குட்டிச் சுட்டி கண்ணன் கதைகள்!

குட்டிச் சுட்டி கண்ணன் கதைகள்!
Published on
மொழியாக்கம் – மீனாட்சி பாலகணேஷ்
ஒவியங்கள்; லலிதா
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி – 19.08.2022
ஆற்றில் ஒரு கூத்து!

கோபிகைகள் ஏழெட்டுப்பேர் கூடி அதிகாலையில் ஆற்றில் நீராடச் செல்லுகின்றனர். நீராடிய பின் பாவை நோன்பு எனும் காத்யாயனி நோன்பைக் கடைப்பிடிக்கப் போகிறார்களாம். தனுர் மாதத்தில் கன்னிப் பெண்களால் நல்ல கணவனைப் பெறச் செய்யப்படும் நோன்பு இது.

நீராடப்போகும் இந்தப் பெண்களுக்கு கிருஷ்ணனின் விளையாட்டுப் புத்தி நன்றாகத் தெரியும். யாராவது இரண்டுபேர் ஆடைகளுக்குக் காவல் இருக்க வேண்டியதுதானே! அவர்களுக்கு கிருஷ்ணனுடன் வம்பிழுப்பது ஒரு மகிழ்ச்சியான விளையாட்டு; பொழுதுபோக்கு. தெரியாமலா செய்தார்கள்?

பாருங்கள் அவர்கள் வம்பிழுப்பதை!

கோபிகை 1: கிருஷ்ணா! புடவைகளைத் திருடியவன் நீ! வம்பு செய்யாமல் அவற்றைக் கொடுத்துவிடு. இல்லாவிட்டால் அரசனிடம் போய் உனது இந்த வேலையைப் பற்றிக் கூறி தண்டனை வாங்கி வைப்போம்! விலங்கு போட்டு உன்னை இழுத்துப்போவார்கள்.

கிருஷ்ணன்: என்னிடம் ஏன் வம்பிழுக்கிறீர்கள்? வாருங்கள் உடனே, அரசனிடம் போகலாம்; நானும் கூடவே வருகிறேன்!

(என்ன தைரியம்! அவர்களின் ஆடைகளைத் தான் பறித்துக் கொண்டு விட்டதால் நீரைவிட்டு அவர்கள் எப்படி வெளிவர முடியும் என்ற தைரியம்தான்!)

கோபிகை 2: கிருஷ்ணா! நாங்கள் மார்கழி மாதப் பாவை நோன்பு செய்கிறோம். இப்போது அதில் மனதைச் செலுத்தாமல் அழுகையும் சண்டையும் போட இயலாது கண்ணா! ஏனிப்படி வீம்பு செய்கிறாய்? பெரிய பாம்பினைக் கொண்டு வந்து உன்னைக் கடிக்கச் சொல்வோம் பார் கிருஷ்ணா!

கிருஷ்ணன்: அடடா! தாராளமாகக் கொண்டுவாருங்கள் கோபியரே! நான் பாம்பின்மேல் படுத்து உறங்குபவன் (அனந்த சயனன்). பாம்பின்மேல் நடனமாடியவன் (காளியன் தலைமேல் நடனமாடியவன்). உங்களுக்குத் துணிச்சலிருந்தால் பாம்பினைப் பிடித்துக்கொண்டு என் பக்கத்தில் வாருங்கள் பார்க்கலாமே!!

வம்பு செய்தவர்கள் வாய்மூடி விழிக்கிறார்கள்!

           கண்டபடி ஏசுகிறாய் கள்ளனே கண்ணா!

          கட்டியே பிடித்தடித்துக் கள்ளனே கண்ணா!

          கொண்டு போவோம் ராஜனிடன் கள்ளனே கண்ணா சேதி

          கூறியே விலங்கிடுவோம் கள்ளனே கண்ணா

          பாம்பினில் படுத்தவண்டீ கோபியே பெண்ணே பெரும்

          பாம்பின்மேல் நடித்தவண்டீ கோபியே பெண்ணே

          பாம்பினைப் பிடித்துக் கொண்டு கோபியே பெண்ணே எந்தன்

          பக்கமதில் வந்திடுவீர் கோபியே பெண்ணே!

