முதல் மூன்று ஆழ்வார்கள் – பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார். ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்!

முதல் மூன்று ஆழ்வார்கள் – பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்.  ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்!
Published on

-ரேவதி பாலு

ஓவியம்: லலிதா

சைவ அடியவர்கள் அறுபத்து மூவர் என்பது போல, வைணவ அடியவர்கள் பன்னிருவர். இவர்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார் முதலியோர்.

இவர்களுள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் காலத்தால் முற்பட்டவர்கள் என்பதால் இவர்களுக்கு முதல் மூன்று ஆழ்வார்கள் என்று ஒரு சிறப்புப் பெயர் உண்டு.  உபதேச ரத்தின மணிமாலை என்னும் நூல் மணவாளமாமுனிகள் என்பவரால் இயற்றப் பட்டது.  இதில் இவர்களுடைய சிறப்புகள் கூறப்படுன்றன.  இவர்கள் மூவரும் ஒரு கால கட்டம் வரை ஒருவரையொருவர் நேரில் சந்திக்காத வர்கள்.  அதே போல் இவர்கள் மூவருமே ஐப்பசி மாதத்தில் அவதரித் தவர்கள்.  இவர்கள் அவதாரம் ஒரு மானுடத்தாயின் மூலமாக நிகழவில்லை.

துவாபர யுகத்தில் ஒரு ஸித்தார்த்தி வருடத்தில் ஐப்பசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் காஞ்சிபுரத்தில் திருவெஃகாவை அடுத்த பொய்கையில் பொற்றாமரையிலிருந்து திருமாலின் திருக்கரத்தில் உள்ள பாஞ்சஜன்யம் என்னும் சங்கின் அம்சமாய் பொய்கையாழ்வார் அவதரித்தார்.  அதற்கு மறுநாள் அவிட்ட நட்சத்திரத்தில் திருமாலின் கௌமோதகி என்னும் கதாயுதத்தின் அம்சமாய் திருக்கடல்மல்லையில் (மாமல்லபுரத்தில்)  ஒரு பொய்கையில் நீலோற்பவ மலரில் பூதத்தாழ்வார் அவதரித்தார்.

அதற்கும் அடுத்த நாள் சதய நட்சத்திரத்தில் பெருமாளின் நந்தகம் என்னும் வாளின் அம்சமாய் மயிலாப்பூரில் ஒரு கிணற்றில் செவ்வல்லி மலரில் பேயாழ்வார் அவதரித்தார்.  இவர்கள் மூவரும் சாதாரண மானிடர்களைப் போல ஒரு தாயின் வயிற்றில் ஜனிக்காததால் 'அயோநிஜர்கள்' எனப்படுகிறார்கள்.  தமக்கு எல்லாமே திருமால் என்று எப்பொழுதும் இறைத்தொண்டில் ஈடுபட்டனர்.

இவர்கள் வாழ்க்கை அலாதியாக இருந்தது.  ஒரு நாள் இருந்த ஊரில் மறுநாள் இல்லாது சுற்றிக் கொண்டே இருந்து திருமால் வழிபாடு செய்து கொண்டிருந்தார்கள்.  மூவரும் ஒரே வருடம், ஒரே மாதம் அடுத்தத்தடுத்த நாட்களில் பிறந்த போதிலும் ஒரு கால கட்டம் வரை ஒருவரையொருவர் சந்தித்ததில்லை.  அறிந்ததில்லை.

ஆனால் ஒரே மாதிரி இறை சிந்தனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த சமகால பக்தர்களை ஒரே நேரத்தில் ஆட்கொள்ள எம்பெருமானார் திருவுளம் கொண்டார். உலகம் உய்ய திவ்யப்பிரபந்தங்களை இயற்ற அவதரித்தவர்களாயிற்றே அந்த மூவரும்? முதலில் அவர்களை ஒருவரையொருவர் நேரில் சந்திக்க வைக்க வேண்டுமே?

