வேண்டுதல்! 

வேண்டுதல்! 
Published on

கதை: வி.கே.லக்ஷ்மிநாராயணன்

படங்கள்: சேகர்

திடுப்பென்று எதிரில் முட்டிக் கொள்வது போல் கோமளா மாமி வந்து நிற்க, அப்படியே சடன் பிரேக் அடித்தாற் போல் நின்றாள் வைதேகி. அவள் கையில் மார்க்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறி பை காணப்பட்டது.

கோமளா மாமி கொஞ்சம் வித்தியாசமானவள்.   தாலி கட்டிய ஒரு வாரத்திற்குள் அவள் புருஷன் அவளை விட்டு ஓடிவிட்டான்.  அதனால் கொஞ்சம் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தாள்.   பேச்சுதான் ஒருமாதிரி இருக்கும்.  மற்றபடி அவளால் எந்தத் தொந்தரவும் கிடையாது.

மாமி மீது வைதேகிக்கு எப்போதும் ஒரு  ஒட்டுதல் உண்டு.  மற்றவர்களைப் போல் இல்லாமல் மாமி என்ன சொன்னாலும் மரியாதைக்கு  காது கொடுத்து கேட்பாள். அதற்கு பதிலோ இல்லை அபிப்ராயமோ சொல்வாள்.

"வைதேகி உனக்கு மங்களம் மாமியைத் தெரியுமோல்லியோ ?"

திடீரென மாமி இப்படி கேட்டதும் அந்த நபர் யாரென்று வைதேகிக்கு தெரியவில்லை.  ஞாபகத்திலும் வரவில்லை.  " யார் மாமி அது ?"  முறைத்துப் பார்த்த மாமி  "அதாண்டி சன்னதித் தெரு முதல் ஆத்துல இருக்கறவா. அவாளப் போய் தெரியாதுங்கறயே?"  கொஞ்சம் கோபத்துடன் கேட்டாள்.

அதற்கு மேல் தெரியாது என்று சொன்னால் மாமி ருத்ரதாண்டவம் ஆடுவாள். இடம் பொருள் ஏவல் பற்றியெல்லாம் மாமிக்கு அக்கரை கிடையாது.    " ஓஹோ!  அந்த மங்களம் மாமியா" என சமாளித்த வைதேகி "சொல்லுங்கோ அவாளுக்கு என்ன ?" மிகுந்த அக்கரை கொண்டது போல் விசாரிக்க  மாமியின் கோபம் அடங்கியது.

இயல்பு நிலைக்குத் திரும்பிய மாமி "அந்த மங்களம் மாமியோட இடது பக்கம் திடீர்னு விளங்கலயாம்.   ஆகாரம் சாப்டறது,  டாய்லெட் போறது எல்லாம் படுக்கையிலேயேதானாம்!  என்ன கொடுமையடி! " என சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.  இமைக்காமல் மாமியையே வைதேகி பார்த்துக் கொண்டிருக்க, மாமி தொடர்ந்தாள், "  வைதேகி அந்த மங்களம் மாமி நல்லபடியாக உடம்பு தேறி சகஜ நிலைக்குத் திரும்பணும்னு பகவானை வேண்டிக்கறயா?"

யாருக்கோ உடல் நிலை சரியில்லையென்று கிடந்து தவிக்கும் கோமளா மாமி மீது பரிவும்  அனுதாபமும் தோன்றியது. "நிச்சயமா வேண்டிக்கறன் மாமி!  ஆமா அந்த மங்களம் மாமிக்கு  இப்போ வயசென்ன இருக்கும் ?" என கேட்டாள் வைதேகி .

"போன வருஷம் செஞ்சுரி போட்டுட்டு இப்போ ப்ளஸ் ஒண்ணுல இருக்கா. ஆனாலுமென்ன ?  வெளி நாடுகள்ல நூத்தி பத்து வயசோட மனுஷா  இன்னும் தேக ஆரோக்யத்தோட இருக்காளாம்.  அந்த மாதிரி மங்களம் மாமி ஏன் இருக்கக்கூடாது. அதனாலதான் சொல்றேன்.  மறக்காமல் வேண்டிக்கோடி குழந்தே!" சொல்லிவிட்டு கோமளா மாமி திரும்பி நடந்தாள்.

