பகல் வேஷம்! 

பகல் வேஷம்! 
Published on
சிரிப்பு சிறுகதை: –தனுஜா ஜெயராமன்
ஓவியம்; பிரபுராம்

"நட்டுவான வேடிக்கை சாமியார்"… என்ற ஆதிகாலத்து பழைய  பெயர் பலகை தொங்கிய கேட்டை திறந்து உள்ளே வந்தான் மாணிக்கம்.

வாசலிலேயே இருபது இருபத்தி ஐந்து பேர் காத்திருக்க… கலைந்த தலையுடன் காவி ஜிப்பா அணிந்து கழுத்தில் கொட்டை நெற்றியில் பட்டையுடன் இருந்த ஒரு சின்ன ஸ்வாமிஜி டோக்கனை வழங்கி கொண்டிருந்தா(ர்)ன்.

"சின்ன சாமி ஜி!… பெரிய ஐயா சாமி ஜியை பாக்கணும்முங்க" என்றான் மாணிக்கம் கைகளை கட்டியபடி பவ்யத்துடன்…

"இதோ அங்க ஒரு லைன் தெரியுதில்ல..அதில் போய் நில்லு இவங்கெல்லாம் ஒரு வாரமா நிக்குறாங்க..நீயும் போய் சேந்துக்க"…

திகைப்புடன்… "என்னது! ஒரு வாரமாவா?"

"ஆமாம்!…சாமி மனசு வைச்சாத்தான் பாக்கமுடியும்…அவரே கூப்பிடுவார் அப்ப தான் நீ பாக்கலாம்…"

"அதுவரைக்கும்?"

"அந்த லைன்ல நில்லு…. ஊ

அவ்ளோ நாளானா எப்டீங்க?…

"இங்க சாப்பாடு…டீ…காபில்லாம் நாங்களே தருவோம்…ஆனா காசு தந்துடணும்"….

"அதில்லைங்க…நான் ரொம்ப தூரத்துல இருந்து வர்றேனுங்க…கொஞ்சம் மனசு வையுங்க"…

"யோவ்!…நான் மனசு வைச்சா..பத்தாது… நட்டுவான சாமி ஜி மனசு வைக்கணும்…போ போய் நில்லு..அதுக்குள்ள ரெண்டாவது லைன் வந்துருச்சி பாரு"…

மாணிக்கம் பரபரப்புடன் ஓடினான்..லைனை பிடிக்க..

பெரிய ஹாலில் நட்டுவான வேடிக்கை சாமியார்…நடுநாயகமாக வீற்றிருந்தார். புடவையுமல்லாத வேட்டியுமல்லாத ஒன்றை உடலில் சுற்றியிருந்தார். அவரை சுற்றிலும் பக்த கேடிகள் மன்னிக்க பக்த கோடிகள் காவி உடையில் பயபக்தியுடன் அமர்ந்திருந்தனர்.

முகத்தில் முழு மேக்கப் சகிதம்  இளம்பெண்ணொருத்தி சிரித்தபடி சாமியாருக்கு ஆரத்தி காட்டி கொண்டிருந்தாள். அவளுக்கு மிஞ்சி போனால் பதினாறு அல்லது  பதினேழு வயதிருக்கலாம். ஆரத்தியை ஏற்ற சாமியார் சிரித்தபடி அவளது கன்னத்தில் தட்டி இடுப்பை கிள்ளினார். அவள் அதை ரசித்தபடி கடந்து செல்ல…

சாமியார் ஆங்கிலமோ தமிழோ அல்லாத ஏதோ ஒரு பாஷையில் மைக்கில் பேசியபடி ஒவ்வொருவராக  வரச்சொல்லி ஆசிர்வதித்து கொண்டிருந்தார்..

திடீரென மாணிக்கத்தை சைகை செய்து அழைக்க…

பதறியடித்து முன்னாடி வந்தவன் நெடுஞ்சாண்கிடையாக அவர் பாதம் பணித்தான்.

"பக்தா!…உன் குறைகளை கூறு…நான் அவனிடம் கேட்டு சொல்கிறேன்"…என்றார் சாமியார்.

"ஐயா சாமிஜி…கொஞ்ச நாளா வித்தியாசமான கனவு அடிக்கடி வருதுங்க…முழிச்சதும் பயத்துல தொடை நடுங்கி போவுதுங்க…பாக்காத வைத்தியருமில்லை…பண்ணாத வைத்தியமுமில்ல…நீங்க தான் சாமி என்னை அதுலையிருந்து காப்பாத்தணும்…

"அப்படி என்ன கனவு வருகிறது பக்தரே!"..

