“குட்டோ குட்டு!”

“குட்டோ குட்டு!”
Published on
ஆசிரியர் தின சிறப்புகள்!

நான்காவது வகுப்பு படிக்கும் சமயம் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் வீட்டிற்கு விருந்தினர்கள் வர, ஜாலியாக கொட்டமடித்ததில், கணித ஆசிரியை கொடுத்த ஹோம் ஒர்க் மறந்து போனது.

திங்களன்று காலையில் பள்ளி சென்றபோது, தோழி லோகாவுடன் பேசுகையில், ஹோம் ஒர்க் நினைவுக்கு வர, ஒரே டென்ஷன். கணித ஆசிரியை எப்போதும் கையாள்வது குட்டுதான். லேசாக குட்டினாலே கடுமையாக வலிக்கும். கை ஸ்ட்ராங்.

"பிள்ளையாரே காப்பாத்துப்பா!" வேண்டினேன். மனசு திக்… திக்கென அடித்துக் கொண்டது. ஆசிரியை ஒவ்வொருவராக கேட்டு "குட்டி" என் முறை வர, எழுந்து கண்களை மூடியவாறே, தலை குனிந்தேன். குட்டு மிகவும் லேசாக விழ, பிள்ளையார் காப்பாற்றி விட்டார் என மகிழ்வுடன் அமர்ந்தேன்.

பிறகுதான் தெரிய வந்தது, ஆசிரியை குட்ட கை ஓங்குகையில், தலைமை ஆசிரியர் உள்ளே திடீரென நுழைய, ஆசிரியை, தோழி லோகாவை குட்டச்சொல்ல, அவள் மிகவும் லேசாக குட்டியிருக்கிறாள். கண்களை மூடியிருந்த காரணத்தால் எனக்கு இது தெரியவில்லை.

பின்குறிப்பு :
டெஸ்க்கில் "குட்டு"

லையில் குட்டுப் போட்டுக் கொள்வதைவிட டெஸ்க்கில் ஓங்கிப் போடச் சொல்லும் குட்டு பயங்கரமாக இருக்கும். வலி துடிக்கும். ஒருசில ஆசிரியர்கள், மாணவர்களை டெஸ்க்கில் குட்டுப் போடச் சொல்வதுண்டு. பரிதாபமாக இருக்கும்.
-ஆர்.மீனலதா, மும்பை

————————————–

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது , வகுப்பில் பையன்களுக்கு ஒரு லீடரும், பெண்களுக்கு ஒரு லீடரும் இருப்போம். அந்த வருடம் நான் தான் லீடர். யாரெல்லாம் வீட்டுப்பாடம் எழுதாமல் வருக்கின்றார்களோ, அவர்கள் பெயர்களை எழுதி வகுப்பு ஆசிரியரிடம் தரவேண்டும்.

எழுதாதவர்களுக்குத் தண்டனையாக, ஆசிரியர் முன், நான் அவர்கள் தலையில் கொட்ட வேண்டும். ஒருமுறை , என் தோழி எழுதவில்லை என்பதால் அவள் தலையில் லேசாக கொட்டுவதைப் பார்த்ததும், ஆசிரியர் எழுந்துவந்து என் தலையில்  "நங் "என்று கொட்டிவிட்டு , இப்படி கொட்டவேண்டும் என்று சொன்னது இன்றும் நினைவில் உள்ளது.
 –பானு பெரியதம்பி, சேலம்

————————————–

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது என் தந்தை தலைமை ஆசிரியராக இருந்த பள்ளிக்கு தினமும் அவருடன் மிதிவண்டியில் செல்வேன். போகும்போது வாய்ப்பாடு பத்து வரை சொல்ல வேண்டும்.ஒரு நாள் போகும் போது வாய்ப்பாடு சொல்ல மறந்து விட்டேன். பள்ளிக்கு சென்று இறங்கியதும்  என்  தலையில் இரண்டு கொட்டு விழுந்தது (சக மாணவியை விட்டு தலையில் குட்டச் சொன்னார்.)  காரணம் தெரியாமல் நான் முழிக்க, வாய்ப்பாடு சொல்லாமல் வந்ததற்கு என்றார். இன்றளவும் மறக்க முடியாத அனுபவம்.
-வி.பவானி, திருவண்ணாமலை

————————————–

நான் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது,
வகுப்பில் நோட்டில் கிறுக்கி  கொண்டிருந்த என்னை எழுப்பி வசந்தா ஆசிரியை, அப்போது நடத்திய பாடத்தில்  கேள்விகேட்க, நான் விழித்ததும் ஆயிரம் முறை  அப்பதிலை
எழுதி வரச் சொன்னார். கை வலிக்க எழுதி காட்டினேன். இனி வகுப்பில்  பாடங்களை நன்கு கவனி என்றார். அந்த பதில் தான் (இன்றும் நினைவிலிருக்கும்) ஆஸ்திரேலியாவின் வேறு பெயர் தி லேண்ட் ஆப் கங்காரு!
செ.கலைவாணி  மேட்டூர்அணை .

