பெண்களுக்கெதிராகச் செயல்பட்டால் – பாய்கிறது புதிய ‘சோதனை’.

பெண்களுக்கெதிராகச் செயல்பட்டால் – பாய்கிறது புதிய ‘சோதனை’.
Published on
-ஜி.எஸ்.எஸ்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைச் செய்தவர்களை கடும் கண்காணிப்பில் வைத்திருக்க அறிமுகமாக உள்ளது ஒரு சட்டம்.

குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா 2022, இந்திய நாடாளு மன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளது.  பலத்த பாராட்டு, கடுமையான விமர்சனம் ஆகிய இரண்டையுமே சந்தித்து வருகிறது இந்த மசோதா.

இது முழுவதும் புதிய சட்டம் என்பதில்லை. 1920 உருவான சட்டத்தின்படி குற்றவாளிகளின் கைரேகைகள், பாத ரேகைகள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை சேகரிப்பது உண்டு.

ஆனால் சட்டமாகவிருக்கும் புதிய மசோதாவின்படி கூடுதலாக ரத்தம், தலைமுடி, கருவிழிப் படலம் ஆகியவற்றின் உயிரியல் மாதிரிகளையும்
DNA சோதனைக்காக அரசுத்துறை சேமித்து வைக்கலாம்.  குற்றவாளிகளின் கையெழுத்து மற்றும் பழக்கங்களையும் பதிவு செய்து ஆவணப் படுத்தலாம்.

அதென்ன DNA சோதனை என்கிறீர்களா? இருவரின் கண்கள் ஒரே மாதிரி இருக்கலாம்.  அவர்கள் தலைமுடியின் நிறம் ஒரே மாதிரி இருக்கலாம்.  முகங்கள் கூட ஒன்று போலவே இருக்கலாம்.  ஆனால் அவர்கள் DNA ஒரே மாதிரி இருக்காது.  (DNA என்பது மரபணு தொடர்பானது).  எனவே குற்றங்களை துல்லியமாக கண்டுபிடிக்க DNA சோதனை உதவுகிறது.  இந்த சோதனையை செய்ய ஒருவரது ரத்தம் அல்லது தலைமுடி அல்லது விந்தணு தேவைப்படும்.  குற்றம் நடைபெற்ற இடத்தில் காணப்படும் சாம்பிளில் உள்ள DNAவும் குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் ஒருவரின் DNAவும் மாறுபட்டால் அவர் குற்றவாளி அல்ல என்று தீர்மானிக்க முடியும்.  பொருந்தி விட்டால் அவர் குற்றவாளி என்ற கோணம் அதிக அளவில் உறுதி செய்யப்படும்.  குற்றவாளியின் நகத் துண்டுகள் கூட இது போன்ற சோதனைக்கு உட்படுத்தப்படலாம்.

1920 சட்டத்தின்படி குறைந்தது ஓராண்டு தண்டனை பெற்றவர் களுக்குத்தான் அவர்களது கைரேகை போன்றவை சேகரித்து வைத்துக்கொள்ளப்படும். ஆனால் புதிய சட்டத்தின்படி பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைச் செய்தவர்கள் மற்றும் 7 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றவர்களிடமிருந்து கூட இந்த உயிரியல் மாதிரிகள் சேகரிக்கப்படும்.  வலுக்கட்டாயமாகக் கூட அவர் களிடமிருந்து இவற்றைப் பெறலாம்!
(மேற்படி பிரிவில் அடங்காதவர்கள் தங்கள் உயிரியல் மாதிரிகளை எடுக்க அனுமதி மறுக்கலாம்.)

இப்படி சேகரிக்கப்பட்ட தரவுகளை தேசிய குற்ற ஆவண காப்பகம் சேமிக்கும்.  75 வருடங்கள் வரை இதை சேமிக்கும் உரிமை அதற்கு உண்டு.

இப்போதெல்லாம் குற்றங்களின் தன்மை மிகவும் சிக்கலானதாக மாறி வருகிறது.  எனவே தீவிரமான சட்டங்கள் தேவைப்படுகின்றன.  இதனால்தான் இந்த சட்டத்திருத்தம்.

ஆனால் புதிய சட்டம் அடிப்படை உரிமைகளுக்கு முரணானது என்று சிலர் கருதுகிறார்கள்.  குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களின் ரகசியத் தன்மையை உறுதி செய்யப்படுமா? என்பது இவர்கள் வாதம்.

Colin Pitchfork என்ற பிரிட்டனைச் சேர்ந்தவர் இந்த வகையில் குறிப்பிடத்தக்கவர்.  கற்பழிப்பு மற்றும் கொலை ஆகிய குற்றங்களை புரிந்தவர்.  DNA சோதனை மூலம் இந்தக் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட முதல்  குற்றவாளி என்று அவரைக் கூறலாம்.

