பறக்கும்  பாவைகள்!

பறக்கும்  பாவைகள்!
Published on
பகுதி – 3
                     'எங்களாலும் பறக்க முடியும்'
-ஜி.எஸ்.எஸ்

சூசன் ஆலிவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்.  இன்று உலகின் தலைசிறந்த பெண் ​ஸ்கை ரைட்டராக விளங்குகிறார்.

அதென்ன ஸ்கை ரைட்டிங் என்கிறீர்களா? 

சிறிய விமானம் ஒன்று இருக்கும்.  அது பறக்கும் போது ஒரு ஸ்பெஷலான புகையை வெளிப்படுத்தும். இந்தப் புகை மிகவும் அடர்த்தியாக, வெண்மையாக இருக்கும்.  அந்த விமானத்தில் பறந்தபடி அதிலிருந்து வெளிப்படும் புகையை நமக்கு வேண்டிய எழுத்துகளின் வடிவத்தில் வானில்  உருவாக்க வேண்டும்.  அதாவது சிலேட்டுப் பலகையில் சாக்பீஸ் கொண்டு எழுதுகிறோம் அல்லவா, அதுபோல வான் பகுதியில் அந்த விமானப் புகை கொண்டு 'எழுத' வேண்டும்.

இதுவும் ஒருவகை விளம்பரம்தான்.  ஏதாவது முக்கியமான நிகழ்ச்சி நடைபெறும்போது அதுகுறித்து இப்படி ஸ்கை ரைட்டிங் செய்யலாம்.  இன்னார் இன்னாரை மணக்கிறார் என்று அவர்கள் இருவரின் பெயர்களையும் ஸ்கை ரைட்டிங் செய்யலாம்.  கீழே இருப்பவர்கள் வெகு தொலைவிலிருந்து கூட இந்த வார்த்தைகளைப் படிக்க முடியும்.

காற்று வேகமாக அடித்தால் இந்தப் புகை எழுத்துகள் கலைந்துவிடும்.  எனவே கணினியின் உதவியுடன் விமானம் மூலமாக சின்னச்சின்னப் புள்ளிகளால் அமைந்த எழுத்துகளை (டாட் மாட்ரிக்ஸ் நுட்பத்தில்) உருவாக்கினால்  அது அதிக காலத்துக்கு கலையாமல் இருக்கும்.

இங்கிலாந்தில் ஸ்கை ரைட்டிங் 1919ல் அறிமுகமானது.  அமெரிக்காவில் அதற்கு அடுத்த வருடம்.  இதில்தான் சூசன் ஆலிவர் சிறந்து விளங்கினார்.

தந்தையர் தினத்தன்று தன் பதி​மூன்று வயது மகளுக்கு ஒரு சிறப்புப் பரிசை அளிக்க வேண்டும் என்று அப்பா ஆலிவர் ஆசைப்பட்டார்.  தன் மகள் சூசனை தன்னுடன் தனி விமானம் ஒன்றில்   அமர்த்​திக்கொண்டு ஒரு சுற்றுப் பயணம் செய்தார்.  விமான ஓட்டியைத் தவிர அவர்கள் இருவர் மட்டுமே அந்த விமானத்தில் இருந்தனர்.  அப்போது விமானம் குறித்து விமான ஓட்டியிடம் சூசன்  கேட்ட பல கேள்விகள் அப்பாவை ஆச்சரியப்படுத்தின.

பயணம் முடிந்ததும் 'அப்பா எனக்கு விமான ஓட்டியாக ஆசை' என்றார் ​சூஸன். அப்பா மறுப்பேதும் சொல்லவில்லை.  அடுத்த வருடமே மகளை விமான ஓட்டி பயிற்சிக்கு அனுப்பினார்.

​சூஸன் பதினெட்டு வயதானபோது விமானத்தை ஓட்டும் திறமை பெற்றிருந்தார். அவர் வணிக விமானத்தை ஓட்டலாம் என்பதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. விரைவிலேயே பல என்ஜின்கள் பொருத்தப்பட்ட விமானத்தைக் கூட திறமையுடன் கையாண்டார். விமானம் ஓட்டும் பயிற்சியில் சேர்ந்தவர்களுக்கு பயிற்சியாளராக இருக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்றார்.

பல விமான சர்வீஸ்கள் போட்டி போட்டுக்கொண்டு தன்னை அழைக்கும் என்று நினைத்தார் ​சூஸன்.  ஆனால் 1980களில் தொடக்க காலமான அப்போது பல விமான சர்வீஸ்கள் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருந்தன.  ஏற்கனவே பணியில் இருக்கும் விமான ஓட்டிகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதே அவர்களுக்கு பெரும்பாடாக இருந்தது. இந்த நிலையில் ​சூஸனுக்கு அவர் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

அந்த சமயத்தில்தான் பெப்சி கோலா நிறுவனம் வெளியிட்ட ஒரு விளம்பரத்தைப் பார்த்தார். தங்கள் நிறுவனத்திற்கு விமானத்தை சிறப்பாக ஓட்டக்கூடிய ஒரு நபர் வேண்டும். ஸ்கை ரைட்டிங் செய்வதே அவரது முதன்மைப் பணியாக இருக்கும் என்றது அந்த விளம்பரம். ஸ்கை ரைட்டிங்கில் அப்போது அனுபவம் இல்லை என்றாலும் விண்ணப்பித்தார்.  வேலை கிடைத்தது.

அப்போது பெப்சி நிறுவனம் வயதான சீனியர் ஒருவரை தனது  ஸ்கை ரைட்டிங் விளம்பரத்துக்கு அமர்த்திக் கொண்டிருந்தது.  அவருடன் சூஸனும் விமானத்தில் அனுப்பப்பட்டார்.  ஸ்கை ரைட்டிங்  கலையை வெகுவிரைவில் கற்றுக்கொண்டார் சூசன். அந்த சீனியர் விரைவில் ஓய்வு பெற, சூஸன் பெப்சி நிறுவனத்தின் ஸ்கை ரைட்டிங் பிரிவின் தலைவரானார்.

சூஸனின் கணவர் ஸ்டீபன் ஆலிவரும் விமான ஓட்டிதான். அவரும் ஸ்கை ரைட்டிங்  கலையை கற்றுக் கொண்டார்.  இந்தக் கலையில் ஜோடியாக முத்திரை பதித்தவர்கள் அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்த இருவர் மட்டுமே.

இப்போது விளம்பரத்துக்காக ஸ்கை ரைட்டிங் யுத்தியை பயன்படுத்துவது குறைந்து விட்டது. என்றாலும் பெப்சி நிறுவனம் மட்டும் இன்னமும் இந்த வகை விளம்பரத்தை பயன்படுத்துகிறது. இதற்காகவே பணியாட்களை அமர்த்துகிறது.

ஸ்கை ரைட்டிங் செய்யும்போது விமானத்தின் மேல் பகுதி திறந்து இருக்கும்.  இடையில் எந்த தடுப்பும் இல்லாமல் வானத்தை பார்த்தபடி தன் பணியைச் செய்வது அளவில்லாத ஆனந்தத்தை அளிப்பதாக சூஸன் கூறுவதுண்டு.  ஒவ்வொரு வருடமும் கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள 150க்கும் அதிகமான இடங்களில் இவர் 500க்கும் அதிகமான ஸ்கை ரைட்டிங் வாசகங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இந்தத் துறையில் இப்போது இருக்கும் ஒரே பெண்மணி இவர்தான்.

 (தொடர்ந்து பறப்பார்கள்) 

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com