
சிறு வயதிலேயே வானொலி கேட்கும் வழக்கத்தையும், ஆர்வத்தையும் எனக்குள் வளர்த்தது இலங்கை வானொலி நிலையம். இன்று ஒரு படத்தைப் பார்க்கிற பரபரப்பு, அன்று ஒரு பாடலைக் கேட்பதிலே இருந்தது. அதற்கு மிக முக்கியக் காரணம், கே.எஸ்.ராஜா, பி.எச்.அப்துல் ஹமீத், ஜெயகிருஷ்ணா அவர்கள். மறக்க முடியுமா அந்த நாட்களை? மனம் பின்னோக்கிச் செல்கிறது. இலங்கை வானொலி சினிமா பாடல்களை பூம்புனல், அன்றும் இன்றும், நீங்கள் கேட்டவை, நேயர் விருப்பம், புதுவெள்ளம், மலர்ந்தும் மலராத, இரவின் மடியில்… இப்படியான அழகான தமிழ்ப் பெயர்களை வைத்து ஒலிபரப்பியது, நெஞ்சுக்குள் பசுமையாக…!
அதிலும், மாலை 5.30மணிக்கு வரும், 'பிறந்த நாள்… இன்று பிறந்த நாள்… நாம் பிள்ளைகள் போலவே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்' டி.எம்.எஸ்.ஸின் குரலை மறக்க முடியுமா?
எங்கள் வீட்டில் மர்பி ரேடியோ இருந்தது. அது தரமான பிளைவுட்டால் செய்யப்பட்ட ரேடியோ என்பதால் வெளியாகும் ஒலி துல்லியமாக இருக்கும். பதின் பருவ வயதில் எஸ்.பி.பி. அவர்கள் மேல் காதல் வரக் காரணம் இலங்கை வானொலிதான்.
கணவன், மனைவியின் அன்னியோன்னியத்தைத் துல்லியமாகப் புரிய வைத்தப் பாடல்கள். மனதைத் தொட்டு, ஏதோ மேஜிக் செய்த பாடல்கள். மனசுக்குள் கலர் கலராய் கனவுகளை வரவழைத்தப் பாடல்கள்.
இப்படியாக, எஸ்.பி.பி. அவர்கள் பாடிய பாடல்களை இலங்கை வானொலி ஒலிபரப்ப, அதைக் கேட்டே நான் வளர்ந்தேன். கல்லூரிப் பருவத்தில் வானொலியை, 'ஆன்' செய்து பாடல்களைக் கேட்டுக்கொண்டே அசைன்மென்ட எழுதிய காலம் கண்முன்னே நிழலாடுகிறது.
பிறகு திருமணம், குழந்தைகள் அவர்களின் வளர்ப்பு… இப்படி காலங்கள் ஓடினாலும் வானொலிக்கும் எனக்குமான உறவு தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. ஆம்… நிறைய சமையல் சார்ந்த நிகழ்ச்சிகளை வானொலியில் தொகுத்து வழங்கினேன். மேலும், 'ரசிகர் தேன் கிண்ணம்' பகுதியை நிறைய முறை தொகுத்து வழங்கியுள்ளேன். அந்த நிகழ்வுகள் எப்போது நினைத்தாலும் சந்தோஷத்தை மட்டுமே தரும்.
இதோ இ(எ)ப்போதும் எனது காலை நேரம் வானொலியை, 'ஆன்' செய்வதில் இருந்தே தான் தொடங்கும். மனம் ஏதேனும் ஒரு வருத்தத்தில் இருக்கும்பொழுது, எனக்கு மிகவும் பிடித்த பாடலான, 'உறவுகள் தொடர்கதை… உணர்வுகள் சிறுகதை' என்ற பாடல் மற்றும் 'நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா…' இந்த இரண்டு பாடல்களில் ஏதேனும் ஒன்று வானொலியில் நிச்சயம் ஒலிபரப்பாகும். (அடிக்கடி இந்த நிகழ்வு நிகழ்ந்துள்ளது. எப்படி என்றுதான் இன்றுவரை எனக்குப் புரியவில்லை.) விழிகளில் ஆனந்தக் கண்ணீர் வழிய, அதைத் துடைத்துக்கொண்டே இதழ்களில் புன்னகையை தவழ விட, மனம் தன்னாலேயே சமநிலைக்கு வந்துவிடும்.
என்னதான் டெக்னாலஜி வளர்ந்து, நினைத்த பாடலை ஒரு நொடிக்குள் கேட்கும் வசதி நம் கையிலே வந்துவிட்டாலும், வானொலியில் பாடல் கேட்பதென்பது ஒரு சுகானுபவம்.
– ஆதிரை வேணுகோபால்.
