யோகாவில் சாதிக்கும் சந்தியா… 

யோகாவில் சாதிக்கும் சந்தியா… 
Published on
–  ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

பொறியியல் கல்வியில் கணினியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தும் ஐடி கம்பெனி வேலை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, தான் சிறுமியாக இருந்த போது ஈர்க்கப்பட்ட யோகாவே தனது வாழ்வு என முடிவு செய்து, யோகாவில் தொடர்ந்து சாதித்து வருகிறார் சந்தியா. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டியில் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் நடத்தி வருகிறார். யோகாவில் பல சாதனை விருதுகள் வென்றுள்ளார். அவருக்கு வயது இருபத்தி ஐந்து.

இஞ்சினியரிங் படித்து தேர்ச்சி பெற்று விட்டு எப்படி யோகா தேர்வு?

ன் அம்மா விருப்ப ஒய்வு பெற்ற ஆசிரியை. அப்பா தனியார் நிறுவன ஊழியர். எனக்கு மூத்த சகோதரி ஒருவர்,. அவர் முறையாகப் பரத நடனம் பயின்றவர். அவர் பரத நடனம் கற்றுத் தருகிறார். நான் பெருவாயில் கவரப்பேட்டை பிஜேஎஸ் பொறியியல் கல்லூரியில் தான் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். கல்லூரியில் இரண்டாவது ரேங்க் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றேன். எனக்கு ஏனோ நான் படித்த படிப்பு சார்ந்த வேலைக்குச் செல்ல விருப்பம் இல்லை. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே Tamilnadu Physical Education & Spoprts University ல் எம்.எஸ்சி., யோகா இரண்டு வருடம் தொலைதூரக் கல்வி வாயிலாகப் பயின்று தேர்ச்சி பெற்றேன்.

பள்ளியில் நான் ஆறாவது படிக்கும்போதே யோகா பயிற்சி வகுப்பில் சேர்ந்து விட்டேன். ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு படிக்கும் வரை யோகா பயிற்சி வகுப்பில் அதிக விருப்பத்துடன் நிறைய ஆசனங்கள் நன்கு கற்றுக் கொண்டேன். ஒன்பது, பத்தாம் வகுப்பு படிக்கும் போது வீட்டிலேயே யோகா தனியாக நான் மட்டும் செய்து வந்தேன். பிளஸ் ஒன் படிக்கும்போது வீட்டிலேயே யோகா வகுப்புகள் நடத்தத் தொடங்கினேன். சான்றிதழ் படிப்பும் இருந்தால் தான் எதிர்காலத்தில் சாதிக்க முடியும் என்பதற்காக எம்.எஸ்சி., யோகா படிப்பிலும் சேர்ந்து தேர்ச்சி பெற்றேன். யோகாவில் எம்.எஸ்சி., முடித்து பி.ஹெச்டி. ஆய்வுக்கும் பதிவு செய்து ஓராண்டாகப் பயின்று வருகிறேன்.

கும்மிடிப்பூண்டியில் உங்கள் யோகா மையத்தின் செயல்பாடுகள் என்ன?  

பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியர்க்கென யோகா வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கும்மிடிப்பூண்டி அதனைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ளவர்கள்; யோகா வகுப்புகளுக்கு ஆர்வமுடன் வந்து போகின்றார்கள். இதில் திறமை வெளிப்படுத்துபவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்தியும் பல்வேறு போட்டிகளுக்கு அவர்களைத் தயார்படுத்தியும் வருகிறோம். கர்ப்பிணிப் பெண்களுக்கு அவர்களுக்கான சிறப்பு யோகா ஆசனங்கள் கற்றுத் தந்து அனுப்புகிறோம். அவர்களில் பெரும்பாலோர் தங்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் இயற்கையாகவே பிரசவம் நிகழ்ந்ததாக எனக்கு போன் செய்து பேசியுள்ளனர். இங்கு யோகா கற்றுக் கொண்டு போனவர்களில் பலரும் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தி உள்ளனர். அறுபது நபர்கள் ஒரே நேரத்தில் பத்து நிமிடங்களில் பத்து வகையான ஆசனங்கள் செய்து காட்டியது யூனிவெர்சல் அச்சீவ்மென்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் பதிவாகியுள்ளது. சமீபத்தில் சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு எண்பத்திநான்கு நபர்கள் ஒட்டக வடிவிலான உத்ராசனம் ஆசனத்தில் தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் ஆசனமிட்டிருக்கும் சாதனையைச் செய்துள்ளனர். அதில் நான்கு வயது முதல் பதினைந்து வயது வரையிலானப் பெண்கள் மட்டுமே பங்கேற்றனர்.

யோகாவில் உங்களது தனிப்பட்ட சாதனை என்னென்ன?

மாநில அளவிலானப் போட்டிகளில் இதுவரை நாற்பத்தியொரு தங்கப் பதக்கங்கள், இருபத்திநான்கு வெள்ளிப் பதக்கங்கள், இருபது வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளேன். தேசிய அளவிலான யோகா போட்டிகளில் ஆறு தங்கப் பதக்கங்கள், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் பெற்றுள்ளேன். சிங்கப்பூரில் நிகழ்ந்த காமன்வெல்த் நாடுகள் யோகா போட்டிகளில் ஒரு தங்கப் பதக்கம், இரண்டு வெள்ளிப் பதக்கம் வென்று வந்துள்ளேன். 2௦15ல் அப்போதிருந்த ஆளுனர் ரோசைய்யா அவர்களிடம் இருந்து "போதி தர்மர்" விருது பெற்றேன். கர்ண பத்மாசனத்தில் தொடர்ந்து பத்து நிமிடங்கள் ஆசனமிட்டு இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் சாதனைப் பதிவாகி உள்ளது. கின்னஸ் புத்தகத்திலும் நான்கு முறை வெவ்வேறு சாதனைகள் செய்து நான் பதிவாகி உள்ளேன்.

பணம் செலுத்தி யோகா கற்றுக் கொள்ள வருபவர்களுக்கு மட்டும் தான் நீங்கள் பயிற்சி தருவீர்களா? பணம் செலுத்த இயலாத வர்களுக்கு?

ணம் செலுத்துகிறவர்கள் பணம் செலுத்த இயலாதவர்கள் என்கிற பாகுபாடு நான் காட்டுவது இல்லை. கும்மிடிப்பூண்டியைச் சுற்றிலும் உள்ள கிராமங்களுக்குப் போய் வருகிறேன். அரசுப் பள்ளிகளுக்கும் சென்று வருகிறேன். சுமார் நாற்பது அரசுப் பள்ளிகளின் பிள்ளைகளுக்குக் கட்டணம் ஏதுமின்றி யோகா சொல்லித் தருகிறேன். அதுமட்டுமல்ல, மேலும் அந்த கிராம அரசுப் பள்ளிகளில் யோகா பயிற்சியின் போது தனித்துவ மானவர்களை அடையாளம் கண்டு கொள்வேன். அவர்களை கும்மிடிப்பூண்டி ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு வரவழைத்து அவர்களுக்கு கட்டணம் இல்லாமல் சிறப்புப் பயிற்சிகளும் தந்து வருகிறேன். எனக்கு அதில் ஆத்ம திருப்தி.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com