மங்கையர் மலர்  F.B. வாசகர்களின் சுதந்திர தின தகவல்கள்!

மங்கையர் மலர்  F.B. வாசகர்களின் சுதந்திர தின தகவல்கள்!
Published on

காந்திஜியின் தபால் தலைகள் அரிதாகப் போற்றப்படுகிறது. பத்து ரூபாய்  மதிப்பிலான தபால் தலைகள் பதினெட்டு  மட்டுமே  தற்போது  உள்ளதாக கூறப்படுகிறது. மகாத்மாவை கௌரவிக்கும் வகையில் இந்தியாவில் 48-க்கும் மேற்பட்ட  தபால் தலைகளும், 200 தபால் உறைகளும் சிறப்பு  இலச்சினையுடன் வெளியிடப்பட்டுள்ளன.

பாலாம்மா  என்ற  பெயருடைய பெண்மணிதான், நேரு தமிழகத்துக்கு
1930ல் சுற்றுப்பயணம் வந்தபோது அவருக்கு  கார் ஓட்டிய பெண்மணி. பாலாம்மா  நாட்டு விடுதலை இயக்கம், நாட்டு சேவை  எனத் தம்மை
பொதுச்சேவையில் அர்ப்பணித்துக்கொண்டவர். இவர் சத்தியமூர்த்தியின் சீடராக விளங்கியவர். சமுக சேவகி அம்புஜம்மாளின் தோழியும் ஆவார். நேருவின் காரோட்டியாக ஒரு பெண், தமிழ்ப் பெண் இருந்தார்  என்பது அபூர்வமான செய்தி.

சிறையில் அடைக்கப்பட்ட முதல் சுதந்திரப் பெண் போராளி!

ங்காளத்தில்  மித்னாபூர்  மாவட்டம் தாம்லுக்  காவல்  நிலையம் முன்பு  பிரிட்டிஷ்  போலீசாரால் சுடப்பட்ட  பெண்மணிதான் மாதங்கி ஹஸ்ரா. ஆறாயிரம் பேரைத் திரட்டிக்கொண்டு தாம்லுக்  காவல் நிலையத்தை தாக்கி, கைப்பற்றும் திட்டத்துடன்  சென்றார். தடை உத்தரவு  அமலில் உள்ளது. கலைந்து செல்லுமாறு  பிரிட்டிஷ்  போலீஸார்  சொன்னதையும் மீறி, முன்னேறிய  மாதங்கினியை  அந்த  அதிகாரிகள்  துப்பாக்கியால் சுட, அவர் வீரமரணம் அடைந்தார். இவரைப் போல பலரும் தங்களது இன்னுயிரை தாய்நாட்டு  சுதந்திரத்திற்கு  அர்ப்பணித்துள்ளனர்.

ஜகேந்தர் அமர்நாத் வங்கப் புரட்சியாளர். அவரது அத்தை  ஞானி பாலா தேவி. அசாத்திய நெஞ்சுரம்  கொண்ட பிராமண விதவைப் பெண். வங்காளத்தின்  சுதந்திரப்  போராளிகளின்  மறைவிடத்திற்கு  பொறுப்பேற்று  செயல்பட்டார். மிகுந்த  முயற்சியின் பேரில்  நானி  பாலாதேவியை  கைது செய்தது பிரிட்டிஷ்  அரசு.அவரை கடுமையாக  சித்திரவதை  செய்தபோதும், போராளிகளின்  இருப்பிடம் பற்றி  சொல்லவே இல்லை. 1818ம் ஆண்டு கொடும்சட்டத்தின்கீழ்  சிறையில்  அடைக்கப்பட்ட
முதல்  பெண்மணி  நானி பாலா தேவிதான்.
-மகாலட்சுமி  சுப்பிரமணியன் , காரைக்கால்

********************

என் தாய்நாடே என் உயிரே!

