முத்துக்கள் மூன்று!

முத்துக்கள் மூன்று!
Published on
தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்
தங்கப் பதக்கம் பெற்ற மாணவி

துருக்கி நாட்டில் அண்மையில் நடந்த சர்வதேச பளுதூக்கும் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார் அபிராமி. இதில் ரஷியா, சீனா, கஜகஸ்தான், சிங்கப்பூர் எனப் பல நாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களைத் தோற்கடிப்பது மிகக் கடினமாக இருந்தது என்கிறார் அபிராமி. முதலில், சென்னை மாவட்ட அளவில் தங்கப்பதக்கம் வென்றவர், பின்னர் பல தேசியப் போட்டிகளில் கலந்து  வெற்றி பெற்றுள்ளார்.

தற்பொழுது சென்னையில் எம்.எஸ்.சி., விஸ்காம் மற்றும் அனிமேஷன் படித்துக் கொண்டிருக்கும் மாணவி அபிராமி.

சர்வதேச போட்டியில் வெற்றி பெற்றவுடன், இவரை ஊக்குவிப்பதற்காக தங்களது ஜிம்மினை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்து வருகிறார்கள் ஜிம் உரிமையாளர்கள். ஒரு நாளில் 10 மணி நேரம் பயிற்சி செய்வதாக குறிப்பிடுகிறார். காமன்வெல்த் போட்டிகளில் கலந்துகொண்டு இந்தியாவிற்காக தங்க பதக்கம் வாங்குவதுதான் லட்சியம் என்றும், அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் உற்சாகமாக சொல்கிறார் அபி.

————————————-

சமூக சேவை செய்யும் மருத்துவர்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் நந்தினி முருகன். சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட நந்தினி, ஏழைகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளை  வழங்கி வருகிறார்.

மரக்கன்றுகளை நடுவது முதல் மாணவர்களின் படிப்புக்கு உதவுவது வரை பல்வேறு பணிகளையும் செய்து வருகிறார். 'ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மருத்துவம் படித்தேன்'  என்று கூறும் இவர், தற்போது ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று இலவசமாக மருத்துவ முகாம் நடத்தி வருகிறார்.

ராசிபுரம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 2020 ம் ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்திருக்கும் இந்த இளம் மருத்துவர், சமூக ஆர்வலர்கள் இணைந்த குழுவுடன் சென்று,சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கி வருகிறார்.

மரங்கள் நடவு செய்தல், விழிப்புணர்வு முகாம்கள் நடத்துதல், ஏழை மாணவர்களின்  கல்விக்கு உதவுதல், தெருவில் விடப்படும் ஆதர வற்றோர்களை மீட்டெடுத்து காப்பகத்திற்கு அழைத்துச் செல்லுதல், காப்பகங்களுக்குச் சென்று உணவு வழங்குதல் போன்றவற்றைச் செய்து வருகிறார். இதுவரை 2 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டிருப்பதோடு, பத்தாயிரத்திற்கும் அதிகமாக பனை விதைகள் நடவு செய்து பாதுகாத்து வருகிறார்.

கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக 'கொரோனா வாரியர்ஸ் 2021 விருது', 'காமராஜரின் தன்னலம் கருதா விருது 2021', உத்ரா அறக்கட்டளை சார்பாக 'சிறந்த மக்கள் சேவகர் விருது, நந்தவனம் அறக்கட்டளை சார்பாக 'சாதனைப் பெண்மணி விருது இவையெல்லாம் இவரைத் தேடி வந்து சிறப்பித்துள்ளன.

————————————-

மணக்கும் மசாலா தயாரிக்கும் தொழில் முனைவர்

திருச்சியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான காயத்ரி இன்று மசாலா விற்பனையில் சாதனைகள் செய்து வருகிறார்.

திருமணத்துக்குப் பிறகு அமெரிக்கா சென்றவர் அங்கு வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கு பாரம்பரிய இந்திய உணவு  வகைகளை சமைத்து வழங்கியிருக்கிறார். பிரமாதமாக இருப்பதாக பாராட்டுக்கள் குவிந்தன. பின்னர் பணி காரணமாக இந்தியா திரும்பியதும், குடும்பத்தினர், நண்பர்கள் தந்த ஊக்கத்தால் மசாலாப் பொருட்களின் விற்பனையை ஆரம்பித்துள்ளார்.

முதலில் இட்லிப்பொடி, பூண்டுப் பொடி தயாரித்து அதற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்ததும், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், நலுங்கு மாவு, கஸ்தூரி மஞ்சள் பொடி, அரிசி மாவு, சத்துமாவு என பல வகையான பொருட்களைத் தயாரிக்க ஆரம்பித்துள்ளார்.

எந்த ரசாயனமும் கலப்பதில்லை. முளைகட்டிய தானியங்கள், பருப்புகள் போன்ற முற்றிலும் இயற்கைப் பொருட்களைக் கொண்டே தயாரிப்பதால், தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களிலும் டிமாண்ட் இருப்பதாக குறிப்பிடுகிறார். வெளிநாட்டில் இருப்பவர்களும் இவரது பொருட்களை விரும்பி வாங்குகிறார்கள். இத்தகைய மசாலாப் பொருட்களைத் தயாரிப்பது எப்படி என்று வகுப்புக்களும் எடுக்கிறார் காயத்ரி.

மக்களிடையே பாரம்பரியமான பொருட்களுக்கு எப்போதும் இருக்கும் வரவேற்புதான் தனது வெற்றிக்குக் காரணம் என்கிறார். ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் 44 குழந்தைகளுக்கு கல்வி உதவியும் அளித்து வருகிறார்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com