மைண்ட் செட் முன்னேற்றம்!

மைண்ட் செட் முன்னேற்றம்!
Published on
-சேலம் சுபா

கீதாவும் மாலாவும் பக்கத்து வீட்டுத் தோழிகள். இருவரும் எனக்கும் தோழிகள் .கீதாவைப் பற்றி பேசும் போதெல்லாம் அவள் ஒரு உம்மணா மூஞ்சி. வாயைத்திறந்து பேசவே மாட்டா என்பாள் மாலா. மாலாவைப்பற்றி கீதாவோ மாலாக்கா ரொம்ப லொட லொட. ஒரு ரகசியம் கூட நிக்காது, என்பாள். ஆனால் எனக்குத் தெரிந்து இருவரின் மதிப்பீடுமே தவறு. கீதா என்னிடம் பேசும்போது அவ்வளவு கலகலப்பாக பேசுவாள். அதே மாதிரி மாலா லொட லொடத்தாலும்  அவ்வளவு எளிதில் அடுத்தவர்களைப் பற்றிய விசயங்களைப் பேச மாட்டாள்.

இங்குதான் மைன்ட் செட் எனப்படும் நம் மனத்தடை வருகிறது. கீதாவை முதல் முறை பார்த்த போது மாலாவின் மைன்ட் செட்டில் அவள் ஒரு உம்மணா மூஞ்சி என்று பதிந்து விட்டது. மாலாவுக்கும் அப்படியே. இவர்களே நினைத்தாலும் இது மாறப்போவதில்லை .ஆனால் மாற்றிக்கொண்டு பழகினால் புரியும். அந்த நட்பு மேலும் புரிதலுடன் தொடரும். இது நட்புக்கு மட்டுமல்ல. நம் வாழ்வின் அனைத்து விசயங்களுக்கும் பொருந்தும். மாமியார் என்றாலே மருமகளுக்கு ஆகாது என்பது முதல் வாழ்வின் வெற்றிக்குத் தடையாக இருப்பது வரை நம் மைன்ட் செட் தான் முதல் காரணமாகிறது .

மைசூர்பாகு செய்ய ஆசை. ஆனால் ஒரு முறை செய்தததில் பதம் தவறிப்போய் கல்லு மாதிரி ஆனதால் மனதில் நமக்கு மைசூர்பாகு செய்ய வராது என்பது ஆழமாக பதிந்து அதன் மேல் உள்ள ஆசையை விட்டு விடுவோம். கொஞ்சம் நமது மைன்ட் செட்டை மாற்றி எத்தனை தடவை செய்தாலும் சரி நன்றாக வரும்வரை விடப் போவதில்லை என்று முயற்சி செய்தால் கண்டிப்பாக வாயில் போட்டதும் கரையும் மைசூர்பாகு நம் வசம்.

வயதுக்கு வந்து விட்டால் பெண் பிள்ளைகள் ஆண் பிள்ளைகளோடு அதிகம் பழகக்கூடாது. கொஞ்சம் வயசு வந்து விட்டால் பெற்றோரிடம் எதையும் பேசக்கூடாது, பிரபலங்கள்னா தள்ளி நிக்கணும், இப்படி  நிறைய கூடாதுகள். இதெல்லாம் எந்த ஊரின் நியாயங்கள்? நம்ம ஊர் பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்த மைன்ட் செட் நியாயங்கள்தான் இவை. இவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமா? அது இந்தக் காலத்தில் செல்லுபடியாகுமா?

அரசுப்பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவியை, அந்த மாதம் மூன்று நாட்கள் பள்ளிக்கு செல்ல அவள் அம்மா அனுமதிப்பதில்லை என்று அழாத குறையாக அந்தப் பெண் அவள் ஆசிரியையிடம் சொல்லியிருக் கிறாள். அந்த ஆசிரியை அவள் வீட்டுக்கே சென்று அந்தத் தாயின் மைன்ட் செட்டை மாற்றப் படாத பாடு பட்டிருக்கிறார்.

