
படித்து வேலைக்குச் சென்று, வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் பொதுவான ஒருவரை சுட்டிக் காட்டினால் அவரே கதாநாயகன். ஆசை, லட்சியங்களை, விடுத்து அற்ப பணத்திற்கு அலையும் போது, ஆசை தணல் லேசாக புகைந்துகொண்டே இருக்கும். நாயகனும் அதற்கு விதிவிலக்கல்ல. புரட்சியை புத்தகத்திலும், முகப்புத்தகத்திலும் கொண்டாடும் கோழைகளின் தலைவன். இவர் ஒத்த எண்ணம் உடைய சந்தோஷ் எனப்படும் வேறொருவருடன் இணைகிறார் இணையத்தில் (குறிப்பிடத்தக்கது கதாநாயகன் பெயரும் அதே !)
அன்றாடம் நடக்கும் வன்முறைகளை பகிர்வது மட்டுமின்றி மாற்றம் வேண்டும் என விரும்பும் இருவரின் கதை இது. ஒருவர் (கதாநாயகன்) பகிர மட்டும் செய்ய, மற்றொருவர் (இரண்டாம் நாயகன்) உசுப்பேற்ருகிறார். 'முகப்புத்தக முகமும், நேர் முகமும் முற்றிலும் மாறி கேவலமாக உள்ளாயே தெரிந்திருந்தால் உன்னை சேர்த்துக் கொண்டிருக்க மாட்டேன், என்று இரண்டாமவர் கதாநாயகனை திட்ட? தணல் நெருப்பாய் மாறுகிறது.
விஷயம் இதுதான். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு, தண்டனைகள் கடுமையானாலும், எட்டாத இடத்தில் உள்ளவர்கள் பிழைப்பதை எதிர்க்கும் இரண்டாமவர், அவர்களை தேடி கண்டுபிடித்து கொலை செய்து கொண்டிருக்கும் சீரியல் கில்லர்.
ஆரம்ப காட்சியில், கதாநாயகன் இரண்டாமவர் செய்த கொலைகளையும் தான் உடனிருந்து கண்டதையும் ஒப்புதல் அளிக்கிறான். அவன் அளித்து கொண்டிருக்கும் போதே அதிகாரி பின்னில் உண்மைகளை ஆராய்ந்து கொண்டே வர நல்ல விறுவிறுப்பு திரைக்கதையில். கதாநாயகன் கொலைக்காரனை மல்டி பெர்சனாலிட்டி டிசார்டர் நோய் உள்ளவன் எனவும் அவன் செய்வது அவனுக்கே தெரியாது எனவும் கூறும் போது கதாநாயகன் மேல் சந்தேகம் வலுக்கிறது. கதாநாயகன் தம்பியும் சீரியல் கில்லர் தேடப்படுவர்களில் ஒருவன் எனும் போது நீங்கள் சற்றே கதையை யூகிக்க வாய்ப்புள்ளது . நீங்கள் எப்படி யூகித்தாலும் கதை அதற்கு நேர் மாறாய் அமைந்து திரைக்கதை அதிர்வுக்குள்ளாக்குகிறது.
முடிவுகள் இப்படியெல்லாம் இருக்கலாம்
கதாநாயகன்,
* கூறியது பொய் கதை , அவனே நோய் வாய்பட்டுள்ளானா??
* கூறியது உண்மை! சீரியல் கில்லர் தப்பித்து விட்டானா ??
* தம்பிக்காக இவன் வேறு ஏதும் நாடகம் ஆடியுள்ளானா ??
பதில் படத்தில்!
பலங்கள் : எதார்த்தமான முகங்கள், அமைதியான ஒளி ஒலி பதிவு , திரில்லர் என்றால் இருட்டிலே இருக்க வேண்டும் என்பதை உடைத்த வெளிச்சங்கள், பலமான ஒரு சில வசனங்கள், அதிக கதாபாத்திரமின்மை, எளிமையான திரைக்கதை .
=============================================
2021 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கால் நாம் வீட்டிலேயே அடைப்பட்டுப் போனோம். அதுவும் குறிப்பாக பெண்களின் நிலை மிகவும் கடினமாக இருந்தது. எந்நேரமும் சமயலறையிலேயே அடைந்து கிடப்பது போல ஓர் உணர்வு ஏற்பட்டது. அனைவரும் ஒரு ஃபிளாஷ் பேக் சென்று வாருங்கள்…
அந்த நேரத்தில் எனக்கு பெரும்பாலும் உதவியது ஓடிடி யில் ரிலீஸ் ஆன படங்களும் வெப் சீரீசும் தான். நிறைய படங்கள் பார்த்தேன். குறிப்பாக மலையாள மொழி படங்கள் அதிகம் பார்த்தேன். காரணம்? ஹீரோயிசம், மாஸ் காட்சிகள், குத்துப் பாடல்கள், விரசங்கள் என்று இல்லாமல் பல எதார்த்தமான படங்கள் மலையாளத்தில் வருவதுதான்.