————————————–

குட்டுப்பட்ட அனுபவம்

"ன்னங்க இப்பிடி கேட்டுட்டீங்க? " தமிழ் டீச்சர் குட்டின குட்டுல  உச்சந்தலையில இன்னும் பள்ளம் இருக்குன்னு அது எப்படி ப்பட்ட குட்டு ன்னு யோசனை பண்ணிப் பாருங்க!

கூட்டத்துல பேசறது, மறக்காம பேசறது, மைக் பிடிக்கறதுன்னு எதுக்கும் பயமில்லைங்க. ஆனா இந்த 'ழ' உச்சரிக்கும் போது மட்டும் 'ள'ன்னு வந்திடும்.

அன்னிக்கு மாவட்ட அளவு பேச்சுப் போட்டியில எங்க பள்ளியின் சார்பா கலந்து பேசினேன். முதல் ரவுண்டு தேர்வாகி அடுத்த ரவுண்டு ஆரம்பிக்கப் போகுது. தலைப்பு மேடையேறினதும்தான் தருவாங்க.  இரண்டு நிமிஷம் தான் டைம் தருவாங்க. அதெல்லாம் நமக்கு பயமில்லை ன்னு 'கெத்தா' நின்னு கிட்டு இருந்தப்பதான் விழுந்தது பலமா.

ஒண்ணுமே புரியாம "நான் எங்க இருக்கேன்? " னு சினிமாவுல வர்ரமாதிரி கேட்டுட்டு பார்க்கிறன்! டைட் குளோசப்புல தமிழ் மிஸ்.

"இனிமே 'ழ'க்கு 'ள 'சொல்லுவியா? ன்னு பிடிச்சு ஏறிட்டாங்க.

உடனே மேடை ஏறி (தலைய பிடிச்சுக்கிட்டே தான்) பேசறேன்.

என்ன  ஆச்சர்யம்?சரியான உச்சரிப்பு வந்துடிச்சு. அதுக்கப்புறம் எப்பவுமே அந்த தப்ப பண்ணணவே இல்லை.  மாவட்ட அளவில் நடந்த போட்டியில் இரண்டாம் பரிசும் கிடைத்தது.  தாயைப் போல அக்கறையுடன் கண்டித்த டீச்சரை  என் பேச்சை யாராவது பாராட்டும் போது நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.
.கிருஷ்ணவேணி,  நொளம்பூர்

————————————–

பிளஸ் டூ கடைசி நாள்.
கொஞ்சம் மகிழ்ச்சிநிறைய வருத்தம்

சிரியரின் அறிவுரைகள்… என நேரம் ஓடிக் கொண்டிருந்தது. கடைசியாக அக்கவுண்ட்ஸ் ஆசிரியர் தங்கவேல் ஸார் வந்தார். உங்களுக்கு எந்த அறிவுரையும் நான் சொல்லப்போவதில்லை. எல்லோரும் அவரவர்களுக்குப் பிடித்த  பாடலின் இரண்டு வரியை பாடுங்கள் என்றார்.

என் முறை வந்தது. ( எனக்கும் பாடலுக்கும் ஏழாம் பொருத்தம்) நான் வேண்டாம் என்று எவ்வளவோ கெஞ்சினாலும் யாரும் கேட்பதாக இல்லை தைரியத்தை வரவழைத்துக் கொண்டு 'என்ன மச்சானே நீ இப்படி பண்ணிபுட்ட 'என்று ஒரு பாடலைப் பாட… சார், ஒரு வினாடி அதிர்ச்சியாகி, பிறகு சமாளித்துக் கொண்டு கையில்  இருந்த அட்டன்டன்ஸ் ரிஜிஸ்டரால் தலையில் ஒரு தட்டு தட்டி விட்டு கிளம்ப, வகுப்பில் 'கொல்' என்று சிரிப்பொலி .(இப்பவும் இத்தனை(35) வருடங்கள் கழிந்தும் என் தோழிகள் பேச ஆரம்பித்தால் ஆசிரியரையே வெட்கப்பட வைத்த ஒரே நபர் நீதான் ஆதி என்று என்னை கலாய்ப்பார்கள்.)
-ஆதிரை வேணுகோபால், சென்னை

————————————–

"பின்னி டீச்சர்"

ழாவது படிக்கும்போது, பூகோளப் பாடம் எடுத்த பின்னி டீச்சர், ஸ்கேலை கையாலேயே தொட மாட்டார். தண்டனை தர கையாள்வது அவருடைய  கையைத் தான்.முஸ்டி போல் மடக்கி, குட்டும்போது தடவுவது போலத்தான் தெரியும்.ஆனா, கல் தூணில் முட்டினாற் போல் வலியில் துடிக்க வச்சுடும்.

மேப் டிராயிங்கின் போது, குட்டுப்படாத மாணவிகள் கம்மி. இடங்களை குறிக்கும் போது, புள்ளிகளில் குறியாக இருப்பார்.தப்பாயிட்டா, தலையில் விழும் குட்டு. நானும் நிறைய முறை குட்டுப்பட்டு அழுதிருக்கேன். கடைசியாக, அவர்களே ஐடியா கொடுத்தார்கள்.அட்லஸில், குட்டி ஸ்கேலால் அளந்து, அதே அளவில் மேப் டிராயிங் நோட்டிலும் அளந்து குறிக்க சொன்னார். அதன்பின் குட்டுக்கள் குறைந்தது. டீச்சரின் குட்டை எழுதும்போது, உள்ளங்கை தலையை  தேய்க்கிறது.
-என்.கோமதி, நெல்லை

————————————–

நான் நாக்பூரில் ஏழாம் வகுப்பு படிக்கும்போது ஆங்கில ஆசிரியை பொயட்ரி நடத்தும் பொழுது அதை கவனிக்காமல் கீழே விழுந்த பென்சிலை சுவாரசியமாக தேடிக்கொண்டிருந்தேன். சப்தமிடாமல்  அருகில் வந்த அவர் குனிந்து கொண்டிருந்த  என் தலையில் ஒரு குட்டு வைத்தார். மற்றொரு முறை ஆசிரியர் கேள்வியை கேட்டு முடிப்பதற்கு முன்பாகவே முந்திரிக்கொட்டையாய் முந்திக்கொண்டு தவறான பதிலை சொன்னதற்காக  ஒரு குட்டு வாங்கினேன். சரியாக சொல்லி இருந்தால் ஷொட்டு கிடைத்திருக்கும் என்றார் ஆசிரியர்.
-சுதா திருநாராயணன் , ஸ்ரீரங்கம்

————————————–

நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, "ஹோம் ஒர்க் எங்கே?" என்று வகுப்பாசிரியர் கேட்க, 'ஹோம் ஒர்க் முடிச்சுட்டேன் சார்.. நோட்டை மறந்து போய் வீட்ல வெச்சுட்டு வந்துட்டேன்.." என்று வழக்கமான புருடாவை எடுத்து விட்டேன்.. உடனே அவர், "உங்க அம்மா நம்பருக்கு இதுல இருந்து ஃபோன் போட்டு அந்த நோட்டை எடுத்து வரச் சொல்லு.." என்று தன் ஃபோனை நீட்டினார். எனக்கு வேர்த்து விறு விறுக்க ஆரம்பித்தது. உடனே அவர், "நீ ஹோம் ஒர்க் முடிக்காதது கூட தப்பில்லை.. பொய் சொன்னதுதான் தப்பு.." என்று அறிவுரை கூறி, என் தலையில் ஒரு சிறிய குட்டு வைத்தார்.
-ஆர். பத்மப்ரியா ‌, திருச்சி

————————————–

றாம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம் இது.  வகுப்பாசிரியர் வகுப்பில் குட்டித் தூக்கம் போடுவது வழக்கம்.. அன்று, "ஹெட்மாஸ்டர் வந்தா எழுப்பி விடு" என்று என்னிடம் கூறி விட்டு, வழக்கம் போல தூங்க ஆரம்பித்தார். நான் ஏதோ ஞாபகத்தில் மறந்து விட, திடீர் விசிட் அடித்த ஹெட்மாஸ்டரிடம் இவருக்கு செம திட்டு.. அவர் சென்ற பின் எனக்கு செம குட்டு.
-எஸ். ராஜம், திருச்சி