ணக்கம் என் தாய் மண்ணே
விண்முட்டும் உன்மாண்பே
காண்போர் கண்வியக்கும்
கவினழகுப் பெட்டகமே!
பழமையின் தாயகம்நீ!
பண்பாட்டின் உறைவிடம் நீ
அண்டைநாட்டிற்கும்
அடைக்கலம் தருவாய் நீ
சாதிகள் பலவாயினும்
அனைவர்க்கும் அபயம்நீ!
எத்தனைத் துயர்பட்டாய்
அத்தனையும்மீண்டு வந்தாய்
யாவரும் ஒருவரென்ற உன் மனம்
என்றும் ஒற்றுமை ஒளிர்ந்திட
யாவரும் உயர்ந்து வளர்ந்திட
இமயம் போல்உன்புகழ் ஓங்கிட
அவனியில் பாரதம் சிறந்திட
உன்பாதம் பணிந்து
வணங்கிட்டோம்
வந்தே மாதரம்!
வாழிய பாரதம்!
-சீதாசுவாமி, சென்னை

********************

மாதர் சங்கத்தில் சுதந்திர தின விழா

ங்கள் நெல்லை மாவட்டம், பெருமாள்புரம் மாதர் சங்கத்தில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக வருடம்தோறும்  சுதந்திர தினத்தன்று கொடியேற்றி, இனிப்பு வழங்கி அன்னதானம் செய்துவருகிறோம்.

அருகில் உள்ள பள்ளியில் எட்டு மணிக்கு கொடியேற்றி விட்டு, மாணவ, மாணவிகள் சங்கம் வந்துவிடுவார்கள். அவர்கள் வரிசையாக நிற்க, கொடிக்கம்பத்தில் தலைவி கொடியேற்றுவார்கள். கொடி வணக்கம் சொல்லியபின்  ஒரு மாணவன் உறுதிமொழி சொல்ல, மற்றவர்கள் சொல்வார்கள். பிறகு தாயின் மணிக்கொடி பாரீர் பாடலைப் பாடுவோம். மாணவர்களிடம், பொது அறிவு சம்பந்தமான கேள்விகள் கேட்டு, பரிசுகள் தருவோம். தேசீய கீதம் பாடிய பின்னர் ஆரஞ்சு வில்லையும், அன்னதானமும் பண்ணி, நிறைவு செய்வோம். மறக்காமல்,
மாலை ஐந்தரை மணிக்கு, கொடியை இறக்கி, அவிழ்த்து, சங்கத்தினுள் பத்திரப்படுத்தி விடுவோம்.
-என். கோமதி  நெல்லை-7 

********************

சுதந்திரம் காப்போம்!

ஹிம்சா முறையில்
ஆர்வத்துடன் சுதந்திரம் பெற்றாலும்
இன்றும் கொத்தடிமைகளாக
ஈவு இரக்கமற்றோரிடம்
உழன்று திரிந்து
ஊக்கம் குறைந்த
எடுப்பார் கைப்பிள்ளையிடும்
ஏவல்களுக்கு அடிபணியும் அடிமை விட்டு
ஐயமின்றி விழித்து எழுந்து
ஒடுக்குங்கள் அநீதியை பல கை
ஓங்கினால் வெற்றி எனக் கூறி
ஔவையின் வழி நின்று
எஃகினைப் போல உறுதியுடன் இருப்போம்
காந்தி வாங்கிக்
கொடுத்த சுதந்திரத்தை காப்போம்.
-உஷாமுத்துராமன், திருநகர்  

********************

சுதந்திர தினக் கவிதை!

விண்ணைத் தொட்டுப் பறக்கட்டும்
பாரதத்தின் கொடி!
விண்ணைத் தாண்டி ஒலிக்கட்டும்
வாழ்க பாரதம் என்னும் ஒலி!
-ப்ரஸன்னா வெங்கடேஷ், நவி மும்பை

********************

சுதந்திர தின சிறப்புகள்!

ந்தியா சுதந்திரம் பெற்ற 1947ம் ஆண்டு நாட்டுக்கான தேசியகீதம் இல்லை. பின்பு 1950ல் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜன கன மன தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் மகாத்மா காந்தி கல்கத்தாவில்
மத மோதல்களை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தார்.

இந்தியப் பிரதமராக செங்கோட்டையில் 17 முறை ஜவஹர்லால் நேரு தேசியக்கொடியை ஏற்றி வைத்துள்ளார்.

இந்தியா சுதந்திரம் பெற்றபோது 562 சுதேச சமஸ்தானங்களாக பிரிந்து இருந்தன. இவை அனைத்தையும் ஒன்று சேர்த்த சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் 'இரும்பு மனிதர்' என்று பெயர் பெற்றார்.