(அந்தக் காலத்தில் வீடுகளில் அத்தைகளும் பாட்டிகளும் பாடிய இந்தப்பாடல் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி அம்மாளால் இயற்றப்பட்ட 'கோபிகா வஸ்திராபரணக் கும்மி' எனும் நூலில் உள்ளது!)

*****************************

ஒரு பிடி அவல்!

ங்கரி சிவராமனை வழியனுப்பிவிட்டு உள்ளே வந்தாள். நேராக சமையலறைக்குப் போய் இருக்கும் உணவுப்பொருட்களைக் கணக்கெடுத்தாள். ஒராழக்கு குறுணை அரிசி மட்டுமே இருந்தது. குழந்தைகள் இருவரும் பழைய சாதத்தில் சிறிது மோரை விட்டுக் கரைத்துக் குடித்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். சிவராமன் எதாவது கூலிவேலை கிடைத்து சிறிது பணம் சம்பாதித்துக் கொண்டுவந்தால்தான் இரவில் அடுப்பெரியும்! அவர்கள் வயிறும் கொஞ்சமாவது நிறையும்.

"கிருஷ்ணா, குருவாயூரப்பா! நீதான் ரட்சிக்கணம்," என மனமுருகி வேண்டினாள் அவள்.

சிந்தனையிலாழ்ந்திருந்தவளை வாசலில் கேட்ட பிஞ்சுக்குரல் உலுக்கி எழுப்பியது.

"பவதி பிக்ஷாந்தேஹி," வாசல் கதவைத் திறந்தால் ஒரு சின்னஞ்சிறு ஏழுவயதுச் சிறுவன். உபநயனம் முடிந்த கோலத்தில் பிக்ஷை கேட்டு வந்திருந்த பிஞ்சு. கன்னக் கதுப்புகளில் குழி. மோஹனப் புன்னகை. பிஞ்சுக் கைகளில் ஏந்திய பிட்சாபாத்திரம். அள்ளி அணைத்துக்கொள்ள ஆவல் பொங்கியது. ஆனால், அவள் கடமை பிட்சை அளிக்க வேண்டியதல்லவா?

உள்ளே ஓடோடிச் சென்றாள். ஒரு கணம், அந்த ஆழாக்குக் குறுணை இருந்த பாத்திரத்தைப் பார்த்தாள். பின் இரண்டாம் முறை யோசிக்காமல் அதனை அப்படியே கொண்டுவந்து சின்னஞ்சிறுவனின் பாத்திரத்தில் வாஞ்சைபொங்கக் கவிழ்த்தாள். புன்னகை மாறாமல் அந்தப் பிஞ்சும் அதனை வாங்கிக்கொண்டு என்னவோ தூக்க மாட்டாமல் தூக்கிக்கொண்டு சென்றது.

உள்ளே சென்ற சங்கரி அந்தப் பிஞ்சுக் குழந்தையின் தரிசனத்தில் தன் குட்டிக் கிருஷ்ணனைக் கண்ட ஆனந்தத்தில் பசியையும் மறந்து அமர்ந்திருந்தாள்.

நேரம் ஓடியதே தெரியவில்லை. சிவன்கோவில் மணி மதிய பூஜைக்காக பன்னிரண்டு மணிக்கு அடிக்க ஆரம்பித்ததும் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தவள், வழக்கம்போல அரிசிப்பாத்திரத்தைத் தேடிச் சென்றாள். இருந்த ஒரு ஆழாக்கு குறுணையை பிக்ஷை அளித்ததை மறந்துவிட்டாள் போலும்!

பாத்திரத்தைப் பார்த்தவள் ஆச்சரியத்தில், அதிர்ச்சியில் கண்கள் பிதுங்க நின்றாள். பாத்திரத்தில் வழிய வழிய அரிசி நிரம்பியிருந்தது.

"கிருஷ்ணா! கிருஷ்ணா!" தொண்டை கமறக் கண்களில் நீர் ஆறாக வழிய ஆரம்பித்தது.

*****************************

                                          வில்லினை எடடா!

