மணிமேகலையும் வைகாசி பெளர்ணமியும்!

மணிமேகலையும் வைகாசி பெளர்ணமியும்!
Published on

வே. இராமலக்ஷ்மி, திருநெல்வேலி

ஒவியம் : லலிதா

 வைகாசி பெளர்ணமியோடு கூடிய மற்றோர் வரலாறு மணிமேகலை என்னும் நூலில் உள்ளது. மணிமேகலை ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களில் ஒன்று இந்த மணிமேகலை இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகளாவாள். கண்ணகி பத்தினித் தெய்வமான பின்னர் இவள் புத்த துறவியானாள்.

பூம்புகார் நகரில் இருந்த மணிமேகலையை மணிமேகலா என்னும் தெய்வம் மணிபல்லவம் என்னும் தீவிற்குக் கொண்டு சென்று விடுத்ததும் அங்கு கோமுகி என்ற குளத்திலிருந்து அவள் அமுதசுரபியைப் பெற்றதும் விரிவாகக் கூறப்படுகிறது.

கோமுகிக் கரையில் மணிமேகலையைச் சந்தித்த காயசண்டிகை என்னும் தெய்வப்பெண் அந்த அட்சய பாத்திரம் பற்றிய வரலாற்றைக் கூறுகிறது.

முன்னாளில் ஆபுத்திரன் என்னும் அறவோன் மதுரையில் இருந்த சிந்தாமணி என்னும் தேவியை வணங்கி அவள் அருளால் அதிசயமான அமுதசுரபி என்னும் பாத்திரத்தை பெற்றான். அந்த பாத்திரம் அள்ள அள்ளக் குறையாது உணவை வழங்குவதாகும். அதைக் கொண்டு ஆபுத்திரன் மக்கள் பசியால் துன்புறும் இடங்களுக்குச் சென்று அவர்களுக்குச் சோறிட்டு அவர்களின் பசிப்பணியைப் போக்கி வந்தான். இந்திரனின் செயலால் மதுரையில் நன்கு மழை பொழிந்தது. செழித்து வளர்ந்து பலன் அளிக்கவே உணவைத் தேடி வருபவர் யாரும் இல்லை. என்னும் நிலை வந்தது. எனவே ஆபுத்திரன் வறுமை நிறைந்த மக்கள் பசியோடு இருக்குமிடம் எதுவென்று தேடிச் சென்றான். அப்படிக் கப்பல் ஏறிச் சென்றபோது ஒரு தீவில் அவன் தனித்து விடப்பட்டான். பல நாட்கள் அவனுக்கு உதவி கிடைக்கவில்லை. அவன் தனது அட்சய பாத்திரத்தைக் கொண்டு, தான் மட்டும் உணவு பெற்று வாழ விரும்பவில்லை. அதனால் அங்கிருந்த கோமுகி என்னும் குளத்தில் அந்தப் பாத்திரத்தைப் போட்டுவிட்டு உலகிற்கு உதவிடும் உரியவர் வரும்போது அவரை நீ அடைவாயாக என்று சொல்லிவிட்டு உண்ணாநோன்பு இருந்து உயிர் நீத்தான்.

அது முதல் புத்தன் அவதரித்த நாளான ஒவ்வொரு வைகாசி பெளர்ணமி நாளிலும் அக்குளத்தில் இருந்த அட்சய பாத்திரம் வெளிப்பட்டு, உரியவர் வாராமையால் மீண்டும் உள்ளே சென்று விடுகிறது. இவ்வாறு அட்சயப் பாத்திரத்தின் சரித்திரத்தைக் கூறிய காயசண்டிகை 'இன்று வைகாசி பெளர்ணமி. அப்பாத்திரம் வெளிப்படும் நாளான இன்று நீ சென்று அதை பெறுவாயாக' என்றாள்.

அதைக் கேட்டு மணிமேகலை வியந்தாள். அருகிருந்த புத்த பீடிகையை வணங்கி கோமுகிக் குளத்தினை அடைந்தாள். நிறை நிலவு தோன்றியது. அமுதசுரபியும் வெளிப்பட்டது.

அவள் புத்தனை வணங்கி கை நீட்ட அப்பாத்திரம் அவளது கையில் வந்து சேர்ந்தது. அவள் அதை எடுத்துக்கொண்டு விண் வழியாகப் பூம்புகாரை அடைந்தாள்.

பின்னர் காஞ்சிபுரத்தை அடைந்து அறச்சாலையை நிறுவினாள். அதிலிருந்து உணவூட்டும் அன்னதான செயலை செய்தாள். அதை நினைவுறுத்தும் வகையில் காஞ்சியில், 'அறப்பெருஞ்செல்வி தெரு' என்ற பெயரில் ஒரு தெரு இன்றும் இருக்கிறது.

இந்த அட்சய பாத்திரத்தை ஆபுத்திரனுக்கு வழங்கிய சிந்தாமணி தேவி என்பவள் கலை நியமனம் என்னும் கோயிலில் திகழ்ந்த அன்னை சரஸ்வதியே ஆவாள். அவள் உலகியல் அறிவு மற்றும் ஞானத்தை வழங்குகின்றாள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்விதம் வைகாசி நிலை நிலவு நாளான வைகாசி விசாகம் ஞானம் விளைவிக்கும் திருநாளாகவும் உயிர்களுக்கு உணவு வழங்கும் திருநாளாககவும் அமைகிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com