
இறைவனை நாம் வழிபடும் போது கற்பனை செய்து வழிபடுவதைவிட பாவனை செய்து வழிபட்டால் இறைவனை அதிகமாக நெருங்க முடியும். உதாரணமாக களிமண்ணை பிள்ளையாராய் பிடித்து வணங்கும் போது, களிமண் பூஜையறையில் சிம்மாசனம் இட்டுக்கொள்கிறது. அது மண்ணாய் இருக்கும் போது யாரும் திரும்பி பார்பார் கிடையாது. பிள்ளையாராய் அமர்ந்து இருக்கும் அந்த உருவ பாவனை நம்மை பக்தி நிலைக்கு கொண்டு செல்கிறது. இறைவனிடத்தில் நெருங்கச் செய்கிறது.
கற்பனையில் மனச்சிதறல் இருக்கும் பாவனையில் மனம் ஒருமைப்படும். இறைவனை வழிபடும் போது மனம், மொழி, மெய் என்ற மூன்று நிலையில் வழிபடுவது சிறப்பு.
இறைவனுக்கு பூ சூட்டி, கண்களை மூடியபடி, கைகுவித்து வணங்குதல் இவையாவும் மெய்வழி வழிபாடு . இறைவன் நாமத்தை ஜெபித்தல், திருமுறை ஓதுதல், பக்தி பாமாலை பாடுதல் இவையாவும் மொழிவழி வழிபாடு .
பாவனை வழிபாடே மனதின் வழிபாடு. சுவாமி படத்தை , சிவகாசி காலண்டர் என்று நினைக்காமல் சுவாமியாக பார்ப்பது தான் பாவனை. சிலைகளை இது வெள்ளியா? வெண்கலமா? பித்தளையா? என்று ஆராய்ச்சி செய்யாமல் சதையும் இரத்தமும் உள்ள தெய்வஙாகளாக பாவிக்கும் வழிபாடே மனவழிபாடு.
மனோ பாவமே உருவ வழிபாட்டின் ஆணிவேர்
பாவனையே உருவ வழிபாட்டின் ஜீவ சக்தி.
-ஜானகி பரந்தாமன், கோவை
————-
ஊதுபத்தி ஏற்றுவது ஈஸ்வரனை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக என்று நம் வீட்டிலுள்ள பெரியவர்கள் கூறியிருக்க நாம் கேட்டிருப்போம். அதனுள் மறைந்திருக்கும் உண்மையான பொருளை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
ஊதுபத்தியைக் கொளுத்தி வைத்தவுடன், அதனிலிருந்து புறப்படும் மணம் நம்மை சூழ்ந்துவிடும். அது புகைந்து சாம்பலானாலும், தன்னைச் சுற்றியிருப்பவர்களைத் தன் மணத்தால் மகிழ்விக்கின்றது. இது ஒரு தியாக மனப்பான்மையின் வெளிப்பாடு.
ஓர் உண்மையான இறைத் தொண்டன், தன்னுடைய சுயநல குணங்களை எல்லாம் விட்டொழிக்கவேண்டும். பிறருக்காக நன்மை செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.
இதுபோன்ற குணத்தை உடையவர்கள் தான் ஈஸ்வரனுக்கு மகிழ்ச்சியைத் தருபவர்கள்.
-பொ.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி
————-