
காலைக் கடிக்கும் செருப்பல்ல,
காவல் காக்கும் நாய் அல்ல. – அது என்ன?
-முள்
தலைக்கு மேலே மலரும்.
தண்டின் பக்கம் குவியும்.
வட்டமாக விரியும்.
சூரியன் கர்வம் குலைக்கும். – அது என்ன?
-குடை
கத்தியை எடுத்தேன்.
கண்டந் துண்டமாய் வெட்டினேன்.
துளி ரத்தமும் சிந்தவில்லை.
ஒருவருமே அழவில்லை. அவை என்ன?
-நகங்கள்
கடல்ல இருக்கும். தண்ணீர் இருக்காது;
நாடு இருக்கும். வீடு இருக்காது – அது என்ன?
-உலக வரைபடம்
– பி. தீபா, கிருஷ்ணகிரி
கட்டுப்பாடு இல்லாமல் வாழ்கிறவன் கெளரவம் இல்லாமல் செத்துப் போவான்.
பாராட்டுக்கு நாவின் ஈரம் மட்டுமே போதாது! மனதின் ஈரமும் வேண்டும்.
அணையப் போகிற தீபத்திற்கு ஓளி அதிகம். வறுமையில் நிலை காண்பவனே சிறந்த பணக்காரன்.
வாழ்வில் நம்பிக்கை என்பது நல்லதுதான். ஆனால், அதற்கும் எல்லை உண்டு.
கடன் இல்லாதவனே பணக்காரன். உடல் ஆரோக்கியம் உள்ளவனே செல்வந்தன்.
புத்திசாலிகள் எப்போதும் எண்ணிக்கையில் குறைவுதான்.
நேர்வழியில் அடைய முடியாததை ஒரு நாளும் தவறான வழியில் அடைந்து விட முடியாது.
வாக்குறுதி என்பது ஒருவகைக் கடன்தான்.
தெரியாது என்று உணர்வது அறிவை அடைவதற்கு வழி.
நமக்குத் தீமைச் செய்பவர்களுக்கும் நாம் நன்மையே செய்ய வேண்டும்.
இறைவனை அண்டியவர்களுக்கும் பிறவித் துன்பம் என்பதில்லை!
– என். குப்பம்மாள், கிருஷ்ணகிரி
வீட்டு சுற்றுப்புறத்தை வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரைத் தெளிக்க வேண்டும்.
தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். தொண்டை காயாமல் இருக்க வெந்நீர் குடிக்க வேண்டும்.
சூடான பாலில் மிளகு, மஞ்சள் சேர்த்து இரவில் அருந்த வேண்டும்.
தினமும் மாலையில் சுக்கு, கொத்துமல்லி கலந்த பானம் நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து பருக வேண்டும்.
வேப்பிலை, யூகலிப்டஸ் தைலம் (அ) நொச்சி இலை மற்றும் மஞ்சள் சேர்த்து தினமும் ஆவி பிடித்தல் வேண்டும்.
கசப்பு சுவையுள்ள சுண்டைக்காய், பாகற்காய், வேப்பம் பூ ரசம், தூதுவளை ரசம் செய்து சாப்பிடவும்.
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க நெல்லிக்காய், கொய்யாபழம், பப்பாளி, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற வைட்டமின் சி கலந்த பழங்களைத் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
எல்லோருமே தினமும் ஒரு ஐந்து நிமிடம் வேப்பிலை, மஞ்சள், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் மூக்கு, தொண்டையில் உள்ள கொரோனா வைரஸ் கிருமி அழிந்துவிடும்.
புரதச் சத்து உணவுகள் நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்களைக் கட்டமைக்கக் கூடியதாகும்.
புரதச் சத்து அதிகமுள்ள சைவ உணவுகள்- பச்சைப் பட்டாணி, பயறு, பருப்பு வகைகள், பீன்ஸ், சுண்டல்.
புரதச் சத்து அதிகமுள்ள அசைவ உணவுகள் – முட்டை, மீன், சிக்கன், மட்டன் ஆகியவை!
தோல் நீக்கிய இஞ்சி துண்டு, லவங்கம், துளசி இலை, கற்பூரவள்ளி, பெருஞ்சீரகம், ஓமம், சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் பத்து நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் நுரையீரல் செயல்பாடு சீராகும்.
வரமிளகாய், பச்சை மிளகாய்க்குப் பதில், நமது பாரம்பரிய உணவான மிளகைப் பயன்படுத்துவதால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும். சளி, இருமல், நெஞ்சுச் சளி, காய்ச்சல் மேலும் சில நோய்க் கிருமிகளை எதிர்த்து அழிக்கும் சக்தி மிளகிற்கு உள்ளது.
பூண்டு உடலில் ஏற்படும் வைரஸ், பாக்டீரியா தொற்றைச் சரி செய்யும் தன்மை கொண்டது.
சின்ன வெங்காயத்திலுள்ள செலீனியம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
வேப்பிலை, வெற்றிலை, தூதுவளை, கற்பூரவள்ளி, துளசி, முடக்கத்தான், முருங்கை போன்றவைகளை அடிக்கடி கஷாயமாகவோ, வெந்நீரில் போட்டு ஆவி பிடித்து பயன்படுத்த வேண்டும்.
– ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி