
இளந்தென்றல் வரவேற்க
இளவேனில் உற்சவம் !
சித்திரை மகளே வருக!
இளந்தென்றல் வரவேற்க
இளவேனில் உற்சவம் !
சித்திரையின் கைப்பிடித்து
புத்தாண்டு கொண்டாட்டம் !
முத்தாக வேப்பம் பூக்கள்…
முன்வாசல் முற்றம் நிறைக்கும் .
ரத்தினங்களாய் மாம்பூக்கள்…
ரசனையின் கச்சேரி ,
ரீங்கரிக்கும் வண்டினங்கள் !
வாட்டும் கோடையில்தான்
வாச மலர்கள் பூத்துச்சொரியும் !
நிழலின் அருமைதனை ,
வெம்மையே புரிய வைக்கும் !
ஆதித்தனை வைத்தே தான்
ஆழி சூழ் உலகின் பயணம் !
அதைக்கொண்டே முன்னோரின்
சித்திரை புத்தாண்டு வரும் !
ஆலயம் தொழுதல் உண்டு…
அறுசுவை விருந்தும் உண்டு .
விருந்தின் தத்துவத்தில்…
வேப்பம்பூ பச்சடியும் ஒன்று !