அப்பத்தாவின் அழகு சாதனம்!

அப்பத்தாவின் அழகு சாதனம்!
Published on
– ஆர். மீனலதா, மும்பை.
கிராமத்து உரையாடல்!

"ஆண்டாளு! ஏ ஆண்டாளு!" வெளியே வந்த ஆண்டாளுவைப் பார்த்த வள்ளி திடுக்கிட்டுப் போனாள்.

"உடம்பு சரியில்லையா ஆண்டாளு! முகம் முச்சூடும் சுண்ணாம்பு அடிச்சிருக்கே!" சிரித்தாள் ஆண்டாளு.

"ஏன் சிரிக்கிறே?"

"சுண்ணாம்பு இல்ல! வெய்யிலே இருந்து காப்பாத்திக்கிட ஒரு பாதுகாப்புதான்!"

"ஒண்ணும் விளங்கலை! செத்த விவரமாத்தான் சொல்லேன்!"

"சொல்லுதேன்! இது என் அப்பத்தா, அந்தக் காலத்துல கையாண்ட இயற்கை முறை அழகு சாதனம். அப்பத்தாதான் சொல்லிக் கொடுத்தாக!"

"அப்பத்தா அளகு (அழகு) சாதனமா? ஒரே சச்பென்னா இருக்கே!"

"சச்பென்" இல்லை, சஸ்பென்ஸ்!

"ஏதோ ஒண்ணு. மண்ட காயுது. விசயத்தைச் சொல்லு!"

கடலை மாவு, தயிர், தேன், பால், வாளப்பளம், காப்பித்தூள் எல்லாம் வூட்ல இருக்கற சாமான்கள்தானே!"

"அதான் எனக்குத் தெரியுமே! விசயத்துக்கு வராம, காப்பித்தூள், வாளப்பளம்ன்னுக்கிட்டு!"

"கடலை மாவு 1 கரண்டி, காப்பித்தூள் ¼ கரண்டி, தயிர் ¼ கரண்டி எல்லாத்தையும் கிண்ணத்துல போட்டு நல்லா கலந்துக்கிடக்கணம். மூஞ்சியை களுவிட்டு, இந்தக் கலவையை பரவலாத் தடவி
15 நிமிடத்துக்குப் பொறவு ஈரத்துணியால லேசா ஒத்தி எடுத்து அப்பால தண்ணீரை விட்டு அலம்பினா முகம், பளிச்சுனு ஆகும்."

"அப்ப, டீவி பொட்டீல காட்டுதாங்களே! அந்த மாதிரி அளகு சாதனம் வேணாமா?"

"வேணாம்! அதுல ரசாயனம் கலந்திருக்குன்னு அப்பத்தா சொல்லிச்சு. இடைல பேசாம, நா சொல்றதைக் கேளு!"

தயிர், தேன் ரெண்டையும் கொஞ்சம் எடுத்து கிண்ணத்துல போடணம். அரை வாளப்பளத்தை மசிச்சு அத்தோட சேர்த்து எலுமிச்சைச் சாறு விட்டுக் கலந்து முகத்துல தடவி 15 – 20 நிமிடங்கள் கழித்துக் களுவலாம். ஃப்ரெஷ்ஷா இருக்கும்.

சோறு பொங்கிட்டு வடிக்கிற கஞ்சிய ஒரு சின்னக் கிண்ணத்துல எடுத்துக்கிட்டு ஆற விட்டு, அப்பால அதுல காப்பி டிக்காஷன்,
கடலை மாவு, தேன் கலந்தும் மூஞ்சில பூசலாம்.

வெய்யிலு நேரத்துல கண்ணுல லேசா எரிச்சல் வந்தா, குளிர்ந்த தண்ணீல ஒரு துணியை நல்லா முக்கிப் புளிஞ்சு (பிழிந்து) கண்ணை முடிக்கினு, அதை மேல வெச்சா, எரிச்சல் காணாம போகும்.

"ஆண்டாளு! கை தோலெல்லாம் வறண்டு போகுது. மூக்கு, கன்னம், களுத்து அங்கிட்டெல்லாம் கருப்பு – கருப்பா புள்ளி மாதிரி இருக்கறதைப் போக்க, அப்பத்தா அளகு சாதனம் இருக்கா? குறுக்கால பேசினதுக்கு கோவப்படாதே!

"வள்ளி! உம்மேல கோவப்படுவேனா? உனக்குச் சொல்லாம யாருக்குச் சொல்லப் போறேன்? கேளு!"

வெட்டிவேர் பொடி, வாளப்பளம் மசிச்சது, பால், தயிர் இதெல்லாம் கலந்து கை, முகம், இங்கிட்டெல்லாம் வாரத்துல 4 – 5 வாட்டி தேச்சு, புறவு தள்ளிவிட்டு அலம்பணும். வறண்டு போவாது.

கடலை மாவு, லவங்கப்பட்டைப் பொடி, பன்னீரு அம்புட்டையும் சேர்த்து நல்லா குளைச்சு (குழைத்து) கரும்புள்ளி மேல தினமும் தடவிக்கிட்டு வந்தா, எல்லாம் மறைஞ்சு போவும். உடனே போவாது. நாளாகும்.

இது போல இன்னம் நெறைய விசயம் இருக்கு.

"ஆண்டாளு! உன் அப்பத்தா கிரேடு!"

"கிரேடு இல்ல! கிரேட்!"

"நீ போயி மொகத்தைக் களுவிக்கிட்டு வா. அரை மணி நேரமாச்சு! எனக்குப் பாக்கணம்!"

முகம் களுவி வந்த ஆண்டாளுவை, வெச்ச கண்ண எடுக்காம பார்த்த வள்ளி,

"அப்பத்தா வெவரமாத்தான் சொல்லியிருக்காக! உன் மூஞ்சி பளிச்சினு இருக்கு. நானும் வூட்டுக்குப் போய் கருத்துக் கிடக்கிற என் மொகத்துல நீ சொன்னமாட்டுக்கு, அப்பத்தா அளகு சாதனத்தை அப்பிக்கிடுதேன். நேரமாச்சு! பொறவு வாரேன். ரொம்ப டாங்ஸ்  ஆண்டாளு! பை! பை!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com