ஒரு வார்த்தை!

ஒரு வார்த்தை!
Published on

ரொம்ப நாளாச்சே கதை சொல்லி! லெட் மி ஸே எ குட்டி ஸ்டோரி.

ஜப்பான் நாட்டில் நடந்த கதை இது! ஓர் இளவரசனுக்கு முடி சூட்டும் விழா நடக்கப் போகிறது. பட்டத்துக்கு வர்றதுக்கு முன்னாடி, கல்யாணம் செஞ்சுக்கணும்ங்கிறது அந்த குறுநிலத்தோட சட்டம்! சக்ரவர்த்திக்கு ஏற்ற சக்ரவர்த்தினியாக இருக்கணும்னா, நல்ல நாணயமான பொண்ணா இருக்கணும்னு அந்த இளவரசன் நினைச்சான்.

ராஜசபையில இருந்த ஒரு முதியவர், அவனுக்கு ஒரு யோசனை சொல்லித் தந்தாரு. அதன்படி, அந்தப் பகுதியில இருக்குற எல்லா இளம் பெண்களையும் அரண்மனைக்கு வரவழைச்சு, அதுல தகுதியான ஒருத்தியை ராணியா தேர்ந்தெடுக்கிறதுன்னு முடிவாச்சு!

ஊரெங்கும் தண்டோரா போட்டு அறிவிச்சாங்க! அதை ஒரு ஏழைப் பொண்ணும் கேட்டா!

"அம்மா, நானும் அந்த சுயம்வரத்துல கலந்துக்கப் போறேன்."

"அசட்டுப் பொண்ணே… அங்கே போய் என்ன லாபம்? எல்லா அழகு சுந்தரிகளும், செல்வ சீமாட்டிகளும் வருவாங்க… உனக்கு வாய்ப்பே இல்ல."

"பரவாயில்லை அம்மா! இளவரசர் என்னைத் தேர்வு செய்ய மாட்டாருன்னு நல்லாவே தெரியும். ஆனால், அவரைப் பார்க்கவும், அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கவும் இது ஒரு சந்தர்ப்பம். அந்த சந்தோஷமே எனக்குப் போதும்"னு பிடிவாதமாகச் சொல்லிட்டா!

திர்பார்த்தபடியே, ஆசைக் கனவுகளுடன் ஏகப்பட்ட கன்னிகள், தேவதைபோல அலங்கரித்துக்கொண்டு வந்திருந்தனர்.

"அன்புப் பெண்களே! உங்களுக்கு ஒரு போட்டி… ஒவ்வொருவருக்கும் ஒரு விதையைத் தருவேன். பூச்செடிக்கான விதை. ஆறு மாத அவகாசம் கொடுக்கிறேன். அது முளைத்துப் பூத்ததும், யார் ரொம்ப அழகான பூவைக் கொண்டு வந்து காட்டுகிறாளோ, அவளே என் மனைவி, சக்ரவர்த்தினி" என்று சொல்லி, விதைகளைக் கொடுத்தான் இளவரசன்.

அந்த ஏழைப் பெண்ணும், ஒரு விதையை வாங்கிட்டு வீடு திரும்பினாள். தொட்டியில் இட்டு, தினமும் நீர் ஊற்றி கண்ணும் கருத்துமாகப் பராமரித்தாள். நான்கு மாதங்கள் ஓடின. பூச்செடி முளைக்கவே இல்லை. அவளுக்கு என்ன செய்வதுன்னே தெரியலை.

று மாதங்கள் முடிந்து, குறிப்பிட்ட நாளும் வந்தது. அவள் தன் வெற்றுச் செடியுடன் அரண்மனைக்குப் புறப்பட்டாள். பரிகாசம் செய்த தாயிடம், "அம்மா… இளவரசரைப் பார்க்க இது கடைசி வாய்ப்பு… அதை தவற விடமாட்டேன்!"ன்னு சொல்லிட்டுப் போனா.

அங்கே… ஒவ்வொரு பொண்ணும், வண்ண வண்ணமான பூக்களுடன் அழகுற நின்றிருந்தார்கள். இளவரசன் வந்தான். எல்லா பூக்களையும் பார்த்தான். அந்த ஏழைப் பெண், அதான் நம்ப ஹீரோயின், அவ கையில இருந்த வெற்றுத் தொட்டியையும் பார்த்தான்.

"இதோ இந்த ஏழைப் பெண்தான் என் மனைவி!" என்று மகிழ்ச்சியுடன் அறிவித்தான் இளவரசன்.

"என்னது? முளைக்காத வெறும் தொட்டியைக் கொண்டு வந்திருப்பவருக்கா சிம்மாசனம்?" உடனே கூச்சல்… குழப்பம்…கேள்விகள்!

எல்லோரையும் அமைதி படுத்திய பின் இளவரசன் சொன்னான். "இந்த நாட்டின் மகாராணியாக வரப் போகும் பெண்ணுக்கு நேர்மை உணர்வு இருக்கணும்னு விரும்பினேன். அதன்படி இவளைத் தேர்ந்தெடுத்தேன்!"

"ஏன்… எங்கக்கிட்ட நேர்மை இல்லையா?"

"கிடையாது! ஏன்னா, நான் கொடுத்த எல்லா விதைகளும் வேக வைத்து உலர்த்தப்பட்டவை. அதுல எந்தச் செடியும் முளைக்காது. பூவும் பூக்காது. நீங்கக் கொண்டு வந்தது எல்லாமே போலிப் பூக்கள். இவள் ஒருத்திதான் வேஷம் போடாமல், நேர்மையுடன் வந்திருக்கிறாள்!"ன்னு சொல்லி அந்த ஏழைப் பெண்ணைக் கரம் பிடித்தான் இளவரசன்!

ஸ்டோரி நல்லா இருக்கா? உங்க பேரன் – பேத்திகளுக்கு இரவு நேரக் கதையாகச் சொல்லி வளருங்க… நேர்மையா இருந்தாலே எங்கேயும் நல்ல மதிப்பு இருக்கும்! நெஞ்சில் துணிவும் பிறக்கும்! சரியா நான் சொல்றது?

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com