மாதவிடாய் ஆலோசனை மையம்…  கிராமாலயா திருச்சி…!!! 

மாதவிடாய் ஆலோசனை மையம்…  கிராமாலயா திருச்சி…!!! 
Published on
MENSTRUAL  CAFE(தென்னிந்தியாவின் முதல் மாதவிடாய் ஆலோசனை மையம்)
-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.

மாதவிடாய் என்று இயல்பாக போகிற போக்கிலோ, ஏன் வெளிப் படையாகவோச் சொல்வதற்குக் கூட இன்னும் நம் சமூகம் தயாராகவில்லை என்பது தான் உண்மை. இன்றைக்கும் கூட பரம ரகசியமாகப் பகிர்ந்து கொள்ளப்படுகிற மாதாந்திர நிகழ்வாகவே அது இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அது தருகின்ற வலி, பெண்கள் உடல்கூறு சார்ந்து அனுபவிக்கின்ற சிரமங்கள் குறித்து பெண்களுக்கிடையேக் கூட பேசிக் கொள்ளும் மனோ நிலை இன்னும் நமக்கு வரவில்லை.

பத்மஸ்ரீ தாமோதரன்
பத்மஸ்ரீ தாமோதரன்

மாதவிடாய் சார்ந்த பிரச்னைகளைப் பேசி அதற்கு உரிய ஆலோசனைகளையும், தீர்வுகளையும் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த "மாதவிடாய் ஆலோசனை மையம்". "தென்னிந்தியாவில் முதன்முதலாக அமையப்பெற்றுள்ள (MENSTRUAL  CAFÉ)  மாதவிடாய் ஆலோசனை மையம் இது" என்கிறார் கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பத்மஸ்ரீ தாமோதரன். 2௦22ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார் இவர்.

திருச்சி கிராமாலயா அலுவலகத்தின் முதல் தளத்தில் தனி அரங்கில் இயங்கி வருகிறது "மாதவிடாய் ஆலோசனை மையம்". இதுபோன்றதொரு எண்ணம் கிராமாலயாவுக்கு எப்படி வந்தது? ஏன் வந்தது? அதன் தன்னார்வலர்கள் சிலரிடம் பேசினோம்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றிய 26 கிராமங்களின் ஒருங்கிணைப்பாளர் ரேணுகாதேவி:

"புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பன்னீர்ப்பள்ளம் கிராமம். மிக மிக பின்தங்கிய கிராமம். கூலி வேலைகளுக்குப் போய் வருபவர்கள் அதிகம். எழுபத்தைந்து குடும்பங்கள். குடிசை வீடுகள். பெண்களும் ஆண்களும் முள்ளுக்காட்டுக்கு உள்ளே தான் மலஜலம் கழிக்க சென்று வர வேண்டும். மூன்றாண்டுகளுக்கு முன்பாக அந்த சின்னஞ்சிறு கிராமத்தினைத் தத்தெடுத்தது கிராமாலயா.

ரேணுகாதேவி
ரேணுகாதேவி

திருமயம் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளராக நான் இயங்கி வருகிறேன். அந்த எழுபத்தைந்து குடும்பங்களிடமும் தனி நபர் கழிவறை வசதிகள் குறித்து பேசினோம். முதலில் அவர்கள் உடன்படவே இல்லை. தனி நபர் கழிவறைக்கு ஒவ்வொரு குடும்பமும் தனது பங்களிப்பாக ஒரு குறிப்பிட்ட சதவீதம் பணம் செலுத்த வேண்டும். அது தங்களால் முடியவே முடியாது என்று சொல்லி விட்டார்கள். அப்படியும் கிராமாலயா தொண்டு நிறுவனம் அவர்களை விட்டு விடவில்லை. 'நீங்கள் பணமாகத் தர வேண்டாம். நீங்கள் தர வேண்டிய பண மதிப்புக்கான உடல் உழைப்பினை, அந்தத் தனி நபர் கழிவறைகள் கட்டி, அமைக்கத் தாருங்கள். நாங்கள் அதனை பண மதிப்பாக மாற்றி சமன் செய்து கொள்கிறோம்' என்று கூறினோம். அவர்கள் அதற்கு சம்மதித்தனர். எழுபத்தைந்து குளியலறையுடன் கூடிய தனி நபர் கழிவறைகள் கட்டித் தந்தோம். செயல்பாட்டுக்கு வந்தது. அவ்வப்போது நான் அங்கு சென்று வரும்போது  அங்குள்ள பெண்களிடமும் வளரிளம் பெண்களிடமும் நெருங்கிப் பேசும் வாய்ப்பு கிட்டியது. மாதவிடாய் காலத்திய மாதவிடாய் சுகாதாரம் குறித்து எவ்விதமான விபரங்களோ விழிப்புணர்வோ அவர்களிடம் இல்லை. மேலும் அவர்களுக்கான மாதவிடாய் தொல்லைகள் வலிகள் சிரமங்கள் குறித்தெல்லாம், ஒரு பெண்ணாகிய என்னிடமே பேசத் தயங்கினார்கள் அவர்கள். நான் அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி முதலில் அவர்களது தயக்கத்தைத் தகர்த்தெறிந்தேன். அந்தப் பெண்களின் வெளிப்படுத்த இயலாத மாதவிடாய் உடலியல் சார்ந்த பிரச்னைகள், அதற்கானத் தீர்வுகள் கண்டறிந்து அப்பிரச்னைகளைக் களைந்திடவே இந்த 'மாதவிடாய் ஆலோசனை மையம்' உருவாக்கப் பட்டுள்ளது."