ரு நாள் இம்மூவரும் திருக்கோவிலூரில் சந்திக்கும் நிலை உருவாயிற்று.  மாலை மயங்கும் நேரத்தில் முதலில் அவ்வூருக்கு வந்த பொய்கையாழ்வார்  மிருகண்டு முனிவரின் ஆசிரமத்தின் குறுகலான இடைகழியில் சயனித்துக் கொண்டிருந்தார்.  அப்போது பூதத்தாழ்வார் அவ்விடத்திற்கு வந்து தங்க இடம் கேட்க, "இவ்விடம் ஒருவர் படுக்கலாம்.  இருவர் இருக்கலாம்" என்று கூறி பொய்கையாழ்வார் அவரை அன்புடன் வரவேற்றார். இருவரும் ஒருவரையொருவர் வணங்கி திருமாலின் குணாதிசயங்களை மகிழ்வோடு பேசிக் கொண்டு உட்கார்ந்து இருந்தபோது அங்கே பேயாழ்வார் வந்து தங்க இடம் கேட்க, "இவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்" என்று கூறி பொய்கையாழ்வாரும், பூதத்தாழ்வரும் பேயாழ்வாரை வரவேற்றனர்.  மூவரும் ஒருவரையுருவர் வணங்கி அந்த இடைகழியிலேயே நெருக்கமாக நின்று கொண்டு எம்பெருமானின் குணங்களை ஒருவருக்கொருவர் சொல்லியும், கேட்டும் மகிழ்ந்திருந்தனர்.  அப்போது எம்பெருமானார் தன் திருவிளையாடலை அங்கே நிகழ்ச்தினார்.  திடீரென இருள் சூழ பெருமழை பொழிய ஆரம்பித்தது.  இந்த மகான்களோடு நெருக்கத்தை விரும்பிய எம்பெருமான் ஒரு பெரிய உருவமெடுத்து அங்கு வந்து இவர்களை நெருக்கத் தொடங்கினார்.  சட்டென உருவான நெருக்கத்திற்குக் காரணம் அறியாது மூவரும் திகைத்துப் போயினர். அவர்களை சூழ்ந்திருந்த இருட்டில் அவர்களுக்கு ஒன்றும் புலப்படவில்லை.

பொய்கையாழ்வார் இருளை ஓட்டிட விளக்கேற்ற விரும்பினார்.  இம்மண்ணுலகத்தையே அகலாகக் கொண்டு உலகை வளைத்துக் கொண்டு இருக்கும் கடலையே நெய்யாக வார்த்து, கதிரவனையே சுடராகக் கொளுத்தினார். பூதத்தாழ்வாரும் விளக்கேற்றினார். அவர் அன்பையே அகலாக்கி ஆர்வத்தையே நெய்யாக்கி தன் சிந்தையையே திரியாக அமைத்து ஞானத் திருவிளக்கை ஏற்றினார். இவ்விருவரும் ஏற்றிய விளக்குகளின் ஒளி இருளை விரட்ட,  அந்த வெளிச்சத்தில் பேயாழ்வார் எம்பெருமானின் திருவடிகளைக் கண்டார். அவர் கண்டு களித்து எடுத்துரைத்த பின்னரே பொய்கையாழ்வாரும், பூதத்தாழ்வாரும் அத்திருக்காட்சியைக் கண்டனர்.

ஓவியம்: லலிதா
ஓவியம்: லலிதா

அம்மூவரும் தாங்கள் கண்ட இறைக்கட்சியை மையமாக வைத்து மூன்று திருநூல்களை இயற்றினர். அவை ஒவ்வொன்றும் நூறு வெண்பாக்களால் ஆனது. அவற்றின் திருப்பெயர்கள் முறையே முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி என்பனவாகும்.  இவை நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் உட்பிரிவுகளுள் இயற்பா என்ற வகையில் அடங்குகின்றன. மஹாபலியிடம் மூன்றடி மண் கேட்ட திருமால், மூன்று ஆழ்வார்களை நெருக்கி முந்நூறு அந்தாதிகளை பெற்று விட்டான்.  பக்தி ரசம் சொட்டும் அந்த அந்தாதிகளை நேரில் கேட்பதற்கே பெருமாள் வந்து அவர்களோடு நெருக்கமாக நின்று கொண்டாராம்.

வைணவ திருப்பதிகளில் முதலாழ்வார் மூவர்க்கும் கோயில் உள்ளது. பூசைகள், திருவிழாக்கள் எல்லாம் ஒன்றாகவே செய்யப்படுகின்றன. மற்ற ஆழ்வார்களுக்கு முன்பே வந்து அவதரித்து அவர்களுக்கும் வழிகாட்டியாக திவ்யப் பிரபந்தங்களை முதன் முதலில் அருளிய பெருமையினால் இவர்கள் 'முதலாழ்வார்கள்' என்று பெயர் பெற்றனர்.  பன்னிரு ஆழ்வார்களில் முதலாழ்வார்கள் என்று போற்றப்படும், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர், "மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துத்தித்து நற்றமிழால் நூற் செய்து நாட்டை உய்த்த  பெருமானார்" என்னும் சிறப்பைப் பெற்றவர்கள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com