ஒரு வார்த்தை!

ஒரு வார்த்தை!
Published on

காலேஜுக்கு என்னோட பஸ்ல வந்த பொண்ணு உமா. குனிஞ்ச
தலை நிமிராது; இருக்கிற இடம் தெரியாது. பயந்த சுபாவம் வேறு! அவள்லாம் லவ் பண்ணி, ஓடிப்(!) போவாள்னு நானே எதிர்ப்பார்க்காதபோது,
அவளுடைய ஏழைக் குடும்பம், குறிப்பாக பரம சாதுவான அவளது அப்பா தமிழாசிரியர் விஸ்வம் ஸாரின் நிலைமை என்னவாயிருக்கும்?

40 வருஷத்துக்கு முன் 'காதலே' கெட்ட வார்த்தை என்னும்போது,
உமாவின் செயலால் அவமானத் தழலில் பொசுங்கிப் போனார்
அவரது அப்பா. அப்புறம் அவள் அதே ஏரியாவில் நல்லபடிதான் வாழ்ந்தாள். சாதாரண மரக்கடை ஊழியனாக இருந்த அவளது காதலன், நாளடைவில் டிம்பர் டிப்போ அதிபராகி, உமாவையும் குழந்தைகளையும் செல்வாக்காக வாழ வைத்தபோதும், விஸ்வம் ஸார் அவளை ஏற்கவில்லை. காலில் விழுந்து கதறியபோதும், அவர் மன்னிக்கவில்லை.

"மூத்தப் பொண்ணு வேற ஜாதிக்காரனோட" என்ற கூர்மையான விமர்சனங்கள் அவரைக் கிழித்திருக்கக் கூடும். அதே வேதனையில் இதய நோயாளியாகி இறந்துபோனார்.

அவளைத் தாமும் மன்னிக்காது, தன் மனைவி மக்களும் மன்னிக்கக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டாராம்… உமாவின் ஒரே தம்பி சம்பத்தும் வைராக்யமாக, 'குடும்ப கெளரவம் கெடுத்தவள் முகத்தில் யாரும்
விழிக்கவே கூடாது' என்று கடுமையாக இருந்தான்… இருக்கிறான்!

அப்பா அகால மரணம் அடைந்ததும், சிறு பையன் என்னென்ன அவலங்களைச் சந்தித்தானோ? அடுத்த இரு அக்காக்களைக்
கட்டிக் கொடுக்கவும், தான் மணக்கவும், எத்தனை தலைகுனிவோ?

"பழைய கதையே பேசாதீங்க! அவ செத்துட்டா! எங்களையும் சாகடிச்சுட்டா!" என்று வெறுப்பாகப் பேசினான் சம்பத்.

"விடுப்பா சம்பத்! இன்னிக்கு நீ காரும் பங்களாவுமா பெங்களுர்ல செட்டில் ஆயிட்ட! அக்காங்க எல்லாரும் செளக்யமா இருக்காங்க! நீங்க எல்லாம் ரத்த சொந்தங்கள்… எதிரிகள் இல்லையே! இப்பவாவது பாசமா இருக்கலாமேப்பா!" என்றேன்.

சரிந்த குடும்பத்தை நிலை நிறுத்த அவன் பட்ட கஷ்டத்தைச் சொன்னதோடு, தனக்கு இதய வால்வ் ஆபரேஷன் ஆனதாகச் சொன்னான்! உமா கொடுத்த ஷாக்?!

"உமாவுக்கு ஆன்ஜியோ செய்ததாகக் கேள்விப்பட்டேன்பா… நீ உமாவை மன்னிச்சு ஏத்துக்கிட்டிருந்தா, வால்வ், ஆன்ஜியோ எதுவும் தேவையிருந்திருக்காது. நீ 'ப்ரோ டேடி' மலையாளப் படம் பாரு" என்றேன்.

……………………………

'ப்ரோ டேடி' – சமீபத்திய மலையாள ஹிட் படம்!

அப்பா – மோகன்லால் மகன் – ப்ரித்விராஜ், அவரது குடும்ப நண்பர்
லாலு அலெக்ஸின் மகள் கல்யாணி…

ப்ரித்விராஜுக்கும், கல்யாணிக்கும் கல்யாணம் செய்து வைக்கலாமேனு இரண்டு குடும்பத்தினரும் பிளான் போடும்போதே, அங்கே பெங்களூரில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ப்ரித்வியும் கல்யாணியும் பழகியதில், கல்யாணி கர்ப்பமாகி கூலாக வந்து நிற்கிறார்.

அதை அறிந்த மோகன்லால் – மீனா, இளஞ்ஜோடியை ஒரு வார்த்தை கடியணுமே! ஊஹும்! சவாலைச் சமாளிக்கிறார்கள்… மனதார மன்னித்து, கல்யாணம் கைகூட உதவுகிறார்கள்.

சந்தர்ப்பங்கள் வில்லனாக, லாலு அலெக்ஸ் விஷயத்தை ஏடாகூடமாகப் புரிந்துகொண்டு, "மன்னிக்கவே முடியாது!" 'தாட் பூட்' என குதிக்க, காமெடிப்படம்தான்… கடைசியில் ஒரு மெசேஜ் சொல்லி 'சுபம்' போட்டு முடிக்கிறார்கள்.

……………………………

பெற்ற தாய்தந்தையரை முட்டாளாக்கி, மூணு வருஷம் பழகி, கர்ப்பம் தரித்து… நிற்கும் இளஞ்ஜோடியை ஏற்றுக்கொள்ளும் 2022 குடும்பம் எங்கே?

காதலித்து மணந்ததையே பெரும் பாவச் செயலாக்கி, உமாவைக்
குற்ற உணர்ச்சியில் குமுற வைத்த குடும்பம் எங்கே?

காலம்தான் எவ்வளவு மாறிவிட்டது? பாவம்… விஸ்வம் ஸார்!

……………………………

யார் என்ன தீங்கு இழைத்தாலும், மன்னிக்காமல் வைராக்யம் வளர்ப்பதாலும், துவேஷம் காட்டுவதாலும் முதல் தீங்கு யாருக்குத் தெரியுமா? நம் இதயத்துக்குத்தானாம்!

மன்னித்தலும் மறத்தலும் மட்டுமே ஓர் ஆரோக்யமான, அன்பான குடும்பத்துக்கு வழி வகுக்குமாம்… மன்னிக்க அல்லது மறக்க மறுக்கும் இதயத்தில் வலி இருந்துகொண்டே இருப்பதால், அமைதி இழந்து, பலவகையான நோய்க்கு ஆளாகிறோம் என்கிறது விஞ்ஞானம்.

குடும்பத்திலோ, நட்பிலோ, குற்றமோ, துரோகமோ நேர்ந்தால்,
குற்ற உணர்வை ஏற்படுத்தாமல், குணமாக்கும் சொற்களைப் பேசி சுமூகமாக வேண்டும் என்கிறது இருதய மருத்துவம்!

கடந்து வர முடியாத கஷ்டமோ, மன்னிக்கவே முடியாத குற்றமோ எதுவாக இருந்தாலும், மன்னிப்போம்; மறப்போம்!

ஏனென்றால் இங்கு யாருமே 'பர்ஃபெக்ட்' இல்லை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com