
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் 25 வயது வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. இவர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் வழங்கப்பட்டுள்ள 2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்றுள்ளார். 2021 ல் மொத்தம் 22 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 855 ரன்களை குவித்திருந்தார். ஒரு சதமும் ஐந்து அரை சதங்களும் அடித்திருந்தார் ஸ்மிருதி. இவரது சராசரி ரன் ரேட் 38.86. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பகல் இரவு டெஸ்ட் மாட்சில் சென்சுரி அடித்திருக்கிறார்.
2013 ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடி வரும் இவர் மொத்தம் 4673 ரன்கள் எடுத்துள்ளார். எத்தகைய சாதனை இது தெரியுமா? இங்கிலாந்தின் பெண்கள் கிரிக்கெட் கேப்டனாக 12 வருடங்கள் விளையாடிய வீராங்கனை 'Rachael Heyhoe-Flint' பெயரில் வழங்கப்படும் இந்த விருதை ஸ்மிருதி இரண்டாவது முறையாக பெற்றுள்ளார். ஏற்கனவே இந்த விருதை 2018 ல் அவர் வாங்கியிருந்தார்.
7 வயது சிறுமி விஷாலினி, பிரதமர் வழங்கும் பால புரஸ்கார் விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் பெற்று, அவரிடம் பாராட்டும் பெற்றுள்ளார்.
தமிழகத்தின் விருதுநகரைச் சேர்ந்த பேராசிரியர் நரேஷ்குமார், டாக்டர் சித்ரகலா தம்பதியின் மகள் விஷாலினி. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள 'டில்லி ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ்' என்ற பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் செய்த சாதனைதான் என்ன?
வெள்ள பேரிடர் காலங்களில் உயிர் மற்றும் உடைமை காக்கும் வகையில் தானியங்கி மிதக்கும் வீட்டை கண்டுபிடித்துள்ளார். இதில், சிறிய ஆக்ஸிஜன் சிலிண்டர், உணவு பொருட்கள் வைக்க சிறு பைகள், முதலுதவி பெட்டி, ஜி.பி.எஸ் வசதி போன்றவை இருக்கின்றன. இக்கண்டுபிடிப்பிற்காக மத்திய அரசால் இவருக்கு 'இளைய காப்புரிம' வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சிறுமி விஷாலினிக்கு விருது வழங்கி பாராட்டினார்.
பாகிஸ்தான் நாட்டின் சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதியாக இஸ்லாமாபாதில் 'ஆயிஷா மாலிக்' என்ற 55 வயது பெண்மணி பதவியேற்றுள்ளார்.
பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு ஒரு பெண்ணுக்கு கிடைத்திருக்கும் அபூர்வமான வெற்றி இது என்று மற்ற வக்கீல்களும், போராளிகளும் கருதுகிறார்கள். ஆனால் அவரது சீனியாரிடியை காரணம் காட்டி சில எதிர்ப்புக்களும் இருந்தன. ஆயிஷா, பாகிஸ்தான் சட்டக் கல்லூரியிலும், பின்னர் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திலும் படித்தவர்.
லாஹூர் உயர்நீதிமன்றத்தில் இருபது ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றியவர். ஆணாதிக்கம் நிறைந்த குடும்பம் மற்றும் சமூக சட்டங்களில், பெண்களுக்கு சரியான நீதி கிடைக்க வைப்பதில் பெரும் பணி ஆற்றியவர். பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை செய்வதற்கு தடைச் சட்டம் கொண்டு வந்த பெருமையும் இவரையே சாரும்.