திருச்சி கருவாட்டுப்பேட்டை பகுதியில் வசிக்கும் ருக்மணி:

"எனது வாழ்விடம் திருச்சி மாநகரின் ஒரு பகுதியாகும். அங்கிருக்கும் பெண்கள் கழிவறைகளில் மாதவிடாய் உறிஞ்சுப் பஞ்சுகளை பெண்களில் பலரும் அவரவர் இஷ்டத்துக்கு கண்ட கண்ட இடங்களில் போட்டுவிட்டுப் போய் விடுவார்கள். முதலில் இது குறித்து எங்கள் பகுதி பெண்களிடம் வெளிப்படையாகவே பேசினேன். கிராமாலயாவின் பருத்தித் துணியினால் ஆன துணி அணையாடையினை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். அது உடலுக்கு சுத்தமானது. சுகாதாரமானது.

ருக்மணி
ருக்மணி

மாதவிடாய் சிரமங்கள் என்னென்ன
என்பது ஒரு பெண்ணாகிய எனக்கும்
தெரியும் என்றபோதிலும், ஏரியாவில்
பல பெண்கள் மற்றும் வளரிளம்
பெண்களிடம் பேசியதில் அவர்களுக்கெனத்
தீர்வு காணப்பட வேண்டிய விஷயங்கள் நிறையவே உள்ளன என்று நானும்
உணர்ந்து கொண்டேன். அவைகளுக்கெல்லாம் ஒரு நம்பிக்கை வெளிச்சமாக இந்த
மையம் செயல்படும்."

மேலாண்மை இயக்குனர் ப்ரீத்தி தாமோதரன்:
ப்ரீத்தி தாமோதரன்
ப்ரீத்தி தாமோதரன்

"பெண் பிள்ளைகளில் பத்துப் பதினோரு வயதில் இயல்பாகத் தொடங்குகிற மாதவிடாய் சுழற்சியானது, அது நின்று போகும் பேரிளம் பெண் (பெண்களில் ஒவ்வொருவருக்கும் அதன் வயது கூடும் குறையும்) வயது வரைக்குமாக மானுட வாழ்வியலில் அதுவொரு தவிர்க்க இயலாத விஷயம் ஆகும். இங்கு இது குறித்தெல்லாம் போதிய விழிப்புணர்வு இல்லை. பல நேரங்களில் பெண் மருத்துவரிடம் சென்று தனது பிரச்னையினைக் கூறி சரி செய்து கொள்ள தயக்கமும் இன்னமும் பல பெண்களிடமும் நிலவி வருகிறது.

மாதவிடாய்க் காலங்களில் அதிகளவு ரத்தப்போக்கு ஒரு பெரும் பிரச்னை. மருத்துவ ரீதியாகத் தீர்வு கண்டு அதிகளவு ரத்தப்போக்கினை குறைத்துக் கொள்வது, குறிப்பிட்ட பெண்ணின் உடல்நலத்துக்கு பாதுபாப்பானது ஆகும். இல்லையேல் அது ரத்தசோகை நோய்க்கு வழிவகை செய்து விடும். அடுத்து மாதவிடாய் நாட்களில் வயிற்று வலி ஒரு மிகப் பெரிய துயரமாகும். அதனை அனுபவிப்பவர்களால் மட்டுமே உணர முடியும். அடுத்து வெள்ளைப்படுதல் பிரச்னை. இந்த வெள்ளைப்படுதல் எல்லோர்க்கும் பொதுவானது. இதிலும் இரண்டு வகை இருக்கு. துர்நாற்றம் வீசும் வெள்ளைப்படுதல். துர்நாற்றம் வீசாத வெள்ளைப்படுதல். அதிகளவு வெள்ளைப்படுதல் இல்லாமல் மருத்துவ ரீதியாக இதனையும் சரிப்படுத்தி கொள்ள வேண்டும்.

மாதவிடாய்க்கு முன்பாக நிகழும் வெள்ளைப்படுதலுக்கு என பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பருத்தித் துணியிலான துணி அணையாடை கிராமாலயா வாயிலாக உருவாக்கி விநியோகிக்கப் படுகிறது. வெள்ளைப்படுதலின் போது பெண்கள் சுகாதாரமாகவும் சுதந்திர உணர்வுடனும் இருந்திட உதவுகிறது. அடுத்து பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகுதல் பெரும் பிரச்னை ஆகும். இதற்கும் தகுந்த பெண் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருத்துவ ரீதியாக சரி செய்து கொள்ள வேண்டும். மாதவிடாய் சார்ந்து மேற்கண்ட பிரச்னைகளுக்குப் பெண்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்குவதும், மருத்துவ ரீதியாக அவர்களுக்கு உரிய பிரச்னைகளுக்கு பெண் மருத்துவர்களிடம் செல்ல வழி காட்டுவதும் எங்கள் மையத்தின் மிக முக்கியப் பணி ஆகும்."

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com