நாள் முழுதும் நண்பர்களுடன் ஊரெங்கும் சுற்றி,  குழலூதி மகிழ்ந்து, புழுதியும் களைப்புமாக வீடு வந்த செல்லப்பிள்ளை கிருஷ்ணனை யசோதை உடல் அழுக்குப்போக, அலுப்புத்தீர, வாசனை மூலிகைப் பொடிகளால் தேய்த்துவிட்டு, வெந்நீரில் குளிப்பாட்டி, வயிறு நிரம்ப உணவூட்டி உறங்கப்பண்ண முயல்கிறாள். இன்றைக்கெல்லாம் இருந்தால் அவனுக்கு ஐந்து வயதுதான் நிரம்பியுள்ளது! அதற்குள் எவ்வளவு சுட்டி, சமர்த்து! அனைவர் கண்களும் பட்டு குழந்தைக்கு திருஷ்டிதான். நாளைக்காவது அவனுக்கு அந்திக்காப்புச் (திருஷ்டி கழித்தல்) செய்ய வேணுமென்று நினைத்துக்கொள்கிறாள் அன்னை!

இவனோ இப்போது தூங்காமல் படுத்துகிறான். அன்னையிடம், "அம்மா! எனக்கொரு கதை சொல்லேன்," என்கிறான். எந்தக் குழந்தைக்குத்தான் கதை கேட்க ஆசை இருக்காது? கிருஷ்ணன் மட்டும் இதற்கு விதிவிலக்கா? "கதை சொல்லு," என முரண்டு பிடிக்கும் தன் சுட்டிக் குட்டனுக்கு ஒரு கதை சொல்கிறாள் அன்னை யசோதை:

யசோதை: "ராமன் என்று ஒருவர் இருந்தாராம்."

கிருஷ்ணன்: "ஊம்"

யசோதை: "அவருக்கு சீதை என்று ஒரு மனைவி இருந்தாளாம்."

கிருஷ்ணன்: "ஊம்."

யசோதை: "ராமனுடைய தகப்பனார் ஒரு மகாராஜா; அவர் சொல்படி அவர்கள் இரண்டு பேரும் காட்டுக்குப் போனார்களாம்."

          கிருஷ்ணன்: "ஊம்."

யசோதை: "பஞ்சவடி என்னும் இடத்தில் வசித்தபோது ராவணன் என்ற ராக்ஷஸன் சீதையைத் தூக்கிக்கொண்டு போய் விட்டானாம்."

அவ்வளவுதான்! குழந்தை கிருஷ்ணனுக்குத் தன் முன் பிறப்பின் (ராம அவதாரத்தின்) நினைவு வந்து விடுகிறது. இந்தப் பிறவி மறந்தும் போய் விட்டதோ என்னமோ! கண்கள் சிவக்க எழுந்து பரபரப்போடு குழந்தை சொல்கிறான்:

கிருஷ்ணன்: "ஹே! சௌமித்ரே! (லக்ஷ்மணா), எங்கே என்னுடைய வில்? அதை எடு, என்னிடம் கொடு." ("நான் ராவணனை வதம் செய்ய வேண்டும்….")

                 'ராமனென்ற ஒருவனும் சீதையான மனையளும்

                   ராஜனான தந்தைசொல் ஏற்றுமே வனம்புகுந்து

              சேமமாகப் பஞ்சவடியைச் சேர்ந்திருந்த நாளிலே

                   சோரனான ஓரரக்கன் இராவணன் வஞ்சமாய்

          தாமரைசேர் மாதவளைத் தான்கவர்ந்தான்' எனத்தாய்

                   கூறிடும்சொற் கேட்டபோதில் கீதையின் நாயகன்

          'சௌமித்ரா லட்சுமணா வில்லையெடு' என்றெழுந்தான்        

          சீறியெழும் கிருஷ்ணன் சொல்செவ்வியதோர் காப்பன்றோ? 

(ஸ்ரீ கிருஷ்ண கர்ணாமிர்தத்தின் பாடல் மொழிபெயர்ப்பு!)
எத்தனை அழகானதொரு கற்பனை!

*****************************

       எண்ணமெல்லாம் கண்ணன்!

