
l 'ஸ்மரணாத் அருணாசலம்' என்ற வாக்குக்கிணங்க, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் திருவண்ணாமலை.
l இம்மலை, கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் ரத்தின மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், தற்போதைய கலி யுகத்தில் கல் மலையாகவும் காட்சி தருகிறது. இந்தப் புனித மலையின் உயரம் 2,668 அடியாகும்.
l 'கடலில் மறைந்து போனதாகக் கருதப்படும் லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி திருவண்ணாமலை' என்று ஸ்ரீரமண மகரிஷியிடம் ஆசி பெற்ற மேனாட்டு ஆராய்ச்சியாளர் பால் பிரண்டன், 'Message From Arunachala' என்ற நூலில் ஆதாரங்களுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
l திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை சிறப்பிக்கும் விதத்தில் அகல் தீபமிட்ட சித்திர முத்திரையை 1997 டிசம்பர் 12ல் அஞ்சல் துறை வெளியிட்டது.
l திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் முதல் நாள் துர்கை, இரண்டாம் நாள் பிடாரியம்மன், மூன்றாம் நாள் விநாயகர் வழிபாடு நடைபெறுகிறது.
l தீப தரிசனத்திற்கு வருவோருக்கு அக்காலத்தில் சட்டிச் சோறு பிரசாதம் அளித்தனர். புளியங்கறி, மிளகு ரசம், உப்பு, நெய், தயிர், பாக்கு, வாழை இலையுடன் சோறு இடம் பெற்றிருக்கும்.
l அக்னிக்குரிய நாள் செவ்வாய். திருவண்ணாமலை அக்னி மலை. எனவே, இங்கு சிவபெருமானுக்கு செவ்வாய்க் கிழமையன்று விசேஷ வழிபாடு நடைபெறுகிறது.
l திருவண்ணாமலை ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் எனும் சிவபெருமானின் ஐந்து திருமுகங்களை நினைவூட்டும், 'பஞ்ச கிரியாக' காட்சி தருகிறது.
l மலையின் அமைப்பை கீழ்த்திசையிலிருந்து பார்த்தால் ஒன்றாகவும், மலையைச் சுற்றும் வழியில் இரண்டாகவும், மலையின் பின்னால் மேற்குத் திசையிலிருந்து பார்த்தால் மூன்றாகவும், மலையைச் சுற்றி முடிக்கும் தருவாயில் ஐந்து முகங்களுடனும் காணப்படும்.
l கீழ்ப்பக்கத்தில் இருக்கும் அர்க்க மலையில் தேவேந்திரனும், தென் பக்கத்திலிருக்கும் தெய்வமலையில் எமனும், மேற்குப் பக்க தண்டமலையில் குபேரனும், மற்ற நான்கு திக்குகளிலும் உள்ள மலைகளில் தேவர்களும் இருந்து சுவாமியை வணங்குவதாக ஐதீகம்.
l கௌதம ஆசிரமத்துக்கு எதிரில் மலை மூன்று பிரிவாகக் காட்சி தரும். இதற்கு, 'திரிமூர்த்தி தரிசனம்' என்று பெயர். இது மலை சுற்றுவோர் விழுந்து வணங்க வேண்டிய இடம். இந்த திரிமூர்த்தி தரிசனம் காணும் சாலையோரம் க்ஷோத்ரி சுவாமிகள் மண் கொண்டு தன்னை மூடி தவமிருந்த இடம் உள்ளது. இங்கு மட்டும் மண் கறுப்பு, சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.
l அண்ணாமலையார் கோயில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் 9 கோபுரங்களுடன் அமைந்துள்ளது. அவை : பெரிய கோபுரம், கிளி கோபுரம், அம்மணி அம்மாள் கோபுரம், வடக்கு கட்டை கோபுரம், மேலக் கோபுரம் (பேய்க் கோபுரம்), மேற்குக் கட்டை கோபுரம், திருமஞ்சன கோபுரம் (தெற்கு கோபுரம்), வல்லான கோபுரம், கிழக்கு கோபுரம் (11 நிலைகள், 216 அடி உயரம்).
l மூன்றாம் பிராகாரத்தில் உள்ள சிறிய மண்டபத்தில் அண்ணாமலையார் அருணயோகியாக நெற்றியில் திருநீறும், இடையில் கோவணமும் அணிந்து சூட்சும வடிவில் உறைகிறார். எனவே, இங்கு அமர்ந்து தியானம் செய்தால் ஆழ்ந்த அமைதி பெறலாம்.
l கோயில்களில் பொதுவாக, தெய்வத் திருமேனிகளை அஷ்டபந்தனம் கொண்டு பிரதிஷ்டை செய்வர். ஆனால், இங்கு சுவர்ண பந்தன முறை கையாளப்பட்டது.
l ஆலயத்துக்குள் கல்யாண மண்டபத்துக்கு எதிரே தல விருட்சமான மகிழ மரம் உள்ளது. இதன் அருகிலிருந்து கோயிலின் ஒன்பது கோபுரங்களையும் தரிசிக்கலாம்.
l திருவண்ணாமலை கோயிலிலுள்ள ஐந்து பிராகாரங்களுடன், மாடவீதி ஆறாவது பிராகாரமாகவும், கிரிவலப் பாதை ஏழாவது பிராகாரமாகவும் கொள்ளப்படுகிறது.