அந்தக் காலத்தில் அம்மாவும் பாட்டியும் காலைக் கடன்களை முடித்து குளித்த் பின்பே சமையல் அறைக்குள் நுழைந்து அடுப்பைப் பற்ற வைப்பார்கள். அதையே பின்பற்றி நீயும் குளித்து முடித்த பின் தான் அடுப்பைப்பற்ற வைக்க வேண்டும் என்று இன்றைய ஐ.டி. பெண்களைப் பார்த்து அவர்களின் கணவன்மார்கள் சொல்ல முடியுமா? எங்கம்மா அப்படித்தான் இருந்தார்கள் நீயும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொன்னால்… நினைத்துப் பாருங்கள். அங்கே போரே நடக்கும். உங்க மைன்ட் செட்டை மாற்றினால்தான் உங்களோட குடுத்தனம் பண்ண முடியும்னு ஒரே வார்த்தையில் சொல்லிட்டு போய்கிட்டே இருப்பாங்க இன்றைய படித்த பெண்கள்.

அப்ப குளிச்சிட்டு சமையல் பண்ணுன்னு சொல்றது நல்லதில்லையான்னு நீங்க கேட்பது புரிகிறது. இந்த இடத்தில் நல்லது நல்லதில்லைன்னு விவாதம் தேவையில்லை. இரவு பன்னிரண்டு மணி வரை விழித்திருந்து கணினி முன் அமர்ந்து வேலை பார்த்து குடும்பப் பொருளாதரத்துக்கு உதவும் பெண்கள் காலையில் அவசர அவசரமாக எழுந்து எல்லா வேலைகளையும் முடித்து கிளம்புவதை விட்டு குளிச்சிட்டுத் தான் அடுப்புக்கிட்ட போகணும் என்பது போன்ற அந்தக்கால சம்பிரதாய மைன்ட் செட்டுக்குள் வர மாட்டார்கள்.

நான் கருப்பு என் பல்லு முன்னாடி இருக்கு நான் ஒல்லி என் தலை முடி குட்டை. இப்படி நம் உடல் மீதான மைன்ட் செட் நம் தன்னம்பிக்கையை குலைத்து  தனித்துவத்தை மறைத்து ஒடுங்கச் செய்து விடும். நம் ஆழ்மனதிற்குள் பதிய வைக்கும் எண்ணங்களே நம் வாழ்வின் வெற்றிக்கு அடித்தளம்.

உறவுகளுக்கிடையில் பிரச்னைகள் வர முதல் காரணம் இந்த மனத் தடைகளே. எப்போதோ அவர் செய்த தவறுகள் நம் பார்வையில் அவரை கெட்டவராக்கி அவருடனான உறவு முறிந்திருக்கும். அவரால் நமக்கு சில நல்ல செயல்கள் நிகழ வேண்டும் எனும் நிலையில் கூட நமக்கு நம் மைன்ட் செட்டை மாற்றி அவரை சென்று காண மனம் வராது. ஆனால் அவர் மீதான பார்வையை மாற்றுவதன்  மூலம் நாம் அடையப்போவது நன்மையைத் தானே?

இந்த மைன்ட் செட் அலுவலகம் வீடு நட்பு உறவு என எல்லாவற்றையும் ஆக்கிரமித்து நம்மை ஆட்டிப் படைத்து வருகிறது. புலி மாதிரி உறுமுறதை தவிர மேனேஜருக்கு ஒன்றும் தெரியாது என்று புலம்புபவர்களுக்கு அவர் சிரிப்பு கிளப்பின் செகரட்டரி என்பது தெரியாது.

நம் முன்னேற்றங்களுக்கு பெரும் தடையாக இருப்பதும் இந்த மனத் தடைகள்தான். பெரும் திறமை கொண்டவர்கள் ஒரு ஸ்டேஜுக்கு மேல் செல்லாமல் தேங்கி விடுவதற்கு காரணமாகி விடுகிறது .என்னால் முடியாது என மனதிற்குள் ஒரு வட்டத்தைப் போட்டு அதை விட்டு வெளியே வராமல் வரும் வாய்ப்புகளை தவிர்த்து வாழ்வில் முன்னேற முடியாமல் தவிப்பவர்கள் பலர்.

பெரியவர்கள் நமக்கு அறிவுரை சொல்லும் போது நிச்சயம் ஒரு முறையாவது உன் மைன்ட் செட்டை மாற்றிக்கோ நீ நல்லா வருவே என்று சொல்லி இருப்பார்கள்.

நம் மனத் தடையை நீக்கி மற்றவர் மீதான பார்வையையும் வாழ்க்கை மீதான எண்ணத்தையும் மாற்றுவோமானால் நம்மை சுற்றி நிகழும் எந்த நிகழ்வுகளாலும் நாம் பாதிக்கப் படாமல் நிம்மதியாக வாழ்வோம் எனபது உறுதி.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com