"சாமி ஜி…நான் சேர்மேல குந்திகினுயிருக்கேன் சோக்கா…பக்கத்துல என் தோஸ்து நிக்கறான்…இரண்டு பேருமே பேண்ட் சர்ட்டுன்னு ஸ்டைலா இருக்கோம்…கூடவே   ஒரு பொண்ணு…சோக்கா ஆவி பறக்கற காபியோட நிக்கறா…நாங்க இரண்டு பேரும் அவளை பாத்து வழியிறோம்…ஆனா கபால்னு எங்க கழுத்துல காலுக்கு கீழேன்னு பாம்பா சுத்துதுங்க சாமி…அலறி துடிச்சி எழுந்தா கனவு…ஆனா எப்பப்பாரு வருதுங்க..நீங்க தான் ஏதாவது வழி பண்ணணும்"…

"எவ்ளோ நாளா வருது"…

"ஒரு வருஷமாங்க"…

"ஆமாம் நீ என்ன பண்றே"…

"சும்மாதான் இருக்கேன்க…வீடு தோட்டம் தொறவு பணம் நகைன்னு வசதிக்கு குறைவில்லீங்க …ஏதோ அதை வைச்சி இப்ப கஷ்டபடாம பொழப்பு ஓடுதுங்க சாமி".

சாமிஜி கண்களை மூடி தியானிக்க…

பயபக்தியுடன் கைகட்டி  நின்றான் மாணிக்கம்..

உனக்கு ராஜ நாக தோஷம் இருக்கு…நீ ஏதாவது பாம்பை கொன்னியா?

"அட என் குலதெய்வமே" என கால்களில் விழுந்தவன்…ஆமாங்க சாமி…போனவருஷம் வீட்ல நுழைஞ்ச நல்ல பாம்பை அடிச்சி கொன்னுட்டனுங்க…என்றான் பீதியுடன்.

"ஞானதிருஷ்டியில் அவன் சொல்லிட்டான்…" என்றார் ஸ்வாமி ஜி. எகத்தாளமாக இளித்தார்.

"அப்பறம் பொண்ணுகளோட ஏதாவது கசமுசா…"

"ஐய்யோ ..தப்பு தண்டா ஏதுமில்லீங்க..நம்ம வேலைக்காரி அம்சா அம்சமா இருப்பா..அவளை அப்பப்ப  கொஞ்சம் சீண்டுவேணுங்க… சத்தியமா பெரிய தப்பு தண்டிக்கெல்லாம் போகலீங்க…" என பதறினான்…

"அதானே…எல்லாத்தையும் அவன் புட்டு புட்டு வைச்சிட்டான்ல…என மேலே கைகயை காட்டினார் சாமிஜி பெருமிதச் சிரிப்புடன்"…

மாணிக்கம் நடுங்கியபடி இருக்க..

"பக்தா!…பயப்படாதே!…உங்க ராஜ நாக தோஷம் போக்க சிற்சில பரிகாரங்கள் செய்யவேண்டும். நீ புற்று கோவிலுள்ள பல்வேறு தலங்களுக்கு சுற்றுபயணம் செய்து  நாகபூஜை செய்து  பால், முட்டை வைத்து வழிபடவேண்டும்"…

"சரிங்க சாமிஜி!" ..

"இந்த பரிகார பூஜையை வேறு எந்த சிந்தனையே இல்லாம  பயபக்தியுடன் செய்யவேண்டும்… இத ஆண்டவன் சொல்றான்..

"சரிங்க ஸ்வாமிஜி.."

"நடுவில்  அம்சா , கும்சா…என பெண்கள் இருக்கும் பக்கமே தலைவைத்து படுக்கக்கூடாது…இல்லையெனில் துரத்தும் கனவுகள் சர்வ நிச்சயம்"…

"மன்னிச்சிடுங்க…சாமி…இனி கவனமா இருப்பேனுங்க"…

"இதை ஒரு மண்டலம் அதாவது 46 நாள்கள் செய்து அதன்பிறகு என்னை வந்து பார்"…

"சரிங்க ஸ்வாமிஜி"

"உனக்காக விரதமிருந்து நானும் சிற்சில பூஜைகளை செய்யவேண்டும்…. என் சிஷ்ய கோடி உன்னிடம் வேண்டிய தகவல் சொல்லுவான்"….

"ஆகட்டும் ஸ்வாமிஜி!…நன்றிங்க!…வரேனுங்க!"…

இந்தாவென வாயிலிருந்து ஒரு நாகராஜன் சிலையை எடுத்து அவனிடம் நீட்டினார்..பயபக்தியுடன் பெற்றுக்கொண்டான் மாணிக்கம்…

"சொல்ல மறந்துவிட்டேன்… முதல்வேளையாக உன் பெயரை மாற்று….மாணிக்கம் என்பது பாம்புகளுக்கு பிடிக்காத பெயர்…" என்றார் கபகபவென தன ட்ரேட்மார்க் சிரிப்பை உதிர்த்தார் ஸ்வாமிஜி..