– அபர்ணா சுப்ரமணியம், சென்னை
———————
l திருவண்ணாமலை திருக்கோயில் சித்திரை வசந்த உத்ஸவக் காலத்தில் மன்மத தகனம் நடைபெறும். இது வேறெந்த சிவன் கோயிலிலும் நடைபெறாத அதிசயம்.
l கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாளில்தான் தேர்த் திருவிழா. மறுநாள் அண்ணாமலையார் குதிரை வாகனத்தில் தேரடி வருவார். அங்கு தர்ப்பைப் புல்லினால் ஆன தேர் வடிவத்தை பூஜை செய்து, எரிக்கும் சடங்கு செய்வார். பிறகுதான் வீதி உலா.
l கார்த்திகை தீபப் பெருவிழாவின் ஒன்பதாம் நாள் காலை சுவாமி, புருஷா மிருகம் எனப்படும் மனித முகமும் மிருக உடலும் கொண்ட அபூர்வ அமைப்பிலான வாகனத்தில் திருவீதி உலா வருவார்.
l மலையில் காணப்படும் அபூர்வ வகை மரங்களில் ஒன்று அழிஞ்சில். இந்த மரத்தின் பழம் பழுத்து கீழே உதிரும். இதில் எதுவும் அதிசயமில்லை. ஆனால், அப்பழத்தின் விதைகள் மட்டும் எப்படியோ மரத்தின் வேர்த் தண்டுப் பகுதியில் ஒட்டிக் கொள்ளும்.
l கார்த்திகை தீபக் கொப்பரையில் இருந்து கிடைக்கும் மை புனிதமானது. இது மார்கழி ஆருத்ரா திருவிழாவில் எழுந்தருளும் நடராஜப் பெருமானுக்கே முதலில் அணிவிக்கப் பெறும். பின்னர்தான் நமக்கு.
l திருவண்ணாமலைக்கு முக்திபுரி, தலேச்சுரம், சிவலோகம், ஞான நகரம், சுத்த நகரம், கௌரி நகரம், தென் கைலாயம், சோணாச்சலம் என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு.
l திருவண்ணாமலையில் மட்டும்தான்அம்மனுக்கு தீமிதி திருவிழா நடைபெறுகிறது. அதேபோல், மாணிக்கவாசகருக்குத் தனிக்கோயில் உள்ள தலமும் திருவண்ணாமலை மட்டுமே.
l திருவண்ணாமலை ஆலயத்தின் மூன்றாம் பிராகாரத்தில் அமைந்துள்ள தல விருட்சமாகிய மகிழ மரத்தின் கீழ் நின்று பார்த்தால் ஆலயத்தின் ஒன்பது கோபுரங்களையும் ஒருசேர தரிசிக்கலாம்.
l திருவண்ணாமலையை பக்தர்கள் வலம் வருவதுபோல், அத்தல இறைவனும் இறைவியும் தீபத் திருநாள் அன்றும், மாட்டுப் பொங்கல் அன்றும் மலையை வலம் வருவார்கள்.
l கார்த்திகை தீபத்தன்று ஜோதி தரிசனம் காண்பவர்கள் மகாதேவனை நேரில் தரிசித்த புண்ணியத்தைப் பெறுவார்கள். பஞ்ச மூர்த்திகளும் அன்று வலம் வருவர்.
l திருவண்ணாமலையை ஞாயிற்றுக்கிழமை வலம் வந்தால் – உடல் நலம் சிறக்கும், திங்கட்கிழமை வலம் வந்தால் – ஆற்றல் பெருகும், செவ்வாய்க்கிழமை வலம் வந்தால் – வறுமை நீங்கும், புதன்கிழமை வலம் வந்தால் – கல்வியில் சிறந்து விளங்கலாம், வியாழக்கிழமை வலம் வந்தால் – ஞானம் கைகூடும், வெள்ளியன்று கிரிவலம் வந்தால் – மகாவிஷ்ணுவின் அருள் கிட்டும், சனிக்கிழமை கிரிவலம் வலம் வர, நவக்கிரக தோஷங்கள் நீங்கும்.
l கிரிவலப் பாதையில் உள்ள பழனி ஆண்டவர் சன்னிதியிலிருந்து குரல் கொடுத்தால் அந்தக் குரல் எதிரொலிக்கும்.
l திருவண்ணாமலை மலை மீது ஏற்றப்படும் மகா தீபம் என்கிற வெண்கலக் கொப்பரை கி.பி.1745ஆம் ஆண்டு மைசூர் சமஸ்தான அமைச்சரான வெங்கடபதி ராயனால் வழங்கப்பட்டது. தீபத்துக்கு 200 கிலோ நெய், ஒரு டன் திரி பயன்படுத்தப்படுகிறது.
l திருவண்ணாமலையின் எட்டு திசைகளிலும் எட்டு லிங்கங்கள் அமைந்திருப்பது சிறப்பு. அவை : ஈசான்ய லிங்கம், இந்திர லிங்கம், குபேர லிங்கம், வருண லிங்கம், அக்னி லிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், எம லிங்கம். இந்த லிங்கங்களுக்கு அருகே அதன் பெயரிலேயே தீர்த்தங்களும் அமைந்துள்ளது.
l திருக்கார்த்திகை அன்று மாலை ஆறு மணிக்கு கோயிலின் தீப தரிசன மண்டபத்தில் அண்ணாமலையாருக்கு தீப ஆரத்தி காட்டி, அதை உயரே தூக்கிப் பிடிப்பர். அந்த தீபத்தை கண்டதும் மலையுச்சியில் தீபம் ஏற்றுவர். பிறகு அர்த்தநாரீஸ்வரர் கோயிலை வலம் வருவார்.
– ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி