இதற்காகவா ஒரு கொலை?

இதற்காகவா ஒரு கொலை?
Published on
தொடர் – 12 
-ஜி.எஸ்.எஸ்.

சாக்கோ என்ற பெயரில் வாழ்ந்துவந்த மலையாளி ஒருவர் தோற்றத்தில் வேறு ஒருவரைப் போல இருந்த ஒரே காரணத்தால் கொலை செய்யப்பட்டார்!

தமிழ்நாட்டில் எப்படி ஆட்டோ சங்கர், சந்தன கடத்தல் வீரப்பன் ஆகிய பெயர்கள் பிரபலமோ அதேபோல கேரளாவில் சுகுமார குரூப் என்ற பெயரும் மிகப்பிரபலம்.

குரூப் கேரளாவைச் சேர்ந்த ஒரு இளைஞன்.  ஈரானுக்கு சென்று கை நிறைய சம்பாதித்தவன்.

நாயர் வகுப்பைச் சேர்ந்த இவன் 1946 ல் ஆலப்புழாவில் பிறந்தவன். பட்டப் படிப்பில் சேர்ந்தான்.   ஆனால் அதை முடிக்கவில்லை.  பின்னர் இந்திய விமானப் படையில் சேர்ந்தான்.  விடுமுறைக் காலங்களில் கூட அவன் தன் வீட்டுக்குச் சென்றதில்லை.  நர்ஸ் படி ப்பைப்  படித்துக்கொண்டிருந்த, வீட்டில் பணிப்பெண்ணாக வேலை புரிந்து கொண்டிருந்த, சரசம்மா என்பவளை விரும்பித் திருமணம் செய்து கொண்டான்.

பின்னர் கோபாலகிருஷ்ண குரூப் என்ற தன் இயற்பெயரை சுகுமாரப் பிள்ளை என்று மாற்றிக் கொண்டு போலி பாஸ்போர்ட்டில் ஈரானுக்குச் சென்றான்.   சரசம்மாவுக்கும் அங்கே ஒரு மருத்துவமனையில் செவிலியாக வேலை கிடைத்தது.   இருவருமாக ஆடம்பர வாழ்க்கை நடத்தினார்கள்.

அவ்வப்போது கேரளாவுக்கும் வருவான்.  தன் உறவினர்கள், நண்பர்களுக்காக நிறைய செலவு செய்வான்.  ஆலப்புழாவில் சொத்துக்கள் வாங்கலாம் என்று நண்பர்கள் கூற, அதை குரூப் ஏற்கவில்லை.  காரணம் மிகுந்த ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததால் அவனுக்கு அவ்வளவு சேமிப்பு இல்லை.

ஒரு காலகட்டத்தில் வளைகுடா நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட பல நிறுவனங்கள் மூடப்பட்டன.  இந்தக் காலகட்டத்தில் தன் வருங்காலத்தை நினைத்து கவலை ஏற்பட்டது குரூப்புக்கு.

எட்டு லட்சம் ரூபாய்க்கு தன்னை ஆயுள் காப்பீடு செய்து கொண்டான்.  விபத்தில் இறந்தால் இதை விட அதிகத் தொகை கிடைக்கும் எனும்படியான இன்ஷூரன்ஸ் பாலிசி அது.

தனது உறவினரான பாஸ்கர் பிள்ளை, ஷாஹு என்ற கடைநிலை ஊழியன், கார் ஓட்டுனர் பொன்னப்பன் ஆகியோருடன் இணைந்து குரூப், ஒரு சதித்திட்டத்தை உருவாக்கினான்.  'தன்னைப் போன்ற உருவம் கொண்ட யாராவது இறந்து விட்டிருந்தால் அந்தப் பிணத்தை தன்னுடைய பழைய காரில் வைத்து எரித்து விட வேண்டும்.  அதன்பிறகு குரூப் தலைமறைவாகி விடுவான்.  கு ரூப் இறந்ததாகக் கருதப்பட்டு ஆயுள் காப்பீட்டுப் பணம் அவன் மனைவிக்கு வந்துவிடும்.  அந்த தொகையில் ஒரு பகுதியை சதியில் ஈடுபட்ட அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விடுவாள்'  இதுதான் அந்த திட்டம்.

சரஸம்மாவுக்கு இந்த ஏற்பாட்டில் முதலில் ஒப்புதல் இல்லை என்றாலும் பிறகு சம்மதித்தாள்.   திட்டத்தை நிறைவேற்ற ஒரு பழைய அம்பாசிடர் காரை குரூப் வாங்கிக்கொண்டான்.   தனக்கு நெருக்கமான பொன்னப்பன் என்பவனை ஓட்டுநராக அமர்த்திக் கொண்டான்.

