
டீ.வி.யில ஒரு விளம்பரம் பார்த்திருப்பீங்க… நடிகர் பிரபு கண் கலங்கி விடை கொடுக்க, மணப்பெண்ணோ, 'ஸ்மைலி' சின்னம் காட்டி 'சிரிங்கப்பா!' என்று சைகை செய்வார்.
இந்த விளம்பரம் பார்த்துக்கொண்டிருந்த என் தோழி, கனகா அழுதே விட்டார்.
கனகாவுக்கு, 'அக்ஷயா' என்றொரு மகள். 'அபிநவ்' என்றொரு மகன். இருவருமே 'அம்மா… அம்மா…' என்று கனகாவின் காலையே சுற்றுச் சுற்றி வந்தவர்கள், அதாவது நேற்று வரை!
மகளுக்கு திடீரென்று நிச்சயம் ஆகி, திருமணமும் நடந்துவிட்டது.
அக்ஷயா தேனிலவில் இருக்க, கனகாவுக்கு இங்கே இருப்பே கொள்ளவில்லை.
"எப்படி இருக்க? மாப்பிள்ளை அன்பா இருக்காரா? என்ன சாப்பிட்ட? கால் வலி இப்ப எப்படி இருக்கு?" போன்ற நூறு கேள்விகள் கனகாவைக் குடைந்தெடுக்க… மகளோ, 'அம்மா, இங்கே டவர் ரேஞ்ச் கிடைக்கலை… அப்புறம் பேசறேன்… கூல்!' என்று மெசேஜ் போடுகிறாள்.
"இப்பல்லாம் அக்ஷயா பேச்சுல, 'எங்க வீடு, எங்க ஏரியா, அவருக்குப் பிடிக்காது' போன்ற வார்த்தைகள் வர்றபோதெல்லாம் கூடவே ஏதோ ஒரு வலி வருது" என்று மாய்ந்து போனாள் என் தோழி.
"ஹலோ கனகா… நாம்பளும் அதுபோன்ற ஷாக்கை நம்மைப் பெத்தவங்களுக்குக் கொடுத்தவங்கதானே? அதை மறந்துட்டீங்களே!" என்று தேற்றினேன்.
இது முடிந்த சில மாதங்களில் கனகாவின் மகன் அபிநவ்வும் வெளிநாட்டுக்குப் படிக்கப் போகவே, கனகா தரையிலிட்ட மீனாகத் துடித்துப்போனாள். தனிமையின் கொடுமை!
ஆரம்பத்தில், 'அம்மா, ஐ மிஸ் யுவர் காளான் குழம்பு!' என்று ஆரம்பத்தில் வீடியோ கால் செய்தவன், இப்போது வாரம் ஒருமுறை கனகா ஃபோன் செய்தாலும், தந்தி பாஷையில் பேச்சு முடிந்து போகிறதாம்!
"எப்பவும் பிஸி! கால் யூ லேட்டர்!" என்று சொல்லி விடுகிறானாம்…
இது நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்னைதான்!
பாலூட்டி வளர்த்த கிளிகள், கூட்டை விட்டுப் பறந்துபோனால், 'இமோஷனல் வாக்யூம்' ஒன்று நெஞ்சாங்கூட்டில் அடைத்துக்கொள்ளும். உண்மையே!
அதற்கு என்னதான் தீர்வு? 'அட்டாச்ட் டிடாச்மென்ட்' எனப்படும் ஒட்டியும் ஒட்டாமலும் வாழும் டெக்னிக்கை பயிற்சி செய்வதுதான்!
தாயும் பிள்ளையும் ஒன்றே ஆனாலும் வாயும் வயிறும் மட்டுமல்ல; மூளையும் எண்ண ஓட்டங்களும் வேறு. நமது விருப்பு – வெறுப்புகளும் அனுபவங்களும் அவர்களுக்குப் பொருந்தாது. ஒரு காலத்தில், அவர்களது முன்னுரிமை வட்டத்தில் நாம் முதலிடத்தில் இருந்தது உண்மைதான். இப்போது, 'ப்ரையாரிட்டி' மாறிவிட்டது என்பதைப் புரிந்துகொண்டால், வலி குறைந்துவிடும்.
நாம் கரிசனம் காட்டுவதாக நினைத்துக்கொண்டு, அவர்களை முடமாக்குகிறோம். அவர்களை, அவர்கள் வாழ்க்கையை வாழ விடுவதே இல்லை.
ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பது என்றால் மற்றவர்கள் மீது அக்கறை கொள்ளாமல் இருப்பது அல்ல; மாறாக உணர்ச்சி வசப்படாமல் இருப்பது சுமூகமான, மகிழ்ச்சியான வாழ்வுக்குத் துணை நிற்பது. அதேசமயம், அவர்கள் நம்மை நாடி வரும்போது, 'உனக்காக நாங்கள் இருக்கிறோம்' என்று அக்கறையுள்ள பெற்றோராக செயல்படுங்கள்.
ஆகவே, அன்பு நெஞ்சங்களே… நீங்கள் கொண்டாடும் எந்த உறவையும் பாசத்தில் கட்டிப் போடாமல், "போய் வா!" என்று அனுப்பி வையுங்கள். உண்மையான அன்பாக இருந்தால், அந்த ஆகர்ஷண சக்தி அவர்களை மீண்டும் உங்களிடமே கொண்டுவந்து சேர்க்கும்! அப்படி அவர்கள் திரும்பி வரும்வரை, செய்ய நமக்கு என்ன வேலைகளா இல்லை? ஆயிரம் இருக்கே! துரத்துவோம் நமது மறந்துவிட்ட கனவுகளை, பொழுதுபோக்குகளை… நட்புகளை… சிறப்பான செயல்களை! ஞாபகமிருக்கட்டும்… ஒட்டுங்க… ஆனா, ஒட்டாதீங்க!