நாம் சுதந்திரம் பெற்ற அதே நாளில் தென் கொரியா, பஹ்ரைன், காங்கோ  ஆகிய நாடுகள்  தங்களுடைய சுதந்திரத் தினத்தைக் கொண்டாடுகின்றன.
நாம் சுதந்திரம் பெற்ற 1947ம் ஆண்டு பத்து கிராம் தங்கத்தின் விலை
88.62 காசுகள்.

நள்ளிரவில் சுதந்திரம் வாங்கினோம். அதனால்தான் விடியவில்லை என்று கவிஞர்கள் கவிதை எழுதுவதுண்டு. ஆங்கிலேயரின் கணக்குப்படி நள்ளிரவு 12 மணி என்பது அடுத்த நாள் உதயத்தைக் குறிக்கும்.  எனவே, சுதந்திரம் வழங்குவது என்று முடிவு செய்தபிறகு  மவுண்ட்பேட்டன் பிரபு  இந்தியாவுக்கு உடனடியாக சுதந்திரம் வழங்கினார்.
-அன்புக்கரசி பாலசுப்ரமணியன், சென்னை 

********************

 நாம் சுதந்திரம் பெற்றவுடன், டெல்லி செங்கோட்டையில் ஏற்றுவதற்கான  முதல் தேசியக்கொடியை, கைத்தறிக்குப் புகழ் பெற்ற குடியாத்தத்தில்தான் தயாரிக்கப்பட்டது. பல ஆண்டுகள் நகராட்சித்  தலைவராகவும், இந்துஸ்தான் பெபரிக்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திக்கொண்டிருந்தவரான ஆர். வெங்கடாசலம் என்பவரிடம், மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளரான பிங்கிலி

வெங்கையா வடிவமைத்த தேசியக்கொடியைத் தயாரிக்கும்  பணி ஒப்படைக்கப்பட்டது.  12 அடி அகலம், 18 அடி நீளத்தில் மொத்தம்
3 கொடிகள் தயாரிக்கப்பட்டன. அந்தக் கொடிகளில் ஒன்றுதான் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது.

மற்றொன்று  சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் ஏற்றப்பட்டது.

அன்று கோட்டையில் ஏற்றப்பட்ட கொடி, கோட்டை வளாகத்தில் உள்ள தொல்லியல் ஆய்வுத் துறை அருங்காட்சியத்தில் உள்ள இரண்டாம் தளத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. "ஜெய் ஹிந்த்"
-பானு பெரியதம்பி, சேலம்

********************

சுதந்திர தினக்கவிதை!

பாரினில் உயர் நாடு-நம்
பாரதத் திருநாடு.
அகிம்சை வழியில் ஓர் அறப்போராட்டம்.
முன்னூறு ஆண்டுகால
அன்னியரின் முற்றுகையை வெறுத்து
முற்றுப்புள்ளி  வைத்திட
முழுமையாய் நடத்தினர்
தீவிரப் போராட்டம்.
வந்தே மாதரம் என்ற கூக்குரல்
விண்ணை  முட்ட
இந்தியரின் குருதிகளில்
சுதந்திரத் தாகம் கொப்பளிக்க
கந்தலாடையோடு எரிமலையாய்க்
குமுறி வெடிப்பு.
வெள்ளையனே வெளியேறு என்று
உள்ளக் குமுறலோடு கூப்பாடு.
சுதந்திரப்போராட்ட வீரர்களின்
உயிர்த் தியாகத்தால்
சுதந்திரப்பயிருக்கான விதைகள்
தூவப்பட,
இந்திய வானில் நள்ளிரவில்
சுதந்திரக்காற்று  வீசியது.
இன்றும் எல்லையில் போர்க்காற்றை
உள்ளிழுத்து
விழி மூடாமல் சுதந்திரக்காற்றை
நமக்கு அனுப்பி வைத்திடும்
இந்திய இராணுவ வீரர்களால்
நாம் வாழ்கிறோம்,நிம்மதியாக!
வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்.
ஒற்றுமையாக வாழ்ந்திடுவோம்.
வாழ்க, பாரதம்!
-செ.கலைவாணி, மேட்டூர் அணை

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com