தாலிபன் தலைமையில் தொடரும் இன்னல்கள்!

தாலிபன் தலைமையில் தொடரும் இன்னல்கள்!

Published on
-ஜி.எஸ்.எஸ்.

ருபது வருடங்களாக ஆப்கானிய அரசுக்கெதிராகப் போரிட்டவர்கள் தாலிபன் அமைப்பினர்.  இன்று அவர்கள்தான் அங்கு அரசமை​த்திருக்கிறார்கள் (அந்த அரசை உலகின் ஒருநாடுகூடஅங்கீகரிக்கவில்லை என்பது வேறு விஷயம்).

உலக நாடுகளுள், பெண்களுக்கு உயர்நிலைப் பள்ளிப் படிப்புக்கு அனுமதி கிடையாது என்று கூறும் ஒரே நாடு ஆப்கானிஸ்தானாக மட்டும்தான் இருக்கும் எனத் தோன்றுகிறது. தாலிபன் ஆட்சியின் விளைவு!

அதுமட்டுமல்ல,  அங்கு மகளிருக்கு என்று எந்தத் துறையும் கிடையாது.  அமைச்சரவையில் எந்தப் பெண்ணும் கிடையாது என்பது சொல்லாமலே புரிந்திருக்கும்.  ஆக, அரசியலில் எந்தவொரு விதத்திலும் பெண்களைப் பங்கேற்க விடாமல் செய்து, அவர்களது  முன்னேற்றத்தை ராட்சசத்தனமாக தடுத்துக்கொண்டிருக்கிறது ஆப்கானின் தற்போதைய அரசு.

78 கிலோமீட்டருக்கு மேல் ஒரு பெண் பயணம் செய்தால் கட்டாயம் ஆணின் துணை அவசியம்  அவருக்கு இருந்தாக வேண்டும் என்று வேறு புதிய சட்டம்.  மிகவும் அவசியம் என்று இருந்தாலொழிய  வீட்டை விட்டு பெண்கள் வெளியே வரவேண்டாமே என்கிறது அரசு.

மற்றபடி பொது இடங்களில் பெண்கள் உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டாக வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறார்கள்.

போகிற போக்கில் ஆண் துணை இல்லாமல் பெண்கள் காய்கறிக் கூட வாங்க முடியாது என்ற நிலை தோன்றவிடுமோ என்று அச்சப்படுகிறார்கள் பெண்கள்.  எதிர்ப்படும் புதியவன் எவனாவது கைவிரலை ஆட்டியபடி மிரட்டினால் நடுங்கும்  நிலையில்தான் இருக்கிறது அங்கு பெண்களின் நிலை.  காவல் நிலையத்துக்குச் சென்று புகார் கொடுத்தால், அது எந்த அளவில் தங்களுக்கு எதிராக திரும்பும் என்பது பெண்களுக்குத் தெரியும். அதனால் அதுவும் சாத்தியமில்லை.

தாலிபன் ஆட்சியைக் கைப்பிடித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. பெண்களின் நிலை கிட்டத்தட்ட முழுவதுமாக அழிக்கப்பட்டு வருகிறது.  அவர்கள் ரகசியமாக வீட்டுக்குள்ளேயே படித்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்கள் கல்வியறிவு மேம்படக்கூடும்.  ஆனால், அவர்கள் கல்விக்கான அங்கீகாரம் இல்லாததால் அவர்கள் பொருளாதாரம் இனி மேம்பட முடியாது.  வருங்காலத்தை நசுக்குவதாக இருக்கிறது தாலிபன் ஆட்சிமுறை.

சென்ற ஆண்டில் நமது சுதந்திர தினத்தன்றுதான் ஆப்கானியப் பெண்கள் தங்கள் சுதந்திரத்தை முழுவதுமாக இழந்துவிட்டார்கள் என்று கூறலாம். ஆகஸ்ட் 15, 2021 அன்றுதான் தாலிபன்கள் ஆப்கானியத் தலைநகரமான காபூலைக் கைப்பற்றினார்கள். அன்றிலிருந்து பொதுவாகவும் மிக குறிப்பாகப் பெண்களுக்குமான மனித உரிமைகள் பெரிதும் அங்கு மீறப்பட்டுள்ளன.

