
காதலுக்கு கண் இல்லை,
கால் இருக்கிறது.
அதனால்தான்
கண்டவனோடு
ஓடச் சொல்கிறது.
………………………………………….
தவறாக தொட்டால்
தண்டனை நிச்சயம்.
மன்னிக்கத் தெரியாத
மின்சாரம்!
………………………………………….
ஆறறிவு
திருடனைப் பிடிக்க
அவசரமாய் ஓடியது
ஐந்தறிவு
மோப்ப நாய்.
………………………………………….
சாதி மதம் பேதம்
பார்க்கலாகாது என்று ஊருக்கு
உபதேசம் செய்தவர்
தன் பெண்ணிற்கு
வரன் தேடுகிறார்
கம்யூனிட்டி
மேட்ரிமோனியில்.
………………………………………….
கல்யாண பந்தியில்
இலையின்
ஓரமாய் அமரும்
ஊறுகாய்க்கு
கிடைக்கிறது
மது பார்களில்
கதாநாயகன் அந்தஸ்து.
-எஸ். பவானி, ஸ்ரீரங்கம்
………………………………………….
ஊரடங்கில்
மீண்டும் மூடப்படுகிறது
பள்ளிக்கூடங்கள்!
ஒர்க் ஃப்ரம்
சொர்க்கத்தில்
இருக்கிறார்
கல்வியின் கடவுள்
சரஸ்வதி!
………………………………………….
நதிகளில்
தொலைந்து
பிளாஸ்டிக்
பாட்டிலில்
நிரம்புகிறது
தண்ணீர்!
………………………………………….
கோயில் மரம்
கூடுதலாய்
பூக்கிறது
வேண்டுதல் சீட்டுகளில்
காதல்
பிரார்த்தனைகள்.
………………………………………….
கண்ணாடி முன்
நின்று நீ
உதட்டுச் சாயம்
பூசுகிறாய்!
பொறாமைப்படுகிறது
உன் வீட்டு
தொட்டி செடி
ரோஜா…
………………………………………….
சாரலுக்கு
ஜன்னல்
சாத்தியதால்
கோபம்…
வீட்டிற்குள்
வெள்ளமாய்
வருகிறது மழை.
………………………………………….
தன் மரணத்திற்கு
தானே ஆட்டம்
போடுகிறது
ஊதுபத்தி புகை
………………………………………….
நூறாண்டு மரத்திற்கு
கல்லறையாய்
புதிய பேருந்து நிறுத்தம்!
-நிலா, திருச்சி