வைதேகி இடத்தில் வேறு யாராவது இருந்தால் நிச்சயம் "கர்மம் கர்மம்" என்று தங்கள் தலையில் அடித்துக் கொண்டிருப்பர்.   ஆனால் வைதேகி அப்படி இல்லை. கோமளா மாமியின் இன்னஸண்ட் நிலை கண்டு  பச்சாத்தாபப்பட்டு வீட்டுக்குச் சென்றவள் மங்களம் மாமிக்காக மனம் உருகி  வேண்டிக் கொள்ளவும் செய்தாள்.

*******************

அந்தரங்கம்!

கதை: சகா

 "க்ரீம் பிஸ்கெட் சாப்பிடறியா காவ்யா?" நான் கேட்க அவள் உற்சாகமாகத் தலையாட்டினாள்.

பாக்கெட் பிரித்து அவளுக்கும் என் மகள் நிவேதாவுக்கும் தந்தேன். எல்லோரும் டிவியில் நிஞ்சா கட்டோரி பார்த்துக் கொண்டிருந்தோம். காவ்யா அடுத்த வீதியில் இருப்பவள். அவளும், என் மகள் நிவேதாவும் ஒரே பள்ளியில் மூன்றாவது படித்துக் கொண்டிருப்பவர்கள். ஒரே ஆட்டோவில் சென்று அதே ஆட்டோவில் திரும்பி வருகிறவர்கள். நல்ல தோழிகள்.

"எக்சாம் எப்போன்னு சொல்லிட்டாங்களா காவ்யா? " என்றேன்.

"இல்லை ஆன்ட்டி, அடுத்த வாரம் தான் தெரியும்!" என்றவள் ஏதோ சொல்ல முன்வந்து தயங்கினாள்.

"என்னாச்சும்மா சொல்லு," என்றேன்.

"வந்து, எங்க அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நேத்து ராத்திரி சரியான ஃபைட் ஆண்ட்டி. அம்மா, அப்பாவை பேட் வேர்ட்சிலேயே திட்டிட்டாங்க. பதிலுக்கு எங்கப்பா அம்மாவோட கையைப் பிடிச்சு முறுக்கி."

மூச்சிரைக்க சொல்ல முயற்சித்தவளை புன்னகையுடன் கை உயர்த்தித் தடுத்தேன்.

உடனே நிறுத்தி விட்டு புரியாமல் பார்த்தாள். "ஏன் ஆண்ட்டி.."

"அப்படியெல்லாம் பேசக் கூடாது காவ்யாக் குட்டி.."

"ம்..?"

"இது உன்னோட ஃபேமிலி விசயம்டா கண்ணுக்குட்டி. அடுத்தவங்க கிட்ட ஷேர் பண்றது தப்பும்மா. உங்க அம்மா, அப்பாவுக்கு இந்த மாதிரி நீ சொல்கிறது தெரிஞ்சா ரொம்பவும் சங்கடப்படுவாங்க. உனக்கு அவங்க நடந்துக்கிறது பிடிக்கலைன்னா அவங்ககிட்டேயே தைரியமா சொல்லு. ஆனா அடுத்தவங்ககிட்ட உன் அப்பா, அம்மாவைப் பத்தி, குடும்பத்தைப் பத்தியெல்லாம் எக்காரணம் கொண்டும் சொல்லாதே. அவங்களாக் கேட்டாலும் சொல்லாதே. அது ஆபத்தானது. புரியுதா செல்லம்." தலைமுடிகளை கோதிவிட்டவாறே அன்புக் குரலில் சொன்னேன்.

புரிந்து கொண்ட மாதிரி தலையாட்டினாள் அவள். "யாருமே எனக்கு இப்படி சொல்லித் தந்ததில்லை ஆன்ட்டி. நீங்க தான்…"

அவளை அணைத்தவாறே ஓரக்கண்ணால் மகள் நிவேதாவைப் பார்த்தேன். அவளுக்கும் நான் சொன்னது புரிந்த உணர்வு.

இனிமேல் என் வீட்டில் நடக்கும், அந்தரங்க விஷயங்களையும் தெரிந்தோ, தெரியாமலோ யாரிடமும் அவளும் பகிரமாட்டாள் என்பது தெரிய வர நிம்மதிப் பெருமூச்சு என்னிடம்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com