அழகின் சிகரம்

அழகின் சிகரம்
Published on

அழகோ அழகு – 6

அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தரா

லைமுடி கொட்டுவது அநேகமாக எல்லோருக்கும் ஒரு, 'தலை'யாய பிரச்னையாக இருப்பதைக் காண்கிறோம். பரம்பரை, உணவுப் பழக்கம், மன அழுத்தம், தூக்கமின்மை, தண்ணீரின் தன்மை, ரசாயனம் கலந்த அழகு சாதனப் பொருட்கள் (குறிப்பாக தலைமுடிக்கு) உபயோகப்படுத்துவது போன்ற பல காரணங்களால் முடி கொட்டும். ஹார்மோன் மாற்றங்களும் ஒரு காரணம். குறிப்பாக, பெண்கள் வயதுக்கு வரும் பருவத்திலும், கருத்தரித்திருக்கும் காலத்திலும், மாதவிடாய் நீங்கும் சமயத்திலும் அதிகம் முடி கொட்டுவதைக் காணலாம்.

அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தரா
அழகுக்கலை நிபுணர் Dr.வசுந்தரா

உயர் ரத்த அழுத்தம், கீல்வாதம் போன்றவற்றிற்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கும், கீமோ தெரபி சிகிச்சையில் இருப்பவர்களுக்கும் (கதிர்வீச்சு தாக்கத்தால்) முடி கொட்டுதல் பாதிப்பு அதிகம் இருக்கும். மன அழுத்தத்துக்கு ஆளானவர்கள் அதிலிருந்து முற்றிலும் மீண்டு வந்து இரண்டு மாதங்கள் கழிந்த பிறகு முடி கொட்ட ஆரம்பிக்கும். திடீரென ஏன் முடி கொட்டுகிறது என திகைக்க வேண்டாம். இரு மாதங்களுக்கு முன் ஏற்பட்ட மன அழுத்தத்தின் அறிகுறியே இப்போது முடி கொட்டுகிறது என நிச்சயமாகச் சொல்லலாம். இதனைத் தவிர்க்க யோகா, தியானம், உடற்பயிற்சி செய்தால் மன அழுத்தம் குறைந்து முடி கொட்டுவது நிற்கும்.

முடியை நாம் கையாளும் பாணியினாலும் சில சமயம் முடி கொட்ட வாய்ப்புண்டு. முடி உலர்த்தி (HAIR DRYER), ரசாயனம் கலந்த முடி சாயம், கண்டிஷனர் இல்லாத கடின ஷாம்பு இவற்றை உபயோகித்தல் மற்றும் சூட்டின் மூலம் தலைமுடியை நேராகச் செய்வது (ironing) இதனாலும் அதிகம் முடி கொட்டும். அடிக்கடி தலைச்சாயம் பயன்படுத்தும்போது அதில் உள்ள ரசாயன நிறமிகள் உச்சந்தலையில் இறங்கி முடியை முரட்டுத் தன்மை கொண்டதாக மாற்றிவிடும். அதேபோல், அதிக ரசாயனம் சேர்க்கப்பட்ட ஷாம்புவைப் பயன்படுத்துவதும் நல்லதல்ல.

ANAGEN, CATAGEN, TELOGEN என தலைமுடியின் வளர்ச்சியை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒருவரது வாழ்நாளில் 25 முறை முடி கொட்டி பின் வளரும். ஒரு நாளில் 50 முதல் 100 முடிகள் வரை கொட்டலாம். கவலை வேண்டாம். அதற்கு மேலும் தொடர்ந்து முடி கொட்டினால் சிகிச்சை எடுப்பது அவசியம்.

தலை முடியில் ஈரப்பதம் இருந்தாலும் பூஞ்சை பிடித்து பொடுகு வந்து முடி கொட்டும். இதற்கு ANTI-FUNGAL ஷாம்புவை நேரடியாகவோ அல்லது வழக்கமாக உபயோகிக்கும் ஷாம்புவுடன் கலந்தோ பயன்படுத்தலாம். ANTI-FUNGAL ஷாம்பு நம் குளியலறையில் கட்டாயம் இருக்க வேண்டிய சாதனம்.

