முத்துக்கள் மூன்று

முத்துக்கள் மூன்று
Published on
தொகுப்பு: பத்மினி பட்டாபிராமன்

ஆட்டோமொபைல் துறையில் சாதித்த சந்திரகலா

மிகவும் சவாலான ஆட்டோமொபைல் துறையில் கடந்த 26 வருடங்களாக சாதனைகள் செய்து வருகிறார் சந்திரகலா.

தூத்துக்குடியில் சாதாரண குடும்பத்தில் அதிகம் படிக்காத பெற்றோருக்கு மகளாகப் பிறந்தவர். பள்ளிப் படிப்பு தமிழ் மீடியம்தான். மெகானிகல் எஞ்சினீரிங் படிப்பில் டிப்ளமா, பிட்ஸ் (BITS) லிருந்து, பொறியியல் தொழில்நுட்பத்தில் பட்டப் படிப்பு, இன்டெர்நேஷனல் பிசினஸ் மேனேஜ்மென்ட் முதுகலை என்று படித்து, இன்று ஆட்டோமொபைல் துறையின் எல்லாப் பிரிவுகளிலும் உயர் பதவிகளை நிர்வகித்து வருபவர்.
திருச்சி பெல் நிறுவனத்தில், வெல்டர் பிரிவில் (Welding Research Institute) தேர்ச்சி பெற்ற முதல் பேட்ச் பெண்களில் ஒருவர். பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு விரிவுரையாளராக, குறிப்பாக பெண்கள் மெக்கானிகல் துறையில் முன்னேறும் வழிகளைப் பற்றி வகுப்பெடுத்து வருகிறார். இதனால் பல பெண்களுக்கு ரோல் மாடல் இவர்.
இந்தியாவில் புதிய கார்கள் அறிமுகம் செய்யும் நிகழ்வுகளில் கண்டிப்பாக இவரது பங்கு உண்டு. ஆட்டோமொபைல் சம்பந்தமாக பல துறைகளிலும் ஒர்க் ஷாப்களை ஏற்பாடு செய்து, பெரிய அளவில் திட்டமிட்டு செயல்பட உதவியாக இருந்திருக்கிறார்.

மோடிவேஷனல் ஸ்பீச் எனப்படும் ஊக்கம் தரும் உரைகள், கட்டுரைகள் என்று சமுதாயப் பணிகளிலும் உற்சாகமாக ஈடுபட்டு வருகிறார். ரயில்வேயில் பணி புரியும் தன் கணவர் தரும் ஊக்கம் தான் தன் வெற்றிக்குக் காரணம் என்கிறார்.

ஊருணி ஃபவுண்டேஷன் வழங்கிய 2020ம் ஆண்டிற்கான பெண் சாதனையாளர் விருது, பிராண்ட் ரிபப்ளிக் வழங்கிய, 2021ம் ஆண்டிற்கான தமிழ்ப் பெண் சாதனையாளர் விருது, என விருதுகள் பெற்றவர் சந்திரகலா.

50 வயதில் ஆடிட்டர் ஆக முடியுமா?

திருமதி. பத்மாவதி ஹரிஹரன் தான் அந்த பெருமைக்குரிய பெண்மணி. தனது 50 வது வயதில், சி.ஏ. (சார்டர்ட் அக்கவுண்டென்ட்) படித்து ஆடிட்டர் ஆக முடியும் என்று நிரூபித்திருக்கிறார். தற்சமயம் பத்மாவதி ஹரிஹரன் அவர்களுக்கு வயது 86. ஆடிட்டராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.

விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, இவற்றோடு உறுதியாக இருந்து இந்த சாதனையை செய்திருக்கிறார் இவர். சிறு வயதிலிருந்தே ஒரு பட்டதாரி ஆக வேண்டும் என்பது இவரது விருப்பமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் இன்டர்மீடியட் படித்த உடன் திருமணம் செய்து விட்டார்கள்.
இருந்தாலும் பட்டம் வாங்க வேண்டும் என்ற ஆர்வத் துடிப்பினால், தன் 42 வது வயதில், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் நடத்தும் தொலைதூரப் படிப்பு மூலம், பி.காம் பட்டதாரி ஆகியிருக்கிறார். படிப்பின் மீது இவருக்கு இருந்த தணியாத ஆர்வத்தைப் பார்த்த ஆடிட்டர் சி.வி.எஸ் மணியன், நீங்கள் சி.ஏ. சேர்ந்து படிக்கலாமே என்று ஊக்கம் தந்திருக்கிறார்.
மூன்று பிள்ளைகளுக்கு தாயாக, குடும்பத்தையும் முழுவதும் நிர்வகித்தபடி பல பிரச்சினைகளுக்கு நடுவே பரீட்சைகளுக்குப் படிப்பது பெரும் சவாலாகத்தான் இருந்தது என்று குறிப்பிடுகிறார். வீட்டு சுவர்களில் கணக்கு ஃபார்முலாக்களை எழுதி வைத்து, சமையல் செய்து கொண்டே அவற்றை மனப்பாடம் செய்வாராம்.
ஒரே நாளில், காலையில் எம்.காம், மதியம் சி.ஏ என்று இரண்டு பரீட்சைகள் இருக்கும். வீட்டுக் கதவைப் பூட்டிக் கொண்டு படித்த நாட்களும் உண்டு என்கிறார்.
கணவர் ஹரிஹரன், வருமானவரித்துறையில் உதவி ஆணையராக இருந்து ஓய்வு பெற்றவர். அவரது முழு ஆதரவும் தனக்கு இருந்ததாக பெருமிதப்படுகிறார்.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் சாதித்த பெண்கள்

அண்மையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பெருமளவு பெண் வேட்பாளர்கள் தேர்தலில் நின்றனர். பலரும் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுள் மூவரைப் பார்ப்போம்.

உமா ஆனந்த்: சென்னை மாநகராட்சி தேர்தலில், மேற்கு மாம்பலத்தில் 134வது வார்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட உமா ஆனந்த், 2036 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அந்தப் பகுதியில் வெள்ளம் வந்து நிறைய சேதங்களை ஏற்படுத்துவதால், வெள்ளத் தடுப்பு நிவாரணப் பணிகளில் அதிக கவனம் செலுத்தப் போவதாக உமா தெரிவித்திருக்கிறார். தவிர பிரதமர் மோடியின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம், அந்த வார்டை ஒரு மாடல் வார்டு ஆக்கப் போவதாகவும் உறுதியளித்திருக்கிறார்.

மாணவி சினேகா: திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சியில் வார்டு 5ல் சுயேச்சையாக போட்டியிட்ட 22 வயது இளம் வேட்பாளர் சினேகா வெற்றி பெற்றுள்ளார். இவர் திருச்சி எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரியில், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் படித்து வருகிறார். இவரது தந்தை செல்வராஜ் ஒரு சமூக சேவகர். அதனாலேயே இந்த தேர்தலில் தனக்கு ஆர்வம் ஏற்பட்டதாக சினேகா கூறுகிறார். கவுன்சிலர் பதவிக்கான பணிகளையும் செய்து கொண்டு, படிப்பிலும் தன்னால் கவனம் செலுத்த முடியும் என்று உறுதியாக நம்புகிறார்.

திருநங்கை கங்கா: வேலூர் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலில் 37வது வார்டில் கங்கா என்ற திருநங்கை வெற்றி பெற்று வேலூர் நகராட்சியின் முதல் திருநங்கை கவுன்சிலர் ஆகியிருக்கிறார்.
இவர் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டார். பெண்களுக்கு
சுத்தமான பொது கழிப்பறை கட்டவும்,
இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறும் இவர்,
நல்ல குடிநீர் வழங்கவும் உறுதி அளித்துள்ளார்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com