
ஏப்ரல் எட்டாம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான, விக்ரம் பிரபு நடித்த 'டாணாக்காரன்' திரைப்படம் பார்த்தேன். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றியே இத்திரைப்படத்தை பார்க்கத் துவங்கினேன்…
டாணாக்காரன் என்றால் போலீஸ்காரனுக்கு மற்றொரு பெயராம்! சத்ரியன், மூன்று முகம், வேட்டையாடு விளையாடு, சிங்கம், தெறி, என அதிரடி cop படங்கள் போல இப்படம் இருக்கும் என்று நினைத்தால் நீங்க ஏமாற்றம் அடைவீர்கள். ஏனெனில் எந்த போலீஸ் பட சாயலுக்கும் பொருந்தாத கதை இது. போலீஸ் பயிற்சியின் போது நடைபெறும் சம்பவங்கள், பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களின் வாழ்க்கை, பயிற்சி எடுக்கும் சீனியர் போலீஸ் அதிகாரிகளின் நடவடிக்கை, அச்சுறுத்தல் என கதை நகருகிறது.
இயக்குனர் தமிழின் இயக்கத்தில் திரைப்படம் சற்றே மெதுவாக நகர்ந்தாலும், கதை மிகவும் ஆழமாக, நெஞ்சை உருக்கும் கதையாக இருப்பதால், படத்தின் ஓட்டத்தைப் பற்றி நாம் கவலைக் கொள்ள வேண்டியதில்லை.
நான் சமீப காலங்களில் பார்த்த முக்கால்வாசி தமிழ் படங்கள் கணிக்கக் கூடிய கதை, கண்ணை அயர்த்தும் எடிட்டிங், கதைக்கு சம்பந்தமே இல்லாத ஹீரோ மாஸ் காட்சிகள், அர்த்தமற்ற காதல் காட்சிகள் மற்றும் தேவையில்லாத பாடல்கள் என்று இருந்த நிலையில்… இப்படம் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
படத்தில் காதல் காட்சிகள் மிகவும் குறைவு. கதாநாயகனைத் தாண்டி படத்தில் நடிக்கும் மற்ற கதாப்பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. என்னை பெரிதாக ஈர்த்த கதாபாத்திரங்கள் என்றால் செல்லக்கண்ணாக நடித்திருக்கும் எம். எஸ். பாஸ்கர் மற்றும் இன்ஸ்பெக்டர் மதியாக நடித்திருக்கும் போஸ் வெங்கட். திரையில் சிறிது நேரமே வந்தாலும், அவர்களின் தாக்கம் நிச்சயம் இருந்தது.
அதே போல, கதையில் சில நீளமான காட்சிகள் கதாப்பாத்திரத்தின் குணத்தை மிகவும் அழகாக எடுத்துக் காட்டுகின்றன. உதாரணத்திற்கு படத்தில் சித்தரிக்கப்பட்ட ஒரு கடும் பயிற்சிக் காட்சியில், ஹீரோ அறிவு என்கிற விக்ரம் பிரபுவின் மனோவலிமை மிகவும் அபாரமாக இருந்தது.
இந்த திரைப்படத்தின் பல காட்சிகள் என் மனதில் ஆழப் பதிந்துள்ளது. ஹீரோவின் தந்தையாக வரும் லிவிங்ஸ்டன், ஐந்திற்கும் குறைவான நிமிடங்களே தோன்றினாலும், நம் மனதைத் தொட்டுவிடுகிறார். மொத்தத்தில் 'டாணாக்காரன்' தன்னம்பிக்கைத் தரக்கூடிய ஒரு அரிய படம்.
——————–———-
என்ன வாசகீஸ்! மங்கையர் மலரில் திரை விமர்சனம் பார்க்க ஆச்சரியமாக உள்ளதா? இந்த கொரோனா ஊரடங்கு காரணத்தால், பல திரைப்படங்கள் இணையத்தில், ஓடிடி தளத்தில் வெளியாகின்றன. இது பல குடும்பங்களுக்கு, குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது. இனி நாம் அண்ணாத்தே முதல் டாணாக்காரன் வரை அதிக செலவில்லாமல் இணையத்திலேயே பார்த்து விடலாம்.
நீங்கள் சமீபத்தில் பார்த்து ரசித்த, ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படங்களை, எம்மொழியானாலும், உங்கள் பாணியில் அலசி, mm@kalkiweekly.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பவும். தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் மங்கையர் மலர் ஆன்லைன் இதழில் வெளியாகும்.