கல்லாதது கடலளவு – 5

கல்லாதது கடலளவு – 5
Published on
-நாராயணி சுப்ரமணியன்
மெகலோடான்கள் இப்போதும் கடலில் உள்ளனவா?

மெகலோடான் என்பது அழிந்துவிட்ட சுறா இனம். இந்த இனத்தைச் சேர்ந்த சுறாக்கள்,  3.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டன. தற்போதைய கடல்களில் இவை காணப்படுவதில்லை.

"மெகலோடான்" என்ற சொல்லுக்கு "பெரிய பற்கள்" என்று பொருள். இந்த சுறா இனம் சராசரியாக 34 அடி நீளம் இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஒரு சில விஞ்ஞானிகளோ, இது 65 அடி வரை கூட அதிகபட்சம் வளர்ந்திருக்கலாம் என்கிறார்கள்! தொல்லுயிர் எச்சங்களாக (Fossils) மிஞ்சியிருக்கும் இதன் தாடை எலும்புகளைப் பார்த்தால், இவற்றின் கடிக்கும் ஆற்றல் மிகவும் அதிகம் என்று தெரிகிறது. இவ்வளவு பெரிய, சக்தி வாய்ந்த இந்த ஊன் உண்ணி இனம், மனித இனம் தோன்றுவதற்கு முன்பே அழிந்துவிட்டது என்பது நமக்குக் கொஞ்சம் ஆறுதல்தான்.

நவரத்தினங்களில் பவழம் என்று சொல்கிறார்களே…. அது ஒரு கனிமமா அல்லது தாவரமா?

ரண்டும் அல்ல, அது ஒரு விலங்கு இனம். சரியாக சொல்லப் போனால் பவள உயிரி என்ற ஒருவகைக் கடல் உயிரினத்தின் ஓடு. கோரலியம் என்ற ஒரு வகை பவள உயிரியின் மேல் ஓடு, கால்சியம் கார்பனேட்டால் ஆனது. இதில் கரோட்டினாய்டு எனப்படும் சிவப்பு மற்றும் ஆரஞ்சு வண்ண நிறமிகளும் இருப்பதால், இந்த விலங்கின் ஓடு சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த ஓட்டை எடுத்து சுத்தப்படுத்தி பளபளப்பாக மாற்றும்போது பவழம் கிடைக்கும்.

நவரத்தின வணிகத்துக்காக பவளப்பாறைகள் தொடர்ந்து சிதைக்கப்படுவது அந்த இனங்களுக்குப் பெரிய அச்சுறுத்தல்தான். கடல்வாழ் ஆய்வாளர்கள், செயற்கைப் பவழங்களைப் பயன்படுத்துவதையே ஊக்குவிக்கிறார்கள்.

ஜெல்லி மீன்கள் விஷமுள்ளவையா?

ந்தக் கேள்வியில் ஒரு சிறு திருத்தம் – ஒரு பழக்கத்துக்காக நாம் ஜெல்லி மீன் என்று சொல்லி வருகிறோம் என்றாலும், இவை மீன் இனத்தைச் சேர்ந்தவை அல்ல. கடல் ஜெல்லி (Sea jelly) என்பதுதான் சரியான பெயர். மீனவர்கள் இதை "சொறி" என்று அழைக்கிறார்கள்.

ஜெல்லிகளின் இனத்தைச் சேர்ந்த எல்லா விலங்குகளிலும் கொடுக்கு போன்ற அமைப்புகள் உண்டு. ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ளவும் இரை தேடவும் இந்த நச்சுக் கொடுக்குகள் உதவுகின்றன. ஆனால் எல்லா நச்சுக் கொடுக்குகளும் விஷமுள்ளவை என்று சொல்லிவிட முடியாது.ஜெல்லிகளின் நச்சு அளவு, நம்முடைய வயது, உடல் அமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து நமக்கான பாதிப்பு மாறுபடும்.

ஜெல்லிகளின் கொடுக்குகள் தீண்டினால் அரிப்பு, நமைச்சல் போன்ற உணர்வு, குடைச்சல், மரத்துப் போன உணர்வு, தடிப்புகள் ஆகியவை ஏற்படலாம். சில நேரம் அது தீவிரமான பாதிப்புகளையும் மரணத்தையும்கூட ஏற்படுத்தும்.

பொதுவாக ஜெல்லிகளிடமிருந்து விலகி எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தவறுதலாக ஜெல்லிகள் கொட்டிவிட்டால் ஒரு முதலுதவியாக அந்த இடத்தை சுத்தமான வெந்நீரால் கழுவவேண்டும். பிறகு உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். ஜெல்லிகள் கொட்டிவிட்டால் என்னென்ன கைவைத்தியங்கள் செய்யலாம் என்பதுபோன்ற பல அறிவுரைகள் சொல்லப்படுகின்றன, அவற்றை நம்பவேண்டாம். மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதே சிறந்தது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com