இதற்காகவா ஒரு கொலை? -8

இதற்காகவா ஒரு கொலை? -8
Published on
-ஜி.எஸ்.எஸ்.

ஜெசிகா லால் என்ற இளம் பெண்மணி புது டெல்லியில் வசித்து வந்தார். ஜெசிகா நியூ டெல்லியில் ஒரு மாடலாக விளங்கியவர். பினா ரமணி என்பவருக்கு சொந்தமான பெரும் உணவகம் ஒன்றில் மதுபானம் பரிமாறும் ஊழியராக வேலை செய்து வந்தார். மதுபானம் பரிமாறுபவர் என்றாலும் அவருக்கு 'செலிப்ரிடி பார்மெய்ட்' (celebrity barmaid) என்ற சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது.

1999 செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று அந்த உணவகத்தில் கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு இரண்டு மணிக்கு அங்கு தன் நண்பர்களுடன் வந்து சேர்ந்தார் மனு சர்மா. இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான வினோத சர்மாவின் மகன் (வினோத் சர்மா ஹரியானாவைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி எம்பி-யாக இருந்தவர்). அவர் ஜெசிகாவிடம் மதுபானம் கேட்டார். ஆனால் நேரமாகிவிட்டதாலும், அவர் கோரிய மதுபான வகை காலியாகி விட்டதாலும் ஜெசிகா அளிக்க மறுத்துவிட்டார். ஆயிரம் ரூபாயை நீட்டியபடி மீண்டும் அந்த பானத்தைக் கேட்டார் மனு சர்மா. அப்போதும் ஜெசிகா மறுத்ததால் தன்னிடமிருந்த துப்பாக்கியால் கூரையை ஒரு முறை சுட்டார். பின்னர் மீண்டும் ஜெசிகாவிடம் மதுபானம் கேட்டார். அப்போதும் அவர் மறுக்க, கோப மிகுதியில் ஜெசிகாவை நோக்கி அவர் சுட்டார். அந்த இரண்டாவது குண்டு ஜெசிக்காவின் நெற்றியில் பாய்ந்தது.

குண்டு வீச்சைத் தொடர்ந்து அந்த உணவகத்தில் ஏக கலவரம். அனைவரும் அங்குமிங்கும் ஓடினர். இந்த சூழலில் மனு சர்மாவும் அவரது நண்பர்களான அமர்தீப் சிங், விகாஸ் யாதவ், அலோக் கன்னா ஆகியோரும் அங்கிருந்து தப்பித்து விட்டனர். படுகாயமடைந்த ஜெசிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு உயிரிழந்தார்.

காவல்துறை மனு சர்மாவின் குடும்பத்தைத் தொடர்பு கொண்டபோது அவரும் அவர் அம்மாவும் காணாமல் போயிருந்தனர். பின்னர் வேறு சிலர் துப்பு கொடுத்ததின் பேரில் அலோக் கன்னாவும், அமர்தீப் சிங்கும் மே நான்காம் தேதி கைது செய்யப்பட்டனர். மே 6-ஆம் தேதி மனு சர்மா கைதுசெய்யப்பட்டார். கொலை ஆயுதம் எங்கே என்று தெரியவில்லை. அமெரிக்காவிலிருந்து வந்து திரும்பியிருந்த தன் நண்பன் ஒருவனிடம் அந்தத் துப்பாக்கியை மனு சர்மா பாதுகாப்பாகக் கொடுத்து அனுப்பியிருக்க வேண்டும் என்று யூகிக்கப்பட்டது. விகாஸ் யாதவை வெகுநாட்களுக்கு பிடிக்கவே முடியவில்லை.

ந்தக் கொலை மிகவும் பரபரப்பாக ஊடகங்களில் அடிபட்டது. காரணம் இதில் சம்பந்தப்பட்டவர்கள் பலரும் பெரிய இடத்தைச் சேர்ந்தவர்கள். மனுவின் நண்பன் யாதவ் ஒரு பிரபல அரசியல்வாதியின் மகன். மனுவின் மற்றொரு நண்பனான அமர்தீப் சிங் சண்டிகரில் ஒரு பிரபல குளிர்பானத்தின் விநியோகஸ்தர். பினா ரமணி என்ற அந்த உணவகத்துக்கு சொந்தக்காரர் ஒரு பிரபல பேஷன் டிசைனர் கூட. உயர்ந்த இடங்களில் நிறைய தொடர்பு கொண்டவர்.

சட்டமீறலான மதுவகத்தை இயக்கியதற்காக பினா ரமணி கைது செய்யப்பட்டார். கொலை சம்பவம் நடந்தபிறகு கீழே சிந்திய ரத்தத்தை அவர் துடைக்க வைத்தார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டது.

யாதவ் ஒரு வழியாக மே 19 அன்று கைது செய்யப்பட்டாலும் முன் ஜாமீன் வாங்கி வைத்திருந்ததால் உடனடியாக விடுதலை ஆகிவிட்டான். அதற்கு முன் பல வாரங்களுக்கு அவன், தான் மும்பையில்தான் இருந்ததாக கூறினான்.

மனு சர்மா
மனு சர்மா

பிப்ரவரி 2006ல் விசாரணை நீதிமன்றம்
மனு சர்மாவை விடுவித்து தீர்ப்பளித்தது.
சமூக ஊடகங்களில் இதற்கு எதிராக
பல பதிவுகள் உருவாகின. ஜெசிகாவுக்கு
நீதிகேட்டு பல ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. ஜெசிகாவுக்கு நடந்த அநீதிக்காக
நகரின் பல பகுதிகளில் மெழுகுவர்த்திகள்
ஏற்றப்பட்டன. சில மனித உரிமை
இயக்கங்கள் இதில் இணைந்து
கொண்டன. முன்னாள் பிரதம
நீதிபதியான வி.என்.கரே நீதிமன்ற தீர்ப்பை கடுமையாக விமர்சித்தார்.

எனவே வழக்கு உயர் நீதிமன்றத்துக்குச் சென்றது. இந்த வழக்கில் இந்தியாவின் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி குற்றவாளி மனு சர்மாவிற்கு ஆதரவாக வாதாடினார்.

டகங்கள் கடுமையாக அழுத்தம் கொடுத்தன. எனவே தொடர்ந்து 25 நாட்கள் இந்த வழக்கு தினமும் நடைபெற்றது. பினா ரமணியும் அவர் மகளும் முக்கிய சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். அவர்கள் நடந்த சம்பவங்களை விவரித்தனர். அவர்கள் மனு சர்மாவையும் அவரது கூட்டாளிகளையும் அடையாளப்படுத்தினார்கள். மனு சர்மாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் மனு சர்மா மேல்முறையீட்டு செய்தார். எனினும் உச்சநீதிமன்றமும் உயர் நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்தது.

மேற்படி வழக்கை அடிப்படையாகக் கொண்டு ராணி முகர்ஜி நடித்த 'நோ ஒன் கில்ட் ஜெசிக்க' என்ற இந்தி திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.
2020 ஜூன் 2 அன்று மனு சர்மா திகார் சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டான். சில ஆண்டுகளுக்கு முன்பாகவே அவன் விடுதலையாகக் காரணம் அவனது நடத்தை என்று கூறப்பட்டது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com