"கைலாசம்…பக்தனுக்கு வேண்டிய தகவலை அளித்துவிடு"..என ஸ்வாமிஜி விடைபெற்று மலையேறினார்.

"வாங்க!…" என மாணிக்கத்தை அழைத்து போன கைலாசம் பூஜைக்கென ஒரு கணிசமான தொகையை பெற்றுக்கொண்டு அனுப்பினான்.

"சரியாக நாற்பத்தியாறு நாட்கள் (ஒரு மண்டலம்)  கழித்து வந்த மாணிக்கம் "ஐயா…ஸ்வாமிஜி…இனி நீயே என் கடவுள்…இனி நீயே என் குலதெய்வம்" என ஸ்வாமிஜியின் கால்களில் விழுந்து கும்பிட்டான்..

"எமது திருவிளையாடல்களில் இதுவுமொன்று…உங்கள் கனவு தொல்லை தீர்க்கவே யாம் ஞான திருஷ்டியில் நோக்கினோம்…" என இளித்தார் ஸ்வாமிஜி.

"ஆமாங்கைய்யா… ரொம்ப நன்றிங்க"..

"பக்தா உன் பிரச்சினை தீர்ந்ததல்லவா? வேண்டிய தட்சிணையை தட்டில் போடு"  என ஸ்வாமிஜி கட்டளையிட…

மகிழ்வுடன் கைலாசம் நீட்டிய தட்டில் கற்றை கற்றையான நோட்டுக்களை வைத்து பயபக்தியுடன் விடைபெற்றான் மாணிக்கம்..

ஸ்வாமிஜியின் ஓய்வறையில்…

"ஏண்டா நட்டு!….என்னடா மாயம் பண்ண..அந்த மாணிக்கம் பயல் அந்த குழைக்கும்பிடு போடுறான்..ஆமாம் அவன் கனவு ப்ரச்னையை எப்படி சரிபண்ண"…

"க்கும்…அவன் ஒரு வெட்டிபயல்…துன்னுட்டு தண்டமா உக்கார்ந்துருக்கறதா சொன்னான்..ஏதோ பாம்பை அடிச்சு வெட்டியா அதையே நினைச்சி பயந்துகிட்டு கனவு  கண்டு திரியறான்..கோயில் குளமுன்னு  ஒன்னரை மாசமா திரிஞ்சதுல நேரம் போனதே தெரிஞ்சிருக்காது…கனவு காண ஏது நேரம் அந்த  மனுஷனுக்கு"..

"அதானே பார்த்தேன்…உனக்காவது ஞானமாவது… திருஷ்டியாவது …இருக்குற ஒரு  கண்ணே நொள்ளையாச்சேன்னு பாத்தேன்…ஆமா..அந்த பொண்ணு மேட்டரை எப்படி கரெக்டா சொன்னே"…

"நான் எங்க சொன்னேன்…அதத்தான் பேசும் போது அம்சா அம்சமான்னு ஒளரி வைச்சுதே…அதான் அடிச்சி விட்டேன் போற போக்குல… அத விட்றா… எவ்வளவு தேறுச்சி"…

"ம்…கணிசமா கறந்துட்டேன்ல இந்த கைலாசம்…இந்த மாதிரி மாசத்துக்கு நாலு..ச்சே ச்சே  ஒரு ஆளு வந்தா கூட போதுமே"…..

"இதுல என் புகழ ஊரெல்லாம் ப்ரீயா பரப்பிகிட்டு வேற திரியப்போறான் அந்த லூசுப்பய"..  நமக்கும் ப்ரீ விளம்பரமாச்சு…" என இருவரும் சேர்ந்து கொல்லென சிரித்து வைத்தனர்…

"ஸ்வாமிஜி!…. உங்களை காண பல பக்தகோடிகள் காத்திருக்கிறார்கள்…" என ஒரு புதியதாக உருவாகிய குட்டி சிஷ்ய ஸ்வாமிஜி பவ்யமுடன் உரைக்க….

உடம்பில்  பட்டையும் ருத்ராட்ச கொட்டையுமாக வேட்டியுமல்லாத புடவையுமல்லாத உடையை அணிந்து கொண்டு…

தூரத்தில் மஞ்சள் பை நிறைய காசுடன் நிற்பவன்  முத்தோ, வைரமோ,  மாணிக்கமோ பளிச்சென்று கண்ணில் பட… அவனுக்கான அருள்வாக்கை தனது குயுத்தியான புத்தியின் மூலம் தேடிக்கொண்டே அருள் சொல்ல கிளம்பினார் நட்டு என்கிற நட்டுவான வேடிக்கை சாமியார்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com