பறக்கும்  பாவைகள்!

பறக்கும்  பாவைகள்!
Published on
பகுதி – 8
– ஜி.எஸ்.எஸ்.
"எல்லைகளை உடையுங்கள்!"

மெரிக்காவைச் சேர்ந்த ஜெசிகா காக்ஸ் விமான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றபோது உலகமே அவரை வியந்து போற்றியது.  காரணம் அவர் தன் இரு கைகளையும் இழந்தவர்!

ஜெசிகா காக்ஸ் செய்துள்ள சாதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல.  மாற்றுத் திறனாளிகளுக்கு அவர் ஒரு மகோன்னதமான எடுத்துக்காட்டு. பின்னர் செயற்கைக் கைகளைப் பொருத்தினாலும் அவர் அவற்றைப் பயன்படுத்த விரும்பியதில்லை.  'தன் காலே தனக்குதவி' என வாழ்ந்தார்.

அவருக்கு பிறக்கும்போதே இரு கைகளும் இல்லாமல் போனது. காரணம் ஒரு கொடிய நோய். என்றாலும் அவள் பள்ளியில் ஜிம்னாஸ்டிக்ஸ், நடனம்,  பாடல் போன்ற பல பிரிவுகளில் பங்கு கொண்டார்.

'நான் தெருவில் நடக்கும் போதும் சாப்பிடும் போதும் என்னைப் பலரும் விசித்திரமாகப் பார்ப்பார்கள். ஆனால் நான் கலங்கவில்லை. 'நான் எதற்கு விருப்பப்பட்டாலும் அதைச் செய்ய முடியும்' என்று நம்பிக்கை கொடுத்தார் என் அப்பா.  என் அம்மா ஒருபோதும் (குறைந்த பட்சம் என் எதிரில்) எனக்காக அழுததில்லை. எனக்குப் பெரிதும்  தைரியம் அளித்தார்' என்று ஒரு நேர்முகத்தில் கூறினார் ஜெசிகா.

ஒரு கட்டத்தில்  கார் ஓட்டக் கற்றுக்கொண்டார் ஜெசிகா.  இரண்டு கைகளும் இல்லாமல் தன் கால்களால் ஸ்டியரிங்கைப் பிடித்தபடி ஓட்டினார்.  அவருக்காக அந்தக் காரில் சில மாறுதல்கள் செய்யப்பட்டன. ஆனால் போகப் போக வழக்கமான காரை ஓட்டும் திறமையையும் அவர் பெற்றுவிட்டார்.    கார் ஓட்டும் உரிமத்துக்கு விண்ணப்பித்து, அதற்கான  சோதனையில் வெற்றி பெற்று, உரிமமும் பெற்றார்.

ஜெசிகா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பெற்றார். இவர் தேர்ந்தெடுத்த பாடம் மனவியல்.

அமெரிக்காவின் பல பகுதிகளில் பெட்ரோல் ஸ்டேஷன்களில் நாமே பணத்தை செலுத்தி விட்டு நாமே நம் காரின் பெட்ரோல் நிரப்பிக் கொள்வது போல் வழிவகை செய்யப்பட்டிருக்கும்.  அப்படி அவர் நிரப்பும்போது சுற்றியிருப்பவர்கள் அவரை மிகவும் வியப்பாகப் பார்ப்பதுண்டு.  காரணம் அப்போது அவர் கால்களை உயர்த்தி சில செயல்முறைகளை செய்ய வேண்டியிருக்கும்.

இன்றைக்கு நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் தட்டச்சு செய்கிறார். தன் தலையைத் தானே வாரிக் கொள்கிறார். கண்களுக்கு மை தீட்டிக் கொள்கிறார். எல்லாம்  கால் விரல்களின் உதவியோடுதான்!  அவர் தன் கால் விரல்களால் பியானோவை வாசிக்கும் அழகே அழகு!

தனது 26வது வயதில் உச்சபட்ச சாதனை ஒன்றைச் செய்தார்.   மூன்று ஆண்டுகள் கடினப் பயிற்சிக்குப் பிறகு விமான ஓட்டுநர் உரிமத்தை அக்டோபர் 10, 2008 அன்று பெற்றார்.

இவர் இலகுரக விமானம் (10,000 அடி வரையிலும்) ஓட்டுவதில் பயிற்சியும் பெற்றார்.

கைகளின்றி விமானம் ஓட்ட உரிமம் பெற்ற முதல் பெண்மணி இவர்தான். அன்னையர் தினத்தன்று தன்னுடன் யாருமே இல்லாமல் தனியாக விமானம் ஓட்டினார்.  அப்போது 'அம்மா நான் கைகள் இல்லாமல் விமானம் ஓட்டுகிறேன்' என்று கண்ணீர் பொங்கக் கத்தினார். இவர் தனியாகவே இதுவரை 130 மணிநேரம் விமானம் ஓட்டியிருக்கிறார்.

இவர் ​ஸ்கூபா டைவிங் எனப்படும் ஒரு வகையான நீர் மூழ்குதல் விளையாட்டிலும் தேர்ச்சி பெற்றவர். இப்போது  மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

டைக்குவாண்டோ என்பது கொரியாவில் அறிமுகமான ஒரு தற்காப்புக் கலை.  இது தென் கொரியாவின் தேசிய விளையாட்டும் கூட. ஒலிம்பிக் போட்டிகளிலும் இது விளையாடப்படுகிறது.  இந்தக் கலையில் கால்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. ஜெசிகா காக்ஸ் இந்த தற்காப்பு கலையை மிகச் சிறப்பாக பயின்று அதில் இரண்டு கறுப்பு பெல்ட்களையும் பெற்றுள்ளார்.

இந்தப் பயிற்சி அவரது வாழ்க்கைக்கு வேறு ஒரு திருப்புமுனையையும் அளித்தது.   இந்தக் கலையை அவருக்கு அளித்த பயிற்சியாளரான பாட்ரிக் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார்.

இன்று ஜெசிகா ஒரு சிறந்த பேச்சாளர். உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு சிறந்த வழிகாட்டி.  உலகம் முழுவதும் தன் ஊக்க உரைகளை நிகழ்த்தி வருகிறார்.வாய்ச்சொல் வீரராக இல்லாமல் தான் கூறும் உற்சாக மொழிகளுக்கு தானே ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார் அவர். நோபல் அமைப்பின் நல்லெண்ணத் ​தூதராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

'என்னால் இவ்வளவுதான் முடியும்' என்று நம்மில் பலரும் நம் செயல் பாட்டைக் குறுக்கிக் கொள்கிறோம். அதை உடைத்து, அதைவிட மிக அதிகமாகவும் மேலெழும்ப முடியும் என்பதற்கு அற்புத எடுத்துக்காட்டு பைலட் ஜெசிகா. உங்கள் எல்லைகளை உடையுங்கள் (Disarm your limits) என்ற அவரது சுயசரிதைப் புத்தகம் அதைத்தான் கோடிட்டுக் காட்டுகிறது.

(தொடர்ந்து பறப்பார்கள்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com