காய்ச்சல் வந்தாலோ, நோய்க்காக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துத் திரும்பிய பின்னாலோ சாப்பிடப் பிடிக்காது; சாப்பிடவும் முடியாது. அந்த நேரங்களில் சரியான ஊட்டச்சத்து இல்லாத காரணத்தால் முடி கொட்ட வாய்ப்புண்டு. பீட்ரூட், மாதுளம் பழம், பாதாம் (இரவில் ஊற வைத்தது), முளைகட்டிய பயறு வகைகள் என புரதம், இரும்புச் சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து மிக்க உணவு வகைகள் மற்றும் சோயா, பால், பால் சார்ந்த பொருட்கள், முட்டை, தயிர் இவற்றை கண்டிப்பாக உணவில் சேர்க்க வேண்டும். தண்ணீர் அடிக்கடி அருந்துவது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவும். பீட்சா, பர்கர், அடிக்கடி காபி குடிப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

தலைமுடியை இறுக்கமாகக் கட்டி குதிரைவால் (PONYTAIL) போல் கட்டினால், நாளடைவில் நெற்றியின் மேல் பகுதியில் முடி ஏறிக்கொண்டு முன் வழுக்கை விழ வாய்ப்புண்டு. குதிரைவால் போட்ட இடத்திலும் கொத்தாக முடி கொட்டும். TRACTION BALDNESS எனப்படும் இதற்கு இடம் கொடுக்க வேண்டாமே!

சரி, இப்போது முடி கொட்டுவதைத் தடுக்கும் வழிமுறைகளைக் காண்போமா?

  • தேங்காய் எண்ணெய் மிகச் சிறந்தது. முடி உடையாமல் தடுக்கும். நல்லெண்ணெய் முடியின் ஊட்டச்சத்துக்கும், வளர்ச்சிக்கும் மிக நல்லது, கடைகளில் கிடைக்கும் ரோஸ்மேரி எண்ணெய் சில துளிகள் எடுத்து ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயுடன் கலந்து தடவினால் முடிக்கு ரத்த ஓட்டம் கிடைத்து, முடி கொட்டுவது நிற்பதோடு பொடுகுத் தொல்லை இருந்தாலும் நீங்கி விடும்.

  • நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்ப்பது அவசியம். அதில் உள்ள
    விட்டமின் C, இரும்பு மற்றும் கரோட்டின் சத்துக்கள் முடியின் செழுமைக்கு உதவும்.

  • நான்கு டேபிள் ஸ்பூன் காய வைத்து பொடி செய்த நெல்லிப் பொடியுடன் நான்கு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து HAIR-PACK தயார் செய்யலாம். தலைக்கு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி, அதன் மேல் இந்த HAIR-PACK போட்டு அரைமணி கழித்து நன்கு அலசிவிட வேண்டும்.

  • வெந்தயம் கூந்தல் வளர்ச்சிக்கு நல்லது. இரவில் ஊற வைத்த நான்கைந்து டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை மறுநாள் நன்கு அரைத்து, தயிர், இரண்டு டேபிள் ஸ்பூன் முல்தானிமெட்டி கலந்து, முடியை பாகங்களாகப் பிரித்துத் தடவி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசினால் முடி மிருதுவாக இருக்கும். குளிர் காலத்தில் இதைத் தவிர்ப்பது நல்லது.

  • வெங்காயச் சாறு எடுத்து அப்படியே உபயோகிக்காமல், எண்ணெயுடன் கலந்து பயன்படுத்துவது நல்லது.

பொதுவாக, தலைமுடியில் உயிரோட்டம் கிடையாது. அது வளரும் இடத்தில் அதாவது வேர்க்கால்களில்தான் உயிரோட்டம் உள்ளது. (அதனால்தான் தலைமுடியை வெட்டும்போது நமக்கு வலி தெரிவதில்லை) ஒரு மாதத்தில் சராசரியாக முக்கால் அங்குலம் வரை முடி வளரும்.

தலைமுடி நம் அழகின் முக்கிய அம்சம். அதைப் பேணிப் பராமரிப்பது மிக அவசியம். நல்ல உறக்கம், ஊட்டச்சத்து மிக்க உணவு, மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பது தவிர, முடிக்கென உள்ள பொருட்கள், தரமான எண்ணெய், ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்துவது போன்றவற்றை முறையாகப் பின்பற்றினால் நம் அழகுக்கு அழகு சேர்க்கும் கூந்தலைப் பெறலாம்.

தொகுப்பு : மங்கை ஜெய்குமார்

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com