பற்களில் மஞ்சள் கறை இல்லாமல் இருப்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இந்தக் கரை, உப்பு பேஸ்ட் தேய்த்தும் போவதில்லை. பல்லின் மீதுள்ள மஞ்சள் படிமத்தை நீக்க சில வகை பழங்கள் உதவுகின்றன. அவை :
வாட்டர் மெலன் :
இது பற்களின் பளபளப்பை அதிகரிக்க உதவும். மேங்கனீஸ், Zinc, பொட்டாஸியம், இரும்பு, மக்னீஸியம், கால்சியம் ஆகிய தாதுப் பொருட்கள் இப்பழத்தில் உள்ளன. இந்தப் பழத்தை கொஞ்சம் எடுத்து பற்களின் மீது லேசாகத் தேய்த்தால் மஞ்சள் போயே போச்!
ஆரஞ்சு :
உடல் நலத்திற்கு உதவும் இப்பழத்திலுள்ள விட்டமின் சி மற்றும் கால்சியம் ஈறு மற்றும் பற்களைப் பாதுகாக்க உதவுகிறது.
ஆப்பிள் :
இது பற்களுக்கு Scrubber மாதிரி செயல்படுகிறது. Malic ஆஸிட் இதில் இருப்பதால், உமிழ்நீர் அதிகமாகச் சுரந்து, கரையை நீக்கிவிடும்.
ஸ்ட்ராபெர்ரி :
இதில் ஊட்டச்சத்துகள் (Nutriants) உள்ளன. மேலும் Malic ஆஸிட் இருப்பதால், பற்களின் கறையைப் போக்குகிறது. சிறிது பழத்துடன், அரை சிட்டிகை சமையல் சோடாவைக் கலந்து பல்லின் மீது தேய்த்துவிட்டு, சில நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் விட்டு நன்கு கொப்பளித்தால் மஞ்சள் லேயரை எடுத்துவிடும்.
வாழைப்பழம் :
நியூட்ரிஷியஸ் மிகுந்த இப்பழத்தில் மேக்னீஸியம், பொட்டாஸியம், மேங்கனீஸ் இருப்பதால் இதனுடைய தோலை பற்களின் மீது தேய்த்தால் கறை நீங்கும்.
எலுமிச்சம் பழம் :
பழத்தின் சாற்றுடன் / தோலுடன் சிறிது சமையல் சோடா சேர்த்து பற்களின் மீது தேய்த்தால் நோ மஞ்சள். இதுவும் மருத்துவ குணம் கொண்டது. பற்களுக்கு நல்லதை செய்யக்கூடியவை மேற்கூறிய பழங்கள்.
வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மேற்கூறிய பழங்களில் ஏதாவதொன்றினை உபயோகித்துப் பற்களைப் பளிச்சிட வைக்கலாம். 'இதற்கெல்லாம் நேரம் எங்கிருக்கிறது?' என எண்ணிச் செய்யாமல் விட்டுவிட்டால், கறை மேலும் மேலும் படிந்து பற்கள் பார்க்க ஒரே மஞ்சள் மஞ்சளாக இருக்கும். பல் டாக்டரிடம் அடிக்கடி போகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இது தேவையா? யோசியுங்கள்.
– ஆர்.மீனலதா, மும்பை
நம் முன்னோர்கள் அரிசி உணவை சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர். ஆனால், இன்றைய தலைமுறையினர் அரிசி உணவில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் இருக்கிறது. உடல் நலத்திற்குத் தீங்கானது. அதைச் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்றெல்லாம் நினைத்து அரிசியை ஒதுக்க ஆரம்பித்துள்ளனர்.
சர்க்கரை நோயாளிகள், இதய நோய் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், அரிசி உணவுகளைக் குறைத்து உண்ணலாம். அரிசி உணவில் இருக்கும் சத்துக்கள் தேவைக்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவை அப்படியே ரத்தத்தில் சேர்ந்துவிடும். இதனால் சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். எனவே, இவர்கள் சாமை, திணை போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
நம் உடலின் வளர்ச்சிதை மாற்றம் பகல் நேரங்களில் அதிகமாக இருக்கும். இதனால் அரிசிகளில் இருக்கும் கார்போஹைட்ரேட் நம் உடலின் சக்தியாக சேரும். ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு இரவு நேரங்களில் வளர்சிதை மாற்றம் குறைவாக இருப்பதால் அரிசியில் இருக்கும் கார்போஹைட்ரேட் கொழுப்பாகச் சேரும். அதனால், இரவில் அரிசி உணவைத் தவிர்ப்பது நல்லதாகும்.
– ஏ.எஸ்.கோவிந்தராஜன்