
நம் குடும்பத்தில் உள்ளவர் இப்புவியை விட்டு மறைந்து விட்டால், அவரின் மீதுள்ள பாசம் தொடர்ந்து நீடித்து நிலையாக எப்போதும் மனதில் கட்டுண்டு இருக்க, அனுஷா மேடத்தின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளலாம்.
– து.சேரன், ஆலங்குளம்
'ஒரு வார்த்தை' மிக அருமையான வார்த்தைகள் மேடம். மறைந்தவர்களிடம் உள்ள அன்பை வெளிப்படுத்த எத்தனையோ நல்ல காரியங்கள் அவர்கள் பெயரில் செய்யலாம். அதை விடுத்து, இதுபோன்ற விஷயங்கள் தவிர்க்கப்பட வேண்டியவையே.
சிறுமி யாழினி பற்றி படித்ததும் பெருமையாக இருந்தது. 'என் பிள்ளைக்கு தமிழே வராது' என்று பெருமை பேசும் பெற்றோர்களுக்கு இடையே, சுரேஷ் – அன்பு மாரி தம்பதி தன் மகளை இப்படி தமிழின் பிரதிநிதியாக மாற்றி இருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. அந்தக் குழந்தை மென்மேலும் சிவபுராணம் போன்ற கதைகளைச் சொல்லி, கடவுள் அருளுடன் சாதனை புரிய வாழ்த்துகிறேன்.
– உஷா முத்துராமன், திருநகர்
'ஒரு வார்த்தை' நெத்தியடி. 'சென்டிமென்ட் தேவைதான். அது சென்ஸிபிளாக இருக்க வேண்டும்' என்று எடுத்துரைத்தது அற்புதம். இதற்கு மாறாக. ஒரு அறக்கட்டளை ஆரம்பிக்கலாம் என்று அழகான ஐடியாவும் கொடுத்தது பாராட்டுக்குரியது. அருமையான தலையங்கம்.
– லக்ஷ்மி ஹேமமாலினி, சென்னை
'வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க' என்ற பக்கத்தில் வந்த செய்திகள் அருமை. 'பொட்டுக்கடலை வடை' எளிதாகச் செய்யலாம் என்று தெரிந்தவுடன் பண்டிகை காலங்களில் இதைச் செய்துப் பார்க்க வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது. காய்கறிகளின் மகத்துவம் என்ற கவிதை ரசிக்க வைத்தது. விடுகதைகள் ஒவ்வொன்றும் புதுமையாக இருந்தது. பாராட்டுக்கள்.
– நந்தினி கிருஷ்ணன், மதுரை
'மார்கழி மாதம் கோலாகல கோலம்' என்ற பக்கத்தைப் படித்தவுடன், 'மார்கழி வந்து விட்டது. வாசலில் கோலம் போடவேண்டும். மழையே சற்று ஒதுங்கிக்கொள்' என்று எண்ண வைத்த அருமையான பக்கம். 'அரிசி கோல மாவு தயாரிக்கும்போது அதனுடன் வடித்த கெட்டியான கஞ்சியை சேர்த்துக் கொண்டால் நாம் எப்படி இழுத்தாலும் அழகாக கோலம் போடலாம்' என்ற அருமையான டிப்ஸ் கொடுத்து, இந்த வருட மார்கழியை புதுமையான விதத்தில் கோலம் போடச் சொல்லி கொடுத்த, 'மங்கையர் மலருக்கு' பாராட்டுக்கள்.
– பிரகதா நவநீதன், மதுரை
சுசீலா அரவிந்தன் எழுதும், 'காதல் முகவரி' தொடர்கதை விறுவிறுப்பாக உள்ளது. மகள் சொன்னவற்றைக் கேட்டு, அவளை உற்றுப்பார்த்த நாட்டாமையின் கண்கள் கலங்கியதைப் பார்த்ததும் மனம் நெகிழ்ந்தது. அடுத்த வாரம் கோமதியிடம் என்ன சொல்லப்போகிறாரோ? என்று எதிர்பார்க்க வைத்த அருமையான தொடர். பாராட்டுக்கள்.
– வெ.முத்துராமகிருஷ்ணன், மதுரை
'கொட்டும் மழையில் கொட்டும் தேள்!' என்ற தலைப்பில் ஜி.எஸ்.எஸ். எழுதிய கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தேள் கடித்தால் உடனே என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். மேலும், தேளைப் பற்றிய தகவல்களை முதன்முதலாக மங்கையர் மலரில் படித்துத் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி.
– ஆர்.வித்யா, பள்ளிக்கரணை
'என் பள்ளி; என் குடும்பம்!' கருங்கல்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி மாலாவின் நேர்காணலை படித்தபோது, மனதிற்கு சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருந்தது. ஏனெனில், நானும் ஒரு ஆசிரியையாக இருப்பதால்தான். பள்ளியை தனது வீடாகவும், சக ஆசிரியர்களை உடன்பிறப்புகளாகவும், மாணவிகளை தன் குழந்தைகளாகவும் தலைமை ஆசிரியை மாலா பாவிப்பதால்தான் பள்ளியில் புதுமையையும், பள்ளி சமையல் கூடத்தில் சாதனையையும் (ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ்) நிகழ்த்த முடிந்தது. அவரது நல்ல எண்ணத்திற்காகவே நிச்சயம் அவரின் லட்சியம் நிறைவேறும். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
– எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி
மறைந்த மனிதர்களின் உருவச் சிலைகள் செய்யும் செலவில், அறக்கட்டளை ஏற்படுத்துவது, தேவைப்படுவோருக்கு உதவுவது போன்ற பயன்தரும் பணிகளைச் செய்யலாம் என்ற அருமையான யோசனையை, 'ஒரு வார்த்தை'யில் அனுஷா கூறியிருந்ததை மனதார வரவேற்கிறேன்.
– எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்
நன்றாகச் சொன்னீர்கள் மேடம். எத்தனையோ வேலைகள் இருக்கும் நேரத்தில், இந்தச் சிலைகளைப் பாதுகாக்க யார் வருவார்கள்? பழைய வெங்கல பாத்திரங்களையே நம்மால் பூசிப் பாதுகாக்க முடியாமல் கட்டி மேலே வைத்து விடுகிறோம். அவர்கள் மேல் அன்பிருந்தால் வருடத்திற்கு ஒன்றோ, இரண்டோ தடவைகள் அறக்கட்டளைக்கோ, முதியோர் இல்லத்துக்கோ பணமாகவோ, பொருளாகவோ கொடுக்கலாம் என்பது மிகச் சரியான கருத்து.
– வி.கலைமதி சிவகுரு, புன்னைநகர்