ரப்பர் மங்கை

ரப்பர் மங்கை
Published on
பேட்டி : ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

சிவகாசி மாநகரில் யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தி வருபவர் ஞானவாணி. அவருக்கு வயது ஐம்பத்தி ஐந்து. இந்த வயதிலும் தனது உடலை பன்முகக் கோணங்களில் வளைத்து வளைத்து யோகா செய்து வருகிறார். இத்தனைக்கும் அவர் தனது பால்ய வயதில் இருந்து தொடர்ச்சியாக முறைப்படி யோகா கற்றுக்கொண்டவரும் இல்லை. 'பின்னர் எவ்விதம் இது சாத்தியமாயிற்று?' "வாழ்வில் ஏதேனும் சாதித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற பிடிவாதமான வைராக்கியம்தான்" என்கிறார் அவர். மேலும், "என் இல்லற வாழ்விலே ஏற்பட்ட ஒரு இடர்ப்பாடு என்னை அவ்விதமான வைராக்கியம் கொள்ளத் தூண்டியது" என்று மனம் திறந்து பேசுகிறார்.

ஞானவாணி
ஞானவாணி

திருமணம் ஆகிறது. இரண்டு ஆண் பிள்ளைகள் பிறக்கின்றன. திருமணமாகி பதினான்காவது ஆண்டில் கணவன்மனைவி இடையே மணமுறிவு ஏற்படுகிறது. தனது மகன்கள் இருவருடனும் இந்த வாழ்வினை எதிர்கொள்கிறார் ஞானவாணி. இடைப்பட்ட இந்த இருபது ஆண்டுகள்தான் அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையினைத் திருப்பிப் போட்ட ஆண்டுகளாகும். இன்றைக்கு அவர் இந்தியாவின் தேசிய அளவிலான யோகா போட்டிகளுக்கான தலைமை நடுவராகப் பணியாற்றி வருகிறார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு யோகா பயிற்சிக்கு எப்படி என்ட்ரி ஆனீர்கள்?
ண முறிவுக்குப் பின்னர் என் உடல் நலம் பேண வேண்டி, அகுபங்சர் பயிற்சியில் சேர்ந்தேன். அங்கு யோகா பயிற்சியும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் எனது உடல் நலம், மன நலம் இரண்டினையும் காத்துக்கொள்ள முழுமையாக யோகா பயின்றால் என்னவென்று மனதுக்குள் தோன்றியது. சிறு வயதில் பள்ளி நாட்களில் அவ்வப்போது யோகா வகுப்புகளுக்குச் சென்று வந்ததும் நினைவில் வந்தது. உடனே யோகா வகுப்புகளில் என்னை இணைத்துக்கொண்டேன்.

பின்னர் என்ன செய்தீர்கள்?
னி, யோகாதான் என் வாழ்க்கை என்று முடிவுக்கு வந்தேன். தொலைதூரக் கல்வியில் டிப்ளமோ இன் யோகா தேர்ச்சி பெற்றேன். எம்.எஸ்சி., யோகாவும் தேர்ச்சியடைந்தேன். சிவகாசியில் என் வீட்டு மாடியின் பெரிய அறைகளில் யோகா வகுப்புகள் நடத்தத் தொடங்கினேன். இன்று வரை யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறேன். இதுவரை என்னிடம் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் முறைப்படி யோகா பயிற்சி பெற்றுச் சென்றுள்ளனர். அவர்களில் பலரும் மற்றவர்களுக்கு யோகா பயிற்சி வகுப்புகள் மூலமாக யோகா கற்றுத் தந்து கொண்டிருக்கின்றனர். இது எனக்கு மிகுந்த பெருமிதத்தைத் தரும் விஷயம்.

யோகா பயிற்சி வகுப்புகளுக்குள்ளே மட்டும் முடங்கிப் போனீர்களா?
து எப்படி முடங்கி விட முடியும்? சிவகாசி மற்றும் சுற்றிலுமுள்ள கல்லூரிகளில் அவர்களது கெஸ்ட் லெக்சரராகச் சென்று கல்லூரி மாணவ, மாணவியர் மத்தியில் யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறேன். அது மட்டுமல்ல; கிராமப்புற மக்களிடையே யோகாவின் முக்கியத்துவம் குறித்தும் அதன் விழிப்புணர்வுக்காகவும் செயல்பட்டு வருகிறேன். பல கிராமங்களில் நேரடி முகாமிட்டு பொதுமக்களுக்கு முற்றிலும் இலவசமாகவே யோகா பயிற்சி தந்து வருகிறேன். சமீப காலங்களில் நகர மக்களிடையே யோகா மிக நன்றாகவே பரவி வந்துள்ளது. ஆனால், கிராமங்களில் அப்படியில்லை. அதனால் கிராமங்களில் இலவச யோகா பயிற்சி வகுப்புகள் நடத்த ஆர்வம் கொண்டு இயங்கி வருகிறேன். இந்த கொரோனா பேரிடருக்குப் பின் கிராம மக்களிடையே கூட யோகா நமக்குத் தேவை என்கிற விழிப்புணர்வு மிக அதிகமாகவே வேரூன்றியுள்ளது.