ஆனால் என்ன முயற்சித்தும் கு ரூப்பைப் போன்ற தோற்றமுடைய எந்தப் பிணமும் கிடைப்பதாக இல்லை.  அப்போதுதான் அவனுக்கு ஒரு மாற்று திட்டம் தோன்றியது.  தன்னைப் போல தோற்றம் கொண்ட உயிருள்ள ஒருவனைக் கொன்று காரில் வைத்து எரித்து விட்டால்?

நால்வருமாக இரு கார்களில் ஏறி முக்கிய சாலையில்  புறப்பட்டனர்.   ஒவ்வொரு காரிலும்  இருவர்.  அவர்கள் திட்டம் இதுதான்.  அங்கிருந்து வீடு திரும்பும் வழியில் பலரும் லிஃப்ட் கேட்பது வழக்கம்.  முதலில் செல்லும் காரில் இருந்தவர் கு ரூப்பைப் போன்ற தோற்றம் கொண்ட யாரையாவது பார்த்தால் அவரைக் காரில் ஏற்றிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று விட வேண்டும்.  பின்னாலேயே குரூப்பின் கார் அவர்களோடு இணைந்து கொள்ளும்.

திரை உலகில் அடியெடுத்து வைப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருந்த முப்பது வயது இளைஞன் சாக்கோ,  கு ரூப்பின் உயரம் உட்பட, தோற்றத்தில் ஒத்திருந்தான்.  அவன்  ஆலப்புழாவில் ஹரி திரையரங்கில்  பிலிம் ரீல்களைக் கொடுக்க வந்திருந்தான்.  துரதிஷ்டவசமாக சதிகாரர்களின் கார்களில் முன்னால் வந்து கொண்டிருந்த காரில் லிப்ட் கேட்டான்.  அந்தக் கார் இருமுறை அவனை கண்காணித்தபடி முன்னும் பின்னுமாகச் சென்றதை அவன் உணரவில்லை.  அப்போது நள்ளிரவு.  1984 ஜனவரி 21 நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் அவனுக்கு கட்டாயப்படுத்தி மது கொடுக்கப்பட்டது.  கடும் விஷம் கலந்த மதுவை குடித்து சாக்கோ மயக்கமடைந்தான்.  பிள்ளையும் ஷாஹுவும் ஒரு துவாலையால் அவன் கழுத்தை நெரித்து கொன்றனர்.  அவன் முக அடையாளம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக கத்தியால் அவன் முகத்தை சிதைத்தனர்.  அருகிலிருந்த ஒரு பழைய வீடு சரஸம்மாவின் உறவினர் வீடு ஒன்று காலியாகவே இருந்தது.  அந்த வீட்டின் குளியலறைக்கு சாக்கோவின் உடலை எடுத்துச் சென்று அவன் முகத்தை எரித்தனர்.  பிறகு அவனது உடலை அந்த அம்பாஸிடர் காரில் வைத்து ஒட்டுமொத்தமாக எரித்தனர்.  குரூப் தலைமறைவானான்.

காவல்துறையினர் ஆராய்ந்தபோது காலடித்தடங்களை எரிந்த காரின் அருகே கண்டனர்.  சந்தேகம் உண்டானது.  பிணத்தை மருத்துவ ஆராய்ச்சி செய்தபோது, கார் விபத்தில் இறப்பதற்கு முன்பே சாக்கோ கொல்லப்பட்டிருக்கிறார் என்பது உறுதியானது.  குரூப்பின் உறவினர்களுக்கு நடந்த சதித்திட்டம் எதுவும் தெரியாது.  அவர்கள் குரூப்பின் உடலை எரிப்பதற்காக தங்கள் வசம் ஒப்படைக்கக் கூறினார்கள்.  ஆனால் இன்ஸ்பெக்டருக்கு இறந்தது குரூப் இல்லையோ என்ற ஒரு சந்தேகம் தோன்றிக்கொண்டே இருந்தது.  அவன் உடலை புதைக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் உடலை ஒப்படைத்தார்.

குரூப்பின் உறவினரான பாஸ்கர் பிள்ளையை விசாரணை செய்தபோது அவன் கைகளில் சில தீக்காயங்களை கவனித்தார்.  சட்டையை அகற்றச் சொன்ன போது கைகள் முழுவதும் தீக்காயங்கள் காணப்பட்டன (காரை எரித்த போது ஏற்பட்ட காயங்கள்).

மேலும் தொடரப்பட்ட விசாரணையில் உண்மை தெரிந்து விட்டது.  என்றாலும் 1986 இல் இருந்து இன்றுவரை காவல் துறையினரால் குரூப்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

குரூப்பின் வாழ்க்கை திரைப்படமாகவும் ஆனது.  மலையாள மொழியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் குரூப்பாக துல்கர் சல்மான் நடித்திருந்தார்.

(தொடர் நிறைவுபெறுகிறது) 

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com