சமூக சேவகி ஒருவரைத் திருமணம் செய்துகொண்ட பிட்ச்ஃபோர்க் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையானார்.  திருமணத்துக்கு முன்பே தனது நிர்வாணப் புகைப்படங்களை ஊடகங்களில்  வெளியிட்டதற்காக இவர் சிறைப்படுத்தப்பட்டு பின் மனவியல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.  பிறகு சிறையில் இருந்து வெளியாகி ஒரு வேலையில் சேர்ந்தார்.  அதாவது கேக் அலங்காரத்தை திறம்படச் செய்யும் வேலை.  தானே சொந்தமாக ஒரு கேக் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கலாம் என்றும் முடிவு செய்தார்.  பணியாற்றும் இடத்தில் அவர் சக பெண் தொழிலாளிகளுடன் அடிக்கடி பேசிக்கொண்டே இருப்பார் என்பது பின்னர் தெரியவந்தது.

1983 நவம்பர் 21 அன்று 15 வயதான லிண்டா தன் பணியை (ஒரு குழந்தையை சிறிது நேரம் பார்த்துக் கொள்ளும் வேலை – baby sitter) முடித்துவிட்டு தன் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.  ஆனால் அவர் வீடு திரும்பவில்லை.  அவள் பெற்றோரும் நண்பர்களும் பல இடங்களில் தேடியும் பலனில்லை.  அடுத்த நாள் காலை நடைபாதை ஒன்றில் கற்பழிக்கப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு இறந்துகிடந்தார்  லிண்டா.  அவர் உடலிலிருந்து எடுக்கப்பட்ட விந்தணுவை சோதனைக்கு அனுப்பியதில் கற்பழித்தவனின் ரத்தப் பிரிவு A என்று கண்டுபிடிக்கப்பட்டது.  அது அந்த நகரில் உள்ள 10 சதவிகித ஆண்களுக்கு மட்டுமே இருந்த ரத்தப் பிரிவு.  ஆனால் அதற்குமேல் காவல்துறையினரால் எதுவும் செய்ய முடியவில்லை.

அதற்கு மூன்று வருடங்கள் கழித்து 'டான் ஆஸ்வோர்த்' என்ற 15 வயது பெண் தன் தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தாள்.  இரவு ஒன்பதரை மணியாகியும் அவள் வீடு திரும்பாததால் காவல்துறையை அணுகினார்கள் பெற்றோர்கள்.  இரண்டு நாட்கள் கழித்து சாலையில் இருந்த நடைபாதை ஒன்றில்  அவளது பிணம் கண்டெடுக்கப்பட்டது.  மிருகத்தனமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார் அந்தப் பெண்.  அவள் உடலில் இருந்த விந்தணுக்களை சோதித்தபோது லிண்டாவையும் இவளையும் கொலை செய்தவன் ஒரே நபராக இருக்க வாய்ப்பு உண்டு என்று தெரிவிக்கப்பட்டது.

லிஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 'அலேக் ஜெப்ரீஸ்' என்பவர் DNA தொடர்பாக பல ஆராய்ச்சிகளைச் செய்தவர்.  அந்த விஞ்ஞானிக்கு மேற்பட்ட விந்தணுக்கள் அனுப்பப்பட்டன.  அந்த இளம் பெண்கள் இருவரையும் கொன்றவன் ஒருவன்தான் என்பதை அவர் தனது சோதனை ​மூலம் உறுதி செய்தார்.  ஆனால் தொடக்கத்தில் காவலர்கள் சந்தேகப்பட்ட ஒரு மனிதன் இவன் அல்ல என்பதையும் கூறினார்.  முதல் முறையாக DNA சோதனை மூலம் ஒரு நபர் குற்றவாளி அல்ல என்பது நிரூபிக்கப்பட்டது.

பின்னர் சந்தேகத்தின்பேரில் Colin Pitchfork
என்பவன் கைது செய்யப் பட்டான்.  தன்னைக் காவல்துறையினர் பிடித்து விடுவார்களோ
என்று பயமாக இருக்கிறது என்று அவன்
தன் நண்பனிடம் கூறியதை அருகிலிருந்த
ஒரு பெண்மணி கேட்டு காவல்துறையினரிடம் கூறியதுதான் அவன் கைது செய்யப்படக் காரணமாக இருந்தது.  வக்கிரமான
மனநிலை கொண்டவன் என்பதும் தெரியவந்தது.  ஆனால் தான் குற்றவாளி அல்ல என்று
அவன் சாதித்தான். DNA சோதனையின்
காரணமாக அவன் குற்றவாளி என்பது நி​ரூபணமாகி அவனுக்கும்
கடும் தண்டனை கிடைத்தது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com