பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்?

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்?
Published on
-ஜி.எஸ்.எஸ்.

செப்டெம்பர் 05, 2022 – பிரிட்டனில் பிரதமர் தேர்தல்.

ங்கிலேயர்கள் ஒரு காலத்தில் இந்தியாவை ஆட்சி செய்தார்கள்.  ஆனால், இப்போது ஒரு வித்தியாசமான ​சூழல் உருவாகியுள்ளது. பிரிட்டனை ஒரு இந்தியர் ஆட்சி செய்யும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.  அதற்கான வாய்ப்பு ஐம்பது சதவிகிதம்தான் என்றாலும் கூட இப்படி ஒரு மாற்றத்தைக் காலம் அளித்திருப்பதே ஒரு முக்கியத்  திருப்புமுனைதான்.

42 வயதான ரிஷி சுனக் 2015இல் இருந்து பிரிட்டன் பாராளுமன்றத்தின் உறுப்பினராக இருக்கிறார்.  ரி​ச்மண்ட் தொகுதியில்  இவர் தொடர்ந்து தேர்தலில் வெற்றி கண்டிருக்கிறார்.  இவரது மனைவி அக்ஷதா மூர்த்தி.  இவர் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப முன்னோடிகளில் ஒருவரான இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி மற்றும் எழுத்தாளர் சுதா மூர்த்தியின் மகள்.

முந்தைய பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்யப் பல காரணங்கள். மரபு வாத கட்சியைச் சேர்ந்த, துணைக் கொறடாவாக பணிபுரிந்த கிரிஸ் பின்செர் என்பவர் மீது சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.  அவர் ஒரு தனியார் கிளப்பில் இரு ஆண்களுடன் பாலியல் முறையில் நடக்க முயன்றார் என்பது ஒரு முக்கிய குற்றச்சாட்டு. இதைத்தொடர்ந்து அவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இந்தப் பின்னணியில் போரிஸ் ஜான்சன் அவரை உயர் பதவிக்குப் பரிந்துரை செய்தது பிரச்னையாக வெடித்தது.  'கிறிஸ் பின்ச்சர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையி லிருந்தபோதும், அது பற்றி எனக்குத் தெரிந்திருந்தபோதும், நான் அவரைத் துணை கொறடாவாக நியமித்தது தவறு. இதனால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறினார்.

இந்தக் காரணம் தவிர,  'பணவீக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.  விலைவாசி ஏறிக் கொண்டே இருக்கிறது, கோவிட் காலத்தில் போரிஸ் அளித்த மற்றும் கலந்து கொண்ட பல பார்ட்டிகள்,  கட்சியின் நம்பிக்கை இழப்பு' என்று பல்வேறு காரணங்கள்.  ஆக ஒரு கட்டத்தில் போரிஸ் ராஜினாமா செய்யும்படி ஆனது. போரிஸ் ஜான்சன் ஜூலை 7 அன்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

அடுத்த பிரதமரை இப்போது மக்கள் தேர்வு செய்ய வேண்டாம். போரிஸ் ஜான்சன் சார்ந்துள்ள பழமைவாதக் கட்சி (கன்சர்வேட்டிவ் பார்ட்டி)  தனது உறுப்பினர்களுக்குள் அடுத்த பிரதமரைத் தேர்வு செய்யும். ஆக அந்தக் கட்சியினரில் பெரும்பான்மையினர் வாக்களிப்பவர்தான் அடுத்த பிரதமர்.  இந்தத் தேர்தல் செப்டம்பர் 5 அன்று நடைபெற உள்ளது.

பிரதமர் பதவிக்காக இறுதிக் கட்டத்தில் நிற்கும் சுனக்கோடு மோதும் மேரி எலிசபெத் ட்ரஸ் மிகுந்த அரசியல் பின்னணி கொண்டவர்.  இவர் 2010 முதல் தென்மேற்கு நோர்ஃபோல்க் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினரான இவர், டேவிட் கேமரூன், தெரசா மே மற்றும் போரிஸ் ஜான்சன் ஆகிய பிரதமர்களின் தலைமையில் பல்வேறு அமைச்சரவை பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

மீபத்தில் பிரிட்டனில் வரிகள் உயர்த்தப்பட்டன. அதை இன்னமும் ரிஷி சுனக் ஆதரிக்கிறார். அதிகமாகி வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இது தேவை என்கிறார். ஆனால், மேரி ட்ரஸ் 'நான் பிரதமரானால் முதல் நாளிலிருந்தே வரிகளைக் குறைத்துக்கொண்டே வருவேன்' என்கிறார்.  பெரும் வணிகர்கள் செலுத்தும் வரிகளையும் குறைக்க உ​ள்ளதாகக்  கூறியிருக்கிறார். அந்த நாட்டின் (நம் ரிசர்வ் வங்கி போல இயங்கும்) பேங்க் ஆப் இங்கிலாந்துதான் வட்டி விகிதங்களைத் தீர்மானிக்கும் என்ற நிலைமையை மாற்றியமைக்கப் போவதாகவும் கூறியிருக்கிறார்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியதை ட்ரெஸ் முதலில் விரும்பவில்லை.  பின்னர் ஆதரித்தார்.  ஆனால், தொடக்கத்தில் இருந்து ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று கோரி வந்திருக்கிறார் ரிஷி.  உலக வெப்பமயமாதலுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த இருவரில் யார் பிரதமராவது இந்தியாவுக்கு நல்லது?  ரிஷி சுனக்  பிரதமரானால் இந்தியாவை வம்சாவளியாகக் கொண்ட ஒருவர் பிரிட்டனின் பிரதமர் என்பதில் ஒரு சந்தோஷம் கிடைக்கலாம்.  மேரி ட்ரஸ் பிரதமரானால் மார்கரெட் தாட்சருக்குப் பிறகு ஒரு பெண்மணி பிரிட்டனை ஆளுகிறார் என்ற அந்தஸ்து கிடைக்கும்.  மற்றபடி இவர்களில் யார் வென்றாலும் அடிப்படையில் இந்தியாவுடன் தொடர்ந்து நல் உறவு கொள்ளத்தான் விரும்புவார்கள்.  அதேசமயம் இந்தியா குறித்த வழக்கமான விமர்சனங் களையும் இவர்கள் முன் வைக்கத் தயங்க மாட்டார்கள். அமெரிக்க துணைக் குடியரசுத் தலைவராக கமலா ஹாரிஸ் பதவி ஏற்றது இந்தியாவுக்கு எப்படி சிறப்பான சாதகங்களையோ  பாதகங்களையோ  இதுவரை ஏற்படுத்த வில்லையோ அதுபோலத்தான் ரிஷி சுனக் பிரதமர் ஆனாலும் ஏற்படும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com