ஷரியா சட்டத்திற்கு உட்பட்டு பெண்களுக்கான கல்வி, பணி வாய்ப்பு போன்றவை வழங்கப்படும் என்று தாலிபன் முதலில் கூறினார்கள்.  ஆனால், இப்போது பொது வாழ்விலிருந்து அவர்களை ஒட்டுமொத்தமாக அகற்றும் வேலைகள்தான் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

மகளிருக்கான ஒரு அமைச்சகம் முன்பு இருந்தது. அதுவும் நீக்கப்பட்டு விட்டது.

ஐ.நா. மகளிர் செயல் இயக்குனர் சிமா பஹவுஸ் 'ஆண்டாண்டு காலமாக பலவித முயற்சிகளுக்குப் பிறகு ஆண் பெண் சமத்துவத்தை நிறுவி வருகிறோம்.  ஆனால், மூன்றே மாதங்களில் பெண்களின் அனைத்து உரிமைகளையும் ஆப்கானிஸ்தானில் நீக்கிவிட்டார்கள்.  இது நாம் இணைந்து செயல்பட வேண்டிய நேரம்' என்று கூறியிருக்கிறார்.  எப்படிச் செயல்படப் போகிறார்கள் என்பதுதான் விளங்கவில்லை.

இளம் தொழிலதிபராக காபுலில் விளங்கியவர் ஒரு பெண்மணி. வெளிநாடுகளிலும் கிளை தொடங்க நினைத்தார். இப்போது அந்தக் கனவுகள் அணைந்துவிட்டன.   இன்னமும்கூட அவரது தொழில் நடந்துக்கொண்டிருக்கிறது.  ஆனால், அதை சக ஆண்களின் பெயரில் நடத்த வேண்டிய கட்டாயம். ஏதாவது சிக்கல் வந்துவிடுமோ என நினைத்து பல வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதரவை நிறுத்திக்கொண்டு விட்டார்கள்.  'ஐந்து பெண்களை வேலைக்கு அமர்த்தி இருந்தேன்.  அவர்கள் அனைவரும் நின்றுவிட்டார்கள்.  பயம்.  அவர்கள் குடும்பங்கள் இப்போது வறுமையில் வாடுகின்றன' என்கிறார் அப்பெண்மணி சோகத்துடன்.

45 வயதான ஒரு முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளர்  பெண்களின் மனநல ஆலோசகரும் கூட.  அச்சுறுத்தல்களுக்கு நடுவே இன்னமும்கூட சக பெண்களுக்கு மனநலம் அளிப்பதை தொடர்ந்து செய்து கொண்டி ருக்கிறார்.  முக்கியமாக வன்முறைக்கு உள்ளாகும் பெண்களுக்கு மன ஆறுதல் அளித்து வருகிறார்.

"அடுத்தடுத்து என்று முன்னேற்றத்தில் தடைகள் வந்துகொண்டே இருக்கின்றன. மேலும் மேலும் பெரியத் தடைகளாக இருக்கின்றன.  என்றாலும் பெண்கள் அனைவரும் இணைந்து மெல்லமெல்ல வெற்றி காண்போம் என்று கூறி வருகிறேன்.  நானும் அதை நம்புகிறேன்.  கணிசமானக் குடும்பங்களில் பெண்கள் மட்டுமே சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றிக்கொண்டிருந்தார்கள். அந்தக் குடும்பங்கள் எல்லாம் இன்று நடுத்தெருவுக்கு வந்துவிட்டன.  ஆட்சி செய்பவர்கள் பெண்களுக்கு எதிராக இருப்பதால் குடும்ப ஆண்களும் கூட தங்கள் வீட்டுப் பெண்களுக்காக குரல் கொடுக்க அஞ்சி நடுங்குகிறார்கள்.  நான் தினமும் காலையில் வேலைக்குக் கிளம்பும்போது 'நான் மனநல ஆலோசகர் மட்டுமல்ல. பெண்களின் மனக்காயங்களை ஆற்றும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது' என்று மனதில் நினைத்துவிட்டுக் கிளம்புகிறேன்" என்கிறார் இவர்.

'இதுவும் கடந்து போகும்' என்ற நம்பிக்கைதான் அவர்களின் ஒரே ஆறுதல்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com