‘கண்’ணெனப் பாதுகாப்போம்!

‘கண்’ணெனப் பாதுகாப்போம்!
Published on

அழகோ அழகு – 2

அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தரா

கண்களுக்கு மேலே கருமை, இரு புருவங்களுக்கிடையில் மற்றும் கண்களின் ஓரங்களில் கோடுகள் அல்லது சுருக்கங்கள் என கண்களைச் சுற்றி ஏற்படக்கூடிய பல பிரச்னைகளுக்கான காரணங்களையும் தீர்வுகளையும் பார்க்கலாமா?

அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தரா
அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தரா

மிக முக்கியமான காரணம் மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை. உணவில் உப்பு அதிகம் சேர்ப்பது, மது அருந்துதல், புகை பிடித்தல், சைனஸ் உபாதை, கண் மை அல்லது eyeliners உபயோகிப்பதால் ஏற்படும் எரிச்சல், அலர்ஜி போன்றவைகளா லும், கண்களைக் கொட்டாமல் கணினியில் வேலை செய்வதாலும், தொடர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதாலும் கண்ணீர் சுரப்பிகள் உலர்ந்து அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டு கண்களைச் சுற்றி கருமை படரும். இதனால் முகம் களை இழந்து காணப்படும்.

இந்தக் கருவளையம் மற்றும் கோடுகளை எவ்வாறு வராமல் தடுக்கலாம் அல்லது நீக்கலாம்? இதோ சில இயற்கை மூலிகைத் தீர்வுகள்…

பாதாம் எண்ணெய்யை விரலால் தொட்டு கண்களைச் சுற்றி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரால் கண்களை சுத்தம் செய்ய வேண்டும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதை செய்து வந்தால் கண்களுக்கு ஊட்டச் சத்து பெருகி, நாளடைவில் கருமை மறைந்து விடும்.

தக்காளியை தோல் நீக்கி அதன் சாறு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, ஒரு டேபிள் ஸ்பூன் குளிர்ந்த பால் கலந்து, அதில் பஞ்சை தோய்த்து கண்களின் அடிப்பகுதியில் பத்துப் பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கலாம். இதேபோல், தூய ரோஸ் வாட்டரிலும் செய்யலாம்.

வெளியில் அதிகம் செல்வோர் புற ஊதாக் கதிர்கள் கண்களை பாதிக்காமல் காக்க, வேக வைக்காத உருளைக்கிழங்கை தோல் சீவி துருவி அல்லது சாறு எடுத்து கண்களைச் சுற்றியும் புருவங்களுக்கு மத்தியிலும் தடவி வந்தால் நல்ல பலன் கிட்டும்.

கரு வளையங்கள் என்றாலே வெள்ளரிக்காய் நினைவு வருகிறதல்லவா? எத்தனை சினிமாக்களில் பார்த்திருக்கிறோம்? கண்கள் மேல் பஞ்சு வைத்து அதன் மேல் வெள்ளரித் துண்டுகளை வைக்கலாம். அல்லது இரண்டு டீஸ்பூன் வெள்ளரி துருவல், கால் டீஸ்பூன் தேன், ஒரு சொட்டு லாவண்டர் எண்ணெய் கலந்து தடவினாலும் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கும்.

திராட்சைக் கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்; ரோஸ் வாட்டர், கேரட் சாறு, பால் மூன்றும் கலந்த கலவை கண்களின் அயர்ச்சியைப் போக்கி புத்துணர்ச்சி கொடுக்கும் தீர்வுகள்.

மேற்சொன்ன தீர்வுகளைத் தயாரித்து உபயோகிக்க நேரமில்லை என்பவர்கள் வாரத்தில் ஒரு நாள் கண்களுக்கு அடியில் வைக்கக்கூடிய collagen eyepad உபயோகிக்கலாம் அல்லது collagen சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

மேற்சொன்ன எந்தத் தீர்வுக்கும் கட்டுப்படாமல் சிலருக்கு கருவளையங்களும், சுருக்கங்களும் மறையாமலே இருப்பதற்கு அவர்களின் குடும்ப மரபியல் காரணமாக இருக்கலாம். அவர்கள் சரும நிறத்திலேயே கிடைக்கும் concealer உபயோகித்து அவற்றை மறைக்கலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நம் உணவில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற பழங்கள், காய் வகைகள், உதாரணமாக பப்பாளி, மாம்பழம், கேரட், மஞ்சள் பூசணிக்காய் மற்றும் கீரை வகைகளை அதிகம் சேர்க்க வேண்டும்.

வெளியில் செல்லும்போது குளிர்க் கண்ணாடி அணிவது கண்களைப் பாதுகாக்கும்.

வெது வெதுப்பான நீரில் சில சொட்டுக்கள் லாவண்டர் எண்ணெய் விட்டு மாலை நேரத்தில் குளித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும். இதுவும் கண்களை, கண்ணெனப் பாதுகாக்க ஒரு மிகச்சிறந்த வழி!
தொகுப்பு : மங்கை ஜெய்குமார்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com