அது எப்படி?
கொரோனா மரணங்களில் பலருக்கும் நுரையீரல் ஆக்சிஜன் அளவு குறைந்துபோனதே அவர்களது மரணத்துக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக அமைந்து போனது. நுரையீரல் பாதுகாப்புக்கும் அதன் செயல்பாட்டுக்கும் மிக எளிய மூச்சுப் பயிற்சியும் யோகாவும் பக்கபலம் என்கிற அனுபவ உண்மை நம் மக்களிடையே ஒரு விழிப்புணர்வாக அப்போதுதான் வேரூன்றியது. தினசரி மூச்சுப் பயிற்சியும் யோகா பயிற்சிகளும் நம் நுரையீரலுக்கு வலு சேர்க்கக் கூடியவை.

யோகாவில் இதுவரை என்ன சாதித்துள்ளீர்கள்?
மாநில அளவிலான யோகா போட்டிகளில் 2010 – 2011ல் முதலிடம் பிடித்தேன். அதே ஆண்டில் இந்தியா முழுவதுமான போட்டியில் தேசிய அளவில் ஆறாம் இடத்துக்கு வந்திருந்தேன். மாநில அளவிலும் தேசிய அளவிலும் இதுவரை பல பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளேன். NYSF (NATIONAL YOGA SPORTS FEDERATION) என்பது மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு அமைப்பாகும். அதில் தேசிய அளவிலான யோகா போட்டிகளின் நடுவராக 2012ல் நான் தேர்வு செய்யப்பட்டேன். தேசிய அளவிலான யோகா போட்டிகளுக்கு நடுவராக இயங்கி வந்துள்ளேன். சமீப ஆண்டுகளில் தலைமை நடுவராக தேர்வாகி, அகில இந்திய யோகா போட்டிகளுக்கான தலைமை நடுவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

இந்த ஒன்றரை வருடக் கொரோனா காலத்தில் எவ்விதம் செயல்பட்டீர்கள்?
கொரோனா காலத்திலும் தேசிய அளவிலான யோகா போட்டிகள் எவ்வித தொய்வும் இல்லாமல் தொடர்ந்து நடைபெற்றன. போட்டியாளர்கள் ஆன்லைனில் பங்கு பெறுவார்கள். ஒரு போட்டிக்கு நான்கு நடுவர்கள். ஒரு தலைமை நடுவர். அவர்கள் பங்கு பெறுகையில் அவர்களின் யோகா திறன் டைமிங் போன்றவற்றை மிக உன்னிப்பாக கவனித்து, ஒரே நேரத்தில் தலைமை நடுவர் உட்பட, ஐந்து நடுவர்களும் மதிப்பெண்களை உடனுக்குடன் ஆன்லைனில் பதிவு செய்திடுவோம். இதுபோன்ற ஆன்லைன் யோகா போட்டிகளிலும் இப்போது வரை உற்சாகமாகப் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். இதற்கு அவர்களுக்கும் எங்களுக்கும் முன்னோடியாக இருந்து வந்தது ஆன்லைன் யோகா பயிற்சி வகுப்புகளே. அதனால் ஆன்லைன் யோகா போட்டித் தேர்வுகளில் இரு தரப்பினருக்கும் எவ்விதச் சிரமங்களும் இல்லை. எவ்விதத் தடைகளும் இல்லை.

இந்த ஐம்பத்தி ஐந்து வயதிலும் உடலைப் பலவித கோணங்களில் வளைத்து நெளித்து, ரப்பர் மங்கையாக யோகா செய்து வரும் சூட்சுமம்தான் என்ன?
சூட்சுமம் என்று எதுவுமே இல்லை. யோகா மீது இருக்கும் தீராத காதல்தான். அர்ப்பணிப்பு, தொடர் பயிற்சிகள், உடலையும் வயிறையும் நாம் சொன்னபடி கேட்கும் விதமாக வைத்திருப்பது, புதிது புதிதாக ஏதாவது செய்துகொண்டே இருக்க வேண்டும் என்கிற தொடர் முயற்சிகள், மனம் தளராமை இவைதான் என்னுடைய ஐம்பத்தி ஐந்தாவது வயதிலும் இந்த உடலை அந்த அளவுக்கு வளைத்து நெளித்து ஒடித்து பலவித கோணங்களில் என்னை யோகா ஆசனங்கள் செய்ய வைத்துக் கொண்டிருக்கின்றன. சிவகாசி லயன்ஸ் சங்கத்தினர் எனக்கு, 'சிவகாசியின் ரப்பர் மங்கை' என்கிற விருது கொடுத்துச் சிறப்பித்துள்ளனர்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com