————————————–

பள்ளியில் ஆசிரியரிடம் குட்டுப்பட்ட அனுபவம்.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது ஒருமுறை வீட்டுப்பாடம் கொடுத்து இருந்தார்கள். வீட்டிற்கு அன்று விருந்தாளிகள் வந்ததால் நான் அதை எழுதவே மறந்து விட்டேன் . மறுநாள் பள்ளிக்கு போனதும் ஆசிரியை அவ்வீட்டு பாடம் எங்கே என்று கேட்டார் நான் எழுதியதை வீட்டில் வைத்து விட்டு வந்துவிட்டேன் என்று சொல்ல மதியம் வீட்டிற்கு சாப்பாட்டிற்கு தானே போவாய் அப்போது எடுத்துக் கொண்டுவா என்று சொல்லி விட்டார் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.  அதே பள்ளியில் என் அண்ணன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.  அந்த ஆசிரியையை உன் தங்கை  வீட்டுப்பாடம் நோட்டை கொண்டு வரவில்லை என்று சொன்னவுடன் என் அண்ணன் அரிச்சந்திரன் போல் நேற்று எங்கள் வீட்டிற்கு உறவினர்கள் வந்தார்கள் அதனால் என் தங்கை வீட்டுப் பாடம் எழுதவில்லை" என்று சொன்னவுடன் ஆசிரியை  என் வகுப்பிற்கு வந்து என் தலையில் ஒரு குட்டு வைத்து எழுதவில்லை என்றால் உண்மையை தான் பேச வேண்டும்.  என்று என்னை கடிந்து கொண்டார்.

அன்று பள்ளியில் என்னை குட்டு வாங்க வைத்த அந்த அண்ணன் இப்போது உயிருடன் இல்லை இந்த நிகழ்ச்சியை நினைத்தாலே என் அண்ணனின் நினைவு இருந்து கண்களில் நீர் பெருகும்
உஷாமுத்துராமன்,  திருநகர்

————————————–

ப்போது நான்  ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ட்ராயிங் வரைய அவ்வளவா வராது. வாரம் ஒரு க்ளாஸ்தான். அந்த சமயம் ராகவன் என்ற ஆசிரியர் புதுசா வந்திருந்தார். நல்ல திறமைசாலி. ஒரு பறவையின் படத்தை போர்டில் வரைந்து காட்டி, அதை அனைவரையும்  நோட்டில் வரைய சொன்னார்.

நான் வரைந்ததை பார்த்துவிட்டு, என் உச்சந்தலையில் விரலால் தொட்டு 'உனக்கெல்லாம் கண் இங்கயா இருக்கு'  என்றார். அப்பிடியே நறுக்குன்னு ஒரு குட்டு வைத்துவிட்டு பறவையின் கண்ணை அழகா திருத்திக் கொடுத்தார். மறக்க முடியாத குட்டு.
ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்

————————————–

சிரியர்கள் கையால் குட்டுப்படவும் கொடுப்பினை வேண்டும்.  அது ஒரு தனி சுகம். வரையறை செய்யவே முடியாது. அலாதியான அனுபவம். ஒன்றா இரண்டா… நான் இப்போது தமிழில் இவ்வளவு சரளமாக எழுதக் காரணமே எனக்கும் தமிழ் அம்மாவுக்கும் இருந்த புரிதல் மட்டுமே. ஒரு சின்ன விஷயம், குழுவாக சேர்ந்து செய்யுங்கள் என்றார் அவர்.  நானோ அதை சரிவர புரிந்து கொள்ள முடியாமல், மீண்டும் மீண்டும் அதைப் பற்றியே சந்தேகம் கேட்டுக் கொண்டு இருந்தேன், ஆசிரியையோ,  மெதுவாக, பொதுவாக, இதமாக, பதமாக சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால், எனக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை, அதை பற்றியே குழம்பி அவரையும் குழப்பினேன். எடுத்தார் கழியை, என்னை வரிக்குதிரை ஆக்கிவிட்ட பின்னரே , அவரின் புதிர் எனக்கு புரிந்தது, அதன் பின்னர் தனியே என்னை அழைத்து  மீண்டும் விளக்க நான் சிரித்துக் கொண்டே, நன்றி சொல்ல , "போடி இவளே " எனச் செல்லமாக அதட்ட, வகுப்பே சிரிப்பலையில் ஆழ்ந்தது, இன்றும் ஆசிரியையின் வருடல் நினைவில் உள்ளது,

நானும் இன்று ஒரு சிறந்த ஆசிரியைதான், ஆனால் செல்லமாக கூட தற்போது பிள்ளைகளை அதட்ட முடியா துரதிஷ்ட காலத்தில்.
-ஸ்ரீ வித்யா, நங்கநல்லூர்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com