
"மன்னருக்கும் மகாராணிக்கும் ஏதாவது பிரச்சனையா? ஆளுக்கொரு வாள் எடுத்துக்கிட்டு சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க."
"அதெல்லாம் ஒண்ணுமில்ல. அண்டை நாட்டு மன்னர் போருக்கு வருவதா ஓலை அனுப்பியிருக்கார். கொஞ்சமாவது பயிற்சி எடுத்துக்கணும்ல."
-ஜெயகாந்தி மகாதேவன், சென்னை
—————————-
"மன்னரை புகழ்ந்து பாடுவதற்கு முன்பே சன்மானத்தை கேட்கிறாரே புலவர். ஏன்?"
" மன்னரின் கஜானா காலியாயிருப்பதை தெரிந்து கொண்டார் போல."
-ஜெயகாந்தி மகாதேவன், சென்னை
—————————-
"சின்ன வயசுல காப்பி அடிச்சு பரீட்சை எழுதுவானே பாலு… இப்போ என்ன பண்றான்?"
"தெரு முனையில ஜெராக்ஸ் கடை வச்சிருக்கான்.""
-ஆர். யோகமித்ரா, சென்னை
—————————-
"நாலு நாளுக்கு முன்னாடி காணாமல் போன கணவரை கண்டுபிடிச்சு தரச் சொல்லி இப்ப வந்து கம்ப்ளைன்ட் தரீங்க?"
"பாத்திரம், பண்டம் போட்டது போட்டபடி கிடக்குது. அதுவும் இல்லாம அரைச்ச மாவு காலியாயிடுச்சு சார்!"
–மணிவண்ணன், சங்கராபுரம்
—————————-
"டாக்டர் எனக்கு நிமோனியா வந்திருக்கு. நேர்ல வந்தா மருந்து குடுப்பீங்களா ?"
" ஏன்யா இப்படி மார்க்கெட் போன வியாதியை எல்லாம் கட்டிக்கிட்டு திரியறே? கொரோனாவா இருந்தா வா – இல்லேன்னா வராதே !"
-ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்.
—————————-
"என்ன உன் புருசன் எதுவுமே பேசமாட்டேங்கிறார்? "
"இப்ப அவரை சைலண்ட் மோடுல போட்டிருக்கேன் "
-ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்
—————————-
மாப்பிள்ளை மெகா சீரியலை பார்த்துக் கெட்டுப் போயிட்டார்னு எப்படி சொல்றீங்க?
முதலிரவை பத்து நாள் கொண்டாடனும்னு சொல்றாரு!
-எம். ராஜதிலகா, அரவக்குறிஞ்சிப்பட்டி
—————————-
"சரியான தீனிப் பண்டாரம் சார் அவரு!"
"எப்படி சொல்றீங்க?"
"வீட்டுக்கு வழி கேட்டா, ஹோட்டல் பேரைத்தான் லேண்ட் மார்க்கா சொல்லுவாரு!"
–வி. ரேவதி, தஞ்சை