
இன்று நாம் கேட்க விரும்பும் பாடலில் அர்த்தங்கள் ஆயிரம் கொட்டிக்கிடக்கும். இசையும், பாடலின் வரிகளும், ஏதோ ஒரு விதத்தில் நம்முடைய மனதை கட்டிப் போட்டு விடும். இன்னல் வரும் வேளைகளில் மனிதன் இப்பாடலை கேட்டால் அவன் மனதில் கண்டிப்பாக அமைதி பிறக்கும். வாழ்க்கை என்ற படகு உலக வாழ்வியலில் சிக்கிச் சுழன்று உலாவுவதை அற்புதமாக சித்தரிக்கும் பாடலிது. நல்லவர்க்கெல்லாம் வழித்துணை இந்தப்பாடல்… அட.. பாடலைச் சொல்லுப்பான்னு நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. இதோ சொல்லிடுறேன்… சொல்லிடுறேன்…
1978… கே பாலாஜி தயாரிப்பில் கே. விஜயனின் இயக்கத்தில் கண்ணதாசன் –இளையராஜா – டி எம் எஸ் – லட்சுமி – நடிகர் திலகம் கூட்டணியில் வெளிவந்த "தியாகம்" திரைப்படத்தில் இடம் பெற்ற
"நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி…
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா…"
என்ற அதி அற்புதமான பாடல். நடிகர் திலகம் அவர்கள் சும்மா நின்று கொண்டே தன் முக பாவனைகள் வாயிலாகப் பாடலின் சோகத்தை வெளிப்படுத்தியிருப்பார். "ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை…
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை…"
செம… செம… செம… நடை அழகர் நடிகர் திலகம் அவர்கள் மொத்த பாடலுக்கும் தன் உடல் அசைவில் உயிர் தந்திருப்பார்.
"நதிவெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றமில்லை…
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா…"
என்ன ஓர் ஆழமான கருத்து.
"நின்றாலே நடிப்பு" என்பது நடிகர் திலகத்துக்கு மட்டும்தான் பொருந்தும்.
(இந்தப் பாட்டிற்கு வேறு எந்த நடிகரையாவது நடிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்… வாய்ப்பே இல்ல ராசா…!)
"தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே…
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே"…
உள்ளத்தின் வெளிப்பாடு வார்த்தையில் வரும்போதுதான் சொற்களாகின்றன. அதுவே உணர்ச்சியின் வெளிப்பாடாய் கவிஞரிடம் பிறக்கும்போது கவிதைகளாய் மலர்கின்றன. இப்படி திரைப்படப் பாடல்களில் கூட கவிதைகளை மலர வைத்தவர் நம் கவியரசர். இதயத்திற்கு விருந்தாகவும் காயம்பட்டிருக்கும் ஆயிரமாயிரம் மனங்களுக்கு மருந்தாகவும் இந்த பாடலின் வரிகள் இருக்கும்.
"நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு "… என்ற தத்துவ பாடல் ஆண்களை கவர்ந்தது என்றால் "வசந்த கால கோலங்கள்" என்ற பாடலுக்கு பெண்கள் உலகமே அடிமையானது. குறிப்பாக "தேன்மல்லிப் பூவே" என்ற பாடல் இளைஞர்களின் விருப்ப பாடல் (இப்போது போல் அப்போது செல்போன் இருந்திருந்தால் இளைஞர்களின் ரிங்டோன் அதுவாகாத்தான் இருந்திருக்கும். இந்தப் பாடல் ஒலிக்காத இடமே கிடையாது.)
"தியாகம்" திரைப்படம் "அமானுஷ்" என்ற இந்தி படத்தின் ரீமேக்.
படம் வெளியானதும் சிவாஜியின் திரையுலக எதிரிகள் படத்திற்கு வசூல் இல்லை. படம் ஃபிளாப் என்று கிளப்பி விட்டு விட்டார்கள். பாலாஜிக்கோ கடும் கோபம் (இப்போது போல் இணையம் இருந்திருந்தால் உடனடியாக பதில் கொடுத்திருப்பார் அப்போது அந்த வசதி இல்லையே…) ஆனால் படம் வெளியாகி (அதுவும் குறிப்பாக பாடல்களால்) பயங்கர ஹிட்டாக… படம் சூப்பர் டூப்பர் ஹிட். அதுவும் எப்படி… சிவாஜி படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி லாபம் சம்பாதித்தாலும், எம்ஜிஆர் படங்களே வருட இறுதியில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற பெருமையை தட்டிச் செல்லும். ஆனால் முதன்முறையாக 1978 ஆம் ஆண்டு வெளிவந்த "தியாகம்" எம்ஜிஆர் படங்களைத் தாண்டி வசூலித்தது. பாலாஜி அவர்கள் நூறாவது நாள் போஸ்டரில்… "எங்களை வாழ்வித்த தமிழ் ரசிகர்களுக்கு இதயப்பூர்வமான நன்றி. விஷமத்தனமான விமர்சனம் செய்தவர்களின் மண்டையில் சவுக்கால் அடிக்காதீர்கள். வசூலில் பெரும் சாதனை. வெற்றிக்கொடி நாட்டும் நூறாவது நாள்" என்று இருந்தது… அப்போது அது பரபரப்பாக பேசப்பட்டது.
படம் 300 நாட்களுக்கு மேல் ஓடி அந்த ஆண்டு அதிக வசூல் செய்த படம் என்ற புதிய சாதனையை படைத்தது.
"நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு " என்ற பாடலை
கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க…
என்றென்றும். அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.