?
கண்ணில் கண்ணீரோடு படுத்திருக்க, மேலே ஒரு கை தென்றலாய் தடவியது. கண் திறந்து பார்த்தால் மருமகள். ஆன்டி , உங்களுக்கு சூப் கொண்டுவந்திருக்கேன் குடிங்க. விஜியால் எழுந்து குடிக்க முடியவில்லை . விஜியின் தலை தூக்கி, தன் மடிமீது வைத்து, சிறிய ஸ்பூனால் மெல்ல ஊட்டி, வாய்துடைத்து, விஜியின் கை பிடித்து தன் தோளின் மேல் போட்டு கழிப்பறைக்கு அழைத்துச்சென்று, ஒரு குழந்தையை போல் கவனித்து மீண்டும் படுக்கையில் படுக்கவைத்த மருமகள் சொன்னாள், "ஆன்டி எதுக்கும் கவலைப்பட வேண்டாம் , நான் இருக்கேன் ".
அவ்வப்போது வரும் மாமியார் முக மூடியை தூக்கி எறிந்த விஜி, மகளாய் வாழும் மருமகளை மனதாரப் பாராட்டினாள்.