அடுத்தவர் பார்வையில் தீர்வு!

அடுத்தவர் பார்வையில் தீர்வு!
Published on
– இந்திராணி தங்கவேல்
ஓவியம்: பிள்ளை
ஒரு கதை:

விடுமுறை நாளில் வீட்டில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தார் அவர். அவரின் சுட்டிக் குழந்தை அடிக்கடி வந்து ஏதேதோ சந்தேகம் கேட்டது .ஒவ்வொரு முறை பதில் சொல்லி அனுப்பினாலும், அடுத்து நான்கு வரிகள் படிப்பதற்குள் புதிதாக இன்னொரு சந்தேகத்தோடு வந்து நின்றது.

அவரது வேலை தொடர்பான புத்தகம் அது. அடுத்த நாளில் புதிதாக தொடங்க இருக்கும் ஒரு பிராஜெக்ட்டுக்கு இந்தப் புத்தகத்தை இன்று படித்து முடிப்பது அவசியம். ஆனால் குழந்தைக்கு அது புரியாது. விடுமுறையில் அப்பா வீட்டில் எப்போதாவது தான் இருக்கிறார். அப்போதுகூட அவர் நம்மோடு நேரம் செலவிட இல்லையே என்ற ஏக்கம் அதன் கண்களில் தெரிகிறது .குழந்தையை கடிந்து கொள்ளவும் முடியாது.

பிஸியாக ஏதாவது வேலை கொடுக்காதவரை, குழந்தை தன்னை முழுமையாக படிக்க விடாது என்பதை உணர்ந்தார். ஒரு பேப்பரில் இருந்த உலக வரைபடத்தை பல துண்டுகளாக வெட்டினார். அந்தத் துண்டுகளையும் பசை டியூபையும் குழந்தையிடம் கொடுத்த அப்பா, "உன்னோட அறிவுக்கு இதோ ஒரு சவால். இந்தத் துண்டுகளை சரியாக பொருத்தி பழையபடி உலக வரைபடத்தை உருவாக்க வேண்டும். நல்லா யோசிச்சு ஒவ்வொரு துண்டையும் சரிபார்த்து கரெக்டான இடத்தில் ஒட்டி எடுத்துக் கொண்டு வா! "என்று சொல்லி அனுப்பினார்.

குழந்தை யோசித்தபடியே அவற்றை எடுத்துப்போக, அவருக்கு நிம்மதி! எப்படியும்  அவற்றைப் பொருத்தி முழுமையாக உலக வரைபடத்தை உருவாக்க ஒரு நாள் ஆகிவிடும். இன்றைக்கு முழுக்க  குழந்தையின் கேள்விக்கணைகளில் இருந்து தப்பித்து புத்தகத்தைப் படிக்கலாம் என நினைத்தார் .

ஆனால் அடுத்த ஐந்தாவது நிமிடமே வரை படத்தை ஒட்டி எடுத்து வந்தது குழந்தை. ஏதாவது தப்பு இருக்கிறதா என்று பார்த்தால் கச்சிதமாக இருந்தது அது! ஒரு பிரமிப்போடு குழந்தையைப் பார்த்தார் அவர் .ஏனெனில் அவரால் கூட இவ்வளவு வேகத்தில் துண்டுகளை ஒழுங்காக  இணைத்திருக்க முடியாது.

'எப்படிச் செய்தே? 'என்று ஆச்சரியத்தோடு குழந்தையைக் கேட்டார் அவர். வரைபடத்தை திருப்பிக் காட்டிய  குழந்தை "இந்த வரை படத்துக்குப் பின்னால் ஒருத்தரோட முகம் இருந்தது. அதை ஒழுங்கா வரவழைச்சுட்டா பின்னாடி இருக்கிற வரை படமும்  வந்துடும்னு தெரியும். அப்படித்தான் ஒட்டினேன்" என்று சொல்லிவிட்டு சமர்த்தாக வெளியில் விளையாட போய்விட்டது.

ஓர் அனுபவம்:

நாம் சிக்கலாக கருதும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் சமயங்களில் நம் கண்களில் படாது. மற்றவர்களின் பார்வையில் அவை உடனே தெரியலாம்.

எனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தேன். நள்ளிரவில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த பொழுது  திடீரென்று விருந்தினர்கள் வந்து விட்டனர் . அவர்களுக்கு எங்கள் பெட்டைக் கொடுத்துவிட்டு, நாங்கள் தரையில் பாய் போட்டு  உறங்கினோம். காலையில், வீட்டிற்கு வந்த சுட்டிக் குழந்தை மற்றொரு ரூமில் ஓர் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மெத்தையை காண்பித்து, நீங்கள் இதில் உறங்கி இருக்கலாமே! ஏன் தரையில் படுத்து உறங்கினீர்கள் என்று கேட்க, அப்போதுதான் இடப்பற்றாக்குறையினால்  ஒரு ஓரத்தில் பெரிய மெத்தையை நிறுத்தி வைத்திருந்தது  நினைவிற்கு வந்தது. அப்போது புரிந்துகொண்டேன். நம் கண்ணுக்குத்  தெரியாத தீர்வுகள் மற்றவர்கள் பார்வையில் தெரியவரும் என்பதை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com