பொழுது புலர ஆரம்பித்துவிட்டது. கோகுலத்தில் கறவை மாடுகளின் 'ம்மா!' எனும் குரல்களும் குதித்தாடும் கன்றுகளும் எப்போதோ விழித்துக்கொண்டு விட்டன. புன்னை மரத்தின் மீது நடமாடியபடி சென்ற மயில் ஒன்று கர்ண கடூரமாக அகவிச் சென்றது. இன்னிசை மிழற்றியபடி வண்டுகள் மலரத் துவங்கியுள்ள மலர்களை மொய்க்க ஆரம்பித்துவிட்டன. அந்த மலர்களோ எப்போது தம்மை ஒரு பெண் வந்து இறைவனின் பூசைக்காகக் கொய்வாள் என்று துடியாகத் துடித்தபடி காத்துக்கொண்டிருக்கின்றன.

யசோதை தூங்கிக்கொண்டிருக்கும் தனது செல்லக்குழந்தையை எழுப்புகிறாள்.

"குழந்தாய்! கிருஷ்ணா, விழித்துக்கொள், பொழுது விடிந்துவிட்டது பார்! நூறாண்டுகள் நீ நலமாக வாழவேண்டும் என் செல்லமே!" என அவனை எழுப்புகிறாள்.

தாயை நோக்கி ஒரு மாயப் புன்னகையை வீசும் அந்த தாமோதரன் எழுந்து, தானும் ஒரு தாமரை மலர்போல அமர்ந்துகொள்கிறான். அன்னை கொடுக்கும் கற்கண்டு போட்டுக் காய்ச்சின பாலைக் குடிக்கிறான்.

வாசலில், "யசோதாம்மா," எனும் குரல். "யாரது?" என்கிறாள் யசோதை. அது சம்பா. நான்கு தெருக்கள் தள்ளி இருப்பவள். பசுக்களை மேய்த்துப் பால் கறந்து தயிர், மோர் வியாபாரம் செய்பவள். தினமும் காலையில் யசோதை வீட்டு வழியாகத்தான் போவாள். கிருஷ்ணனுக்கு ஒரு உருண்டை வெண்ணெய் கொடுத்துவிட்டுப் போனால்தான் அவளுக்கு நன்றாக வியாபாரம் ஆகுமாம்.

சின்னக் கிருஷ்ணன் கையில் பெரிய ஒரு வெண்ணெய் உருண்டையை வைத்தவள், ஆசைதீர அந்தக் குட்டனை வாரியணைத்து  திருஷ்டி கழித்து கன்னத்தில் விரல்களை முறித்துக் கொள்கிறாள்.

கிருஷ்ணனின் மாயையிலிருந்தும், அவன்மீது தான் கொண்ட அன்பிலிருந்தும் மீளாமல் "தயிரோ தயிர், தயிர் வாங்கலையோ? பால், வெண்ணெய் வேணுமோ?" என்று கூவ மறந்து, "கோவிந்தா, தாமோதரா, மாதவா," எனக் கூவிக்கொண்டே தெருக்களில் நடக்கிறாள் சம்பா.

புன்னகைக்கும் கிருஷ்ணனை இடுப்பில் வைத்தபடி, சம்பாவின் இந்தச் செயலைக் கண்ணுறும் யசோதை, "என் குட்டிக் கிருஷ்ணன் இவளுக்கு என்ன சொக்குப்பொடி போட்டான்," என வியந்தபடி தன்னைமறந்து நிற்கிறாள்.

                  விக்ரேது-காமா கில கோபகன்யா

                   முராரி-பாதார்ப்பித-சித்தவ்ருத்தி:

              தத்யாதிகம் மோஹவசா-தவோசத்-

           கோவிந்த தாமோதர மாதவேதி  (ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்- 2.55)

          கண்ணன் திருவடியில்தன் கருத்தினைத் தானிருத்தி

          வெண்ணெய் பாலெனவே  விற்கநினைப் பின்றியிடைப்

          பெண்ணொருத்தி மாதவாதா மோதராகோ விந்தாவெனக்கூவி

          கண்ணனையே விலைபேசி விற்பாள்போல் அலைகின்றாள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com