அந்த வகையில், நான் பார்த்த, என்னை மிகவும் ஈர்த்த ஒரு திரைப்படம் என்றால் 'The Great Indian Kitchen' என்ற படம் தான். படத்தின் பெயர் ஆங்கிலத்தில்தான் இருந்தது. 'புகழ்பெற்ற இந்திய சமயலறை' என்பது பொருள். இந்தப் பெயர் சற்றே என் ஆவலைத் தூண்டியது. படத்தின் கதாநாயகி நிமிஷா சஜெயன். ஒரு கதாநாயகிக்கு உரிய எந்த ஒரு கவர்ச்சியும், வெளிர் நிறமும், பளிச் முகமும் இவரிடம் இல்லை. ஆனால், ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், நான் பார்த்த மலையாள படங்களில், அநேக படங்களில் இவர் தான் கதாநாயகி. இது உணர்த்தும் உண்மை; மலையாள திரை உலகம் அழகைக் காட்டிலும், கதைக்கும், கதைக்கு ஏற்ற நடிகர்களைப் போடவும் முக்கியத்துவம் தருகிறது என்பது தான்.
கதைச் சுருக்கம்: ஒரு புதிதாக திருமணமான பெண் (நிமிஷா சஜெயன்) பல கனவுகளுடன், ஆசைகளுடன் தன் கணவரோடு புது வாழ்வை தொடங்குகிறாள். ஆனால், அவளின் புகுந்த வீடோ மிகவும் ஆச்சாரமான, ஆண் ஆதிக்கம் நிறைந்த குடும்பம். ஆச்சாரத்திற்கு பிறகு வருவோம், முதலில் ஆண் ஆதிக்கத்தைத் பார்ப்போம்.
இதெல்லாம் அந்த வீட்டின் சொல்லப்படாத பழக்க வழக்கங்கள். எனவே, கதை சமயலறையை சுற்றியே நகரும். இதில், அந்தப் பெண்ணின் மாமியார், அவரது பெண்ணின் பிரசவத்தைப் பார்க்க ஊருக்கு போய் விடுகிறார். பிறகு, கதாநாயகி தனியாக சமயலறை வேலைகளை செய்வதே தான் மீதி படம். படத்தின் காட்சிகள் அனைத்துமே சமயலறையில்/ வீட்டில் தான் நிகழும். இதைப் பார்க்கும் போதுதான், 'பெண்கள் வீட்டில் இவ்வளவு வேலைகள் செய்கிறார்களா?' என்பது போல இருந்தது. படத்தின் இயக்குனர் ஜியோ பேபிக்கு முதலில் இப்படி ஒரு கதையை படமாக எடுக்க தோன்றியதற்காக நன்றி சொல்கிறேன்.
ஆச்சாரம் என்று எடுத்துக் கொண்டால், இவ்வளவு வேலைகள் செய்யும் பெண், மாதவிடாய் காலத்தில் தனியறையில் கிடத்தப் படுவது மிகவும் நெருடலாகவே இருக்கிறது. இன்னும் சில இல்லங்களில் இந்த வழக்கம் கடைபிடிக்கப் படுகின்றது என்று என்னும் போது வருத்தமாகவே இருக்கிறது. ஆனால், இத்துடன் சபரிமலை பிரச்னையை மட்டும் இழுக்காமல் இருந்திருக்கலாம் இயக்குனர். இதனால் கதை மதம் என்னும் போர்வையில் சற்றே சிக்கி தவிக்கிறது.
இந்த விமர்சனத்தைப் படிக்கும் பெண்கள் பலர், 'இதெல்லாம் ஒரு விஷயமா?' ' இந்த காலத்து பெண்களுக்கு வேலை செய்யத் தெரியவில்லை.' 'இது போல படங்கள் எல்லாம் பார்த்துக் கெட்டுப் போகிறார்கள்,' என்று எண்ணங்கள் எழலாம். ஆனால், என் வாதத்தை மிகவும் தெளிவாக இந்த இடத்தில் முன் வைக்க விரும்புகிறேன்.
படத்தில் சண்டை, சச்சரவு, நீள வசனங்கள் எதுவுமே கிடையாது. கதையில் விறுவிறுப்பான திருப்பங்கள் கூட கிடையாது. இன்னும் சொல்லப் போனால், வெறும் சமயலறையை வைத்துக் கொண்டே, வீட்டின் உணவு உண்ணும் முறையை (முதலில் ஆண், அதன் பிறகே பெண்) என்ற பாகுபாட்டை வைத்துக் கொண்டே இந்திய பெண்கள் இன்னும் பல வீடுகளில் அடிமைகளாக சிக்கித் தவிக்கின்றனர் என்பதை மிகவும் எதார்த்தமாக திரைக்கதை நடத்திச் செல்கிறது.
மேலும், இந்த படத்தின் இயக்குனர் ஒரு ஆண் என்று நினைக்கும் போது இன்னும் பிரமிப்பாக இருக்கிறது.
இந்தப் படத்தை பலர் பல விதமாக விமர்சித் திருந்தாலும், கேரளா அரசின் 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான விருதை இந்தப் படம் தட்டிச் சென்றது. இந்தக் கதை 'சொல்ல வேண்டிய கதை'.
=========================================
இதுபோல நீங்கள் சமீபத்தில் கண்டுகளித்த, ஓடிடி யில் வெளியான திரைப்படங்களை, எந்த மொழியானாலும் சரி, உங்கள் பாணியில் விமர்சித்து mm@kalkiweekly.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பவும். தேர்ந்தெடுக்கப்பட்ட விமர்சனங்கள் மங்கையர் மலர் ஆன்லைன் இதழில் பிரசுரம் ஆகும்.