
******************
******************
ராகி
கேழ்வரகில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது. மேலும், இதில் பாலில் உள்ள கால்சியத்தை விட அதிக அளவில் கால்சியம் உள்ளது. கேழ்வரகை தினமும் நாம் உணவில் சேர்த்து கொண்டால் உடல் வலிமை பெறுவதுடன் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரித்து, உடல் சூட்டை தணிக்கிறது. மேலும், குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுத்தால் ஆரோக்கியமாக வளர்ச்சி அடைவர்கள்.
தினை
பாஸ்பரஸ், புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற பல ஊட்டச் சத்துக்கள் தினையில் உள்ளது. கண்பார்வை சிறப்பாக இருக்கவும், இதயத்தைப் பலப்படுத்தவும் உறுதுணையாக இருக்கிறது. குழந்தைப் பெற்ற பெண்களுக்கு தினையைக் கூழாக்கித் தந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்து அவர்களுக்கு அதிக பால் சுரக்க உதவுகிறது. மேலும் கபம் தொடர்பான நோய்கள் மற்றும் வாயுத்தொல்லையை போக்குகிறது.
சாமை
புரதம், நார்ச்சத்து, லைசின், அமினோ அமிலம், இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, ஈரப்பதம்,
தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து போன்ற சத்துக்கள் சாமையில் உள்ளது. மேலும், சாமை சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கிறது. செரிமானத்தை எளிதாக்குகிறது.
குதிரைவாலி
ஊட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இது உடலில் ஏற்படும் மலச்சிக்கலை தடுக்கவும், கொழுப்பின் அளவை குறைக்கவும், செரிமானத்தின் போது இரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்ல உணவாகப் பயன்படுகிறது. மேலும், உடலில் உள்ள செல்களைப் பாதுகாக்க ஆன்டிஆக்ஸிடன்ட் ஆக குதிரைவாலி செயல்படுகிறது.
கம்பு
வைட்டமின்கள் நிறைந்துள்ள கம்பு, உடலுக்கு தேவையான ஆற்றலையும் வலிமையையும் தருகிறது. மேலும் உடல் சோர்வை நீக்கி, புத்துணர்வு தருகின்றது, அஜீரணக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. நம் உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு கம்பில் உள்ளதால், இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
சோளம்
நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து போன்ற சத்துக்கள் சோளத்தில் உள்ளது. உடல் எடை அதிகரிக்க உதவுகிறது. செரிமான குறைபாடுகள், இரத்தசோகை, சர்க்கரை நோய் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. இது, குடலுக்கு சத்தை கொடுத்து குடல் புற்றுநோயை தடுக்கக்கூடியது. கண் குறைபாடுகளை சீர் செய்யும் பீட்டா கரோட்டின் இதில் அதிக அளவில் உள்ளது.
– கோவிந்தராஜன், சென்னை