
கிரீஸ் பொன்மொழி
புத்தாண்டு என்பது ஒரு புதிய ஆண்டின் பிறப்பு. மற்றவர்களுக்கு அது பழைய ஆண்டின் இறுதிச் சடங்காகும்.
– யாரோ
– தொகுப்பு : ஆர்.பிரசன்னா, திருச்சி
பழைய துக்கங்கள், வலி, கண்ணீர்த் துளிகளை மறைக்க புதிதாய் பிறந்து விட்டது ஒரு அற்புதமான வருடம். அதில் எல்லா நாட்களும் அனைவரும் புன்னகையுடன் தொடர்வோம். முடியும் இந்த வருடம், நம் கவலைகளுக்கு முடிவாய் இருக்கட்டும். மலரும் புத்தாண்டு, நம் மகிழ்ச்சிக்கு ஆரம்பமாய் இருக்கட்டும். போற்றத்தக்க புது வாழ்வு பூக்களாய் பூக்க, போட்டியில்லா சமுதாயம் நேசக்கரம் நீட்ட, பஞ்சமில்லா பெருவாழ்வு நெருங்கி வர பிறக்கட்டும் புதிய ஆண்டு. வருக புத்தாண்டு!
– சுந்தரி காந்தி, பூந்தமல்லி.
காலத்தைக் கணக்கிட முதன்முதலில் மனிதன் எப்படி முயற்சி செய்தான் என்பதை அறிந்தால் வியப்பாக இருக்கும். பயிர் தொழில்தான் மனித வாழ்விற்கு இன்றியமையாதது. இதுதான் காலண்டர் தோன்றவும் காரணமாக இருந்துள்ளது. ஒவ்வொர் ஆண்டும் பயிர்த் தொழில் செய்யும் காலத்தையும், பயிர் அறுவடை செய்யும் காலத்தையும் மனிதன் கவனித்து வந்தான். ஒருமுறை அறுவடை ஆகும் காலத்திற்கும், அதே பயிர் மறுமுறை விளைந்து அறுவடை ஆகும் காலத்திற்கும் இடையே உள்ள காலத்தைக் கணக்கிட்டான். காலண்டர் தோன்றுவதற்கு இதுதான் முதல் முயற்சியாக இருந்துள்ளது.
எகிப்தியர்தான் ஆண்டினை சரியாகக் கணக்கிட்டுக் கூறினர். நைல் நதியில் வெள்ளம் வரும் காலம்தான் பயிர் தொழில் செய்வதற்கு ஏற்ற காலம் என்பதை அறிந்திருந்தனர். இந்த வெள்ளம் ஆண்டுக்கு ஒருமுறைதான் ஏற்படும். ஒரு வெள்ளம் ஏற்பட்டு, அடுத்த முறை வெள்ளம் ஏற்படும் காலத்திற்கு இடைப்பட்ட காலம் ஒரு வருடமாகக் கருதப்பட்டது.
இந்தக் கணக்கீடு கூட முற்றிலும் சரியானது என்று கூற இயலவில்லை. நைல் நதியில் வெள்ளம் வரும் ஒவ்வொரு முறையும் சூரிய உதயத்துக்கு முன் ஒரு பிரகாசமான நட்சத்திரம் தோன்றி மறைந்ததைப் பார்த்தனர். அன்றிலிருந்து மறுமுறை அந்த நட்சத்திரம் தோன்றும் வரையிலான நாட்களை எண்ணத் தொடங்கினர். சரியாக 365 நாட்கள் வந்தன.
இதைக் கண்டறிந்த பின் எகிப்தியர்கள் 365 நாளை 12 மாதங்களாகப் பிரித்தனர். ஒவ்வொரு மாதத்திற்கும் 30 நாட்கள் என்றும் கடைசி மாதத்திற்கு 35 நாட்கள் என்றும் பிரித்தனர். இதிலிருந்து காலண்டர் முறைக்கு வித்திட்டவர்கள் எகிப்தியர்கள் என்று கூறலாம். இவர்களது காலண்டர் சந்திரனின் போக்கைக்கொண்டு அமைக்கப்பட்டதால், 'லூனார் காலண்டர்' எனப்பட்டது.
இந்தக் காலண்டர் முறையும் சரியாக வராததால், சூரியனின் சுழற்சியை அடிப்படையாக வைத்து காலண்டர் தயாரித்தனர். இது, 'சோலார் காலண்டர்' எனப்பட்டது. பூமி, சூரியனை ஒருமுறை சுற்றி வர, 3651/4 நாட்கள் ஆகும். இந்த கால் நாள் முறையால் அதிக குழப்பமடைந்தனர் வானிலை ஆய்வாளர்கள். ரோமப் பேரரசின் சக்கரவர்த்தி ஜுலியஸ் சீசர் ஒரு கட்டளையிட்டார். அதாவது, கி.மு. 46 ஆண்டிற்கு மட்டும் 445 நாட்கள் இருக்கட்டும் என்றும், அதற்குப் பின் வரும் ஆண்டுகள் 365 நாட்கள் கொண்டவைகளாக இருக்கட்டும் என்றும் கட்டளையிட்டார். அது மட்டுமில்லாமல்; ஒவ்வொரு நான்காவது ஆண்டும் 366 நாட்கள் கொண்டிருக்கும் என்றும் அறிவித்தார். இந்த நான்காம் வருடம்தான் லீப் வருடம்.
இந்த முறைகூட சரியாக அமையவில்லை. இதற்கு இறுதி முடிவு கண்டார் 13ம் போப் கிரிகோரி என்பவர். போப் கிரிகோரி 1582ம் ஆண்டிலிருந்து பத்து நாட்களை தள்ளுபடி செய்துவிட்டார். இதற்கு அடுத்தகட்டமாக ஒவ்வொரு 100வது ஆண்டு இறுதியிலும் வருகிற ஆண்டை 400ஆல் வகுக்கப்பட்டால் அன்றி, லீப் ஆண்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார். அதன்படி 1700, 1800, 1900 ஆகிய ஆண்டுகள் லீப் ஆண்டுகள் இல்லை. ஆனால், 2000ம் வருடம் லீப் வருடமாகும். இந்தக் காலண்டர் முறைக்கு, 'கிரிகோரியன் காலண்டர்' என்று பெயர். இந்தக் காலண்டர் முறைதான் உலகம் முழுமைக்கும் பொதுவான காலண்டர் முறை என்று ஒப்புக்கொள்ளப்பட்டு, தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.
– ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி
மங்கையர் மலருக்கும் வாசகீஸ் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! புத்தாண்டு என்றதும் பலரும் எதிர்பார்ப்பது காலண்டர்களையும் டைரியையும்தான்! அந்தப் பலரில் நானும் ஒருத்தி!
டைரி எழுதும் பழக்கம் உள்ள என் அண்ணனைப் பார்த்துதான் எனக்கும் ஆசை வந்தது. நான் சின்ன வயதிலேயே மனதில் தோன்றும் விஷயங்களை நோட்புக்கில் எழுதுவேன்.
என் அண்ணன் முதன் முதலில் ஒரு டைரி கொடுத்து, 'இனி இதில் எழுது' என்றார். (ஒவ்வொரு வருடமும் டிசம்பரில் தவறாமல் கொடுப்பார். இப்போது அவர் இல்லையென்றாலும் என் பழக்கம் மாறவில்லை) அது முதல் இப்போது வரை எழுதுகிறேன். அதிலும் ஒரு நாளுக்கு ஒரு பக்கம் இருக்கும் டைரிதான் பிடிக்கும்.
மற்றவர் டைரியை யாரும் படிக்கக் கூடாது என்பார்கள். ஆனால், என் சின்ன மகன் மட்டும் அதற்கு விதிவிலக்கு! என் டைரியை எடுத்து படித்துவிட்டு, 'நல்லா எழுதறம்மா' என்று பாராட்டு வேறு. சில சமயங்களில் திடீர்னு பழையதை படித்து, மனதில் ரீ வைண்ட் பண்ணுவேன். ஆனால், இப்பல்லாம் ஏனோ எனக்கு ஆர்வம் குறைந்து விட்டது. 'எதற்காக இடத்தை அடைத்துக் கொண்டு இத்தனை டைரிகள்? நமக்குப் பின் தூக்கிப் போடுவதற்கு பதில், நாமே கிழித்துப் போட்டுவிட்டால் என்ன' என்று கூட தோன்றுவதுண்டு!
ஆனாலும், புத்தாண்டு நெருங்கி விட்டதே. இன்னும் புது டைரி வரலையேனு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது!
டைரி எழுதும் எல்லோருக்குமே இப்படித்தானா?
– இந்திராணி பொன்னுசாமி, ஈக